பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்தவர் எரிகா ராபின் (Erica Robin). 24 வயதாகும் இவர், வணிகவியல் மற்றும் வணிக நிர்வாக படிப்பை முடித்துள்ளார். கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த இவர், மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு, கடந்த 2020-ம் ஆண்டு மாடலிங் செய்ய தொடங்கினார். 2020-ல் DIVA என்ற பாகிஸ்தானை சேர்ந்த இதழில் முன்பக்கத்தில் வந்து பிரபலமானார்.
தொடர்ந்து விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் நடித்து வந்த இவர், தொடர்ந்து அழகி போட்டிக்கு தயாரானார். இந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாலத்தீவில் நடைபெற்ற 'மிஸ் யுனிவர்ஸ் பாகிஸ்தான்' போட்டியில் கலந்துகொண்டு வெற்றியாளரானார். இதனை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து வரும் நவம்பரில் எல் சால்வடாரில் நடக்கவிருக்கும் சர்வதேச பிரபஞ்ச அழகிப் போட்டியில் (Miss Universe) பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்த எண்ணி, அதற்காக தன்னை தயார் படுத்தி வருகிறார். இந்த சூழலில் தற்போது எரிகாவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த சில கட்சிகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.
மத அறிஞரான டக்கி உஸ்மானி என்பவர், அழகிப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ள எரிகா ரபினை கடுமையாக விமர்சித்துள்ளார். அதோடு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது பாக். அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து இஸ்லாமி கட்சியின் பாகிஸ்தான் செனட்டர் முஷ்டாக் அகமது கான், “பாகிஸ்தானில் இந்த அழகுப் போட்டியை நடத்துபவர்கள் யார்? இந்த வெட்கக்கேடான செயலைச் செய்வது யார்?”. பாகிஸ்தானின் செனட்டரின் இந்த கோரிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் அன்வர் உல்-ஹக் கக்கர், நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக விசாரணையைத் தொடங்குமாறு அந்நாட்டின் உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த செயல் மிகவும் வெட்கக்கேடு என்று தெரிவித்துள்ள அன்வர், இது பாகிஸ்தான் பெண்களை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மிஸ் யுனிவர்ஸில் கலந்துகொள்ளவுள்ள எரிகாவுக்கு இணையவாசிகள் பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். எரிகாவுக்கு ஒருபுறம் எதிர்ப்பு இருந்தாலும், மறுபுறம் வாழ்த்துகளும், வரவேற்புகளும் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த நிகழ்வு குறித்து மாடல் அழகி எரிகா ராபின் தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். "சர்வதேச அழகி போட்டியில் முதல்முறையாக பாகிஸ்தானை பிரதிநித்துவப்படுத்துவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இதற்கு எங்கிருந்து எதிர்ப்பு வருகிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆண்கள் நிறைந்த ஒரு அறையில் நான் நீச்சலுடை அணிந்து அணிவகுத்துச் செல்வேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பாகிஸ்தானில் இருந்து முதல் போட்டியாளராக வருவதால், எனக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. உலகளாவிய ஒரு பொது மேடையில் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் நான் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை. இது போன்ற முயற்சிகளை எதிர்ப்பவர்களை அடக்கும் முயற்சியில் நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.