உலகம்

உலகச்செய்திகள்: தைவானில் அத்துமீறும் சீனா.. மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் உக்ரைன்.. எதற்கு தெரியுமா?

டாப் 5 உலகச் செய்திகள் குறித்த தொகுப்பு.

உலகச்செய்திகள்: தைவானில் அத்துமீறும் சீனா.. மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் உக்ரைன்.. எதற்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1.இந்தியா-இஸ்ரேல் இடையே தூதரக ரீதியான உறவு ஏற்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தியா வர உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் இணைய வழி ஒத்துழைப்பு, விவசாயம் மற்றும் பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில் அவரது இந்திய வருகை இருக்கும் என்று பென்னட்டின் வெளிநாட்டு பிரிவு ஊடக ஆலோசகர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபரில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இரு தலைவர்களும் முதன்முதலில் சந்தித்தபோது பிரதமர் பென்னட்டை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

2.உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 25-வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில், உக்ரைனில் மார்ச் 18ஆம் தேதி வரை குறைந்தது 847 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 1,399 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டில் பெரிய கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பல நகரங்களில் நிகழ்ந்த உயிரிழப்புகளை சரிபார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

3.உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு முடிந்தாலும் உக்ரைன் மண்ணில் இருக்கும் ரஷிய படைகளின் ஆயுத கழிவுகளை அகற்ற பல ஆண்டுகள் ஆகலாம் எனவும், இதற்கு மேற்கத்திய நாடுகளின் உதவி நிச்சயம் தேவைப்படும் எனவும் உக்ரைன் உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி கூறினார்.இதுபற்றி அவர் கூறுகையில், “உக்ரைன் மீது ஏராளமான குண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் வீசப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பகுதி வெடிக்கவில்லை. அவை இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. அவற்றை அகற்ற மாதங்கள் அல்ல, வருடங்கள் ஆகும்” என்றார்.

4.இலங்கையில் காகிதம், மை இறக்குமதி செய்ய தேவையான டாலர் கையிருப்பு இல்லாததால், பள்ளி மாணவர்களின் தவணைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.இலங்கையில் திங்கட்கிழமை தொடங்க இருந்த தவணை தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை நாட்டில் உள்ள 4.5 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

5.தைவான் நாட்டில் தொடர்ந்து சீன ராணுவ விமானங்கள் நுழைந்து அத்துமீறி வருகின்றன. ஏற்கனவே இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ஒரே நாளில் தைவானின் எல்லைக்குள் ஜனவரி 23 அன்று 39 சீன விமானங்கள் ஊடுருவி உள்ளன.இந்த ஊடுருவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் குண்டுவீச்சு விமானம் நேற்று மீண்டும் தங்கள் நாட்டின் வான்வெளியில் நுழைந்ததாக தைவான் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories