அமெரிக்காவில் உள்ள மசசூசெட்ஸ் (Massachusetts) என்ற மாகாணத்தைச் சேர்ந்தவர் ரோரீ (வயது 55). இவர் தங்கியுள்ள குடியிருப்பில் பலருக்கும் பல இடையூறுகளை செய்து வந்துள்ளார். இதன் காரணமாக குடியிருப்பு உரிமையாளருக்கு பலர் புகார் அளித்துள்ளனர்.
தொடர் புகார்கள் காரணமாக ரோரீயை அவர் தங்கியிருக்கும் வீட்டிலிருந்து காலி செய்யும் படி வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். பல முறை இது போல நேரில் சென்று கூறிய நிலையில் வீட்டை காலி செய்ய ரோரீ மறுத்துள்ளார். மேலும் வீட்டின் உரிமையாளரிடம் தகராறிலும் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கரும் அதிருப்தி அடைந்த வீட்டின் உரிமையாளர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலிஸார் ரோரீ தங்கியிருந்த வீட்டுக்கு விசாரணைக்கு சென்றுள்ளனர். அப்போது காரில் வந்து இறங்கிய ரோரீயை போலிஸார் இடைமறித்துள்ளனர்.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ரோரீ தான் வைத்திருந்த தேனீ கூடுகளை திறந்துவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தேனீக்கள் போலிஸாரை தாக்கத்தொடங்க அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். மேலும் இந்த தேனீக்களால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ரோரீ போலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.