உலகம்

“மருத்துவ உதவி பொருட்களில் எழுதியிருந்த வாசகம்...” : கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர என்ன செய்தது சீனா?

முதன்முதலாக கொரோனாவை எதிர்கொண்ட சீன அரசு, கொரோனாவைத் தடுக்க என்ன செய்தது என்பதை விளக்குகிறது இந்தத் தொகுப்பு..

“மருத்துவ உதவி பொருட்களில் எழுதியிருந்த வாசகம்...” : கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர என்ன செய்தது சீனா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

உலகம் முழுக்க இன்று நாம் கேட்கும் ஒரே வார்த்தை, கொரோனா. இந்த வருட துவக்கத்தில் உலகுக்கு பரவத் தொடங்கி நம் அனைவரும் உச்சரிக்கும் வார்த்தையாக இன்று கொரோனா மாறிவிட்டது. மக்களின் வாழ்க்கை பாதிப்படைந்த சூழலில் மக்களுக்கான அரசுகளாக பதவியேறியவை செய்யும் காரியங்களை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. பல நாடுகளின் அரசுகள் தங்கள் நாட்டில் கொரோனா தொற்று குறைவாக இருப்பதாகக் குறைந்த பரிசோதனைகளை மட்டும் செய்து சாதித்துக் கொண்டிருக்கிறது.

கொரோனா தொற்று தொடங்கிய இடம் சீனாவின் வூஹான் நகரம். கடந்த நவம்பர் தொடங்கி, டிசம்பரில் பரவி, ஜனவரியில் அதிகமாகி, உலகம் முழுக்கப் பரவத் தொடங்கியது கொரோனா. ஜனவரி மாதத்திலேயே கொரோனா பற்றிய முழுமையான ஆராய்ச்சியை நடத்தி, வைரஸ்ஸின் மரபணுவை கண்டுபிடித்தது சீனா.

அதை தன்னோடு மட்டுமென வைத்துக் கொள்ளாமல் உலகுக்குத் தெரிய பிரசுரித்தது. எந்த நாடும் கொரோனாவின் மரபணுவை ஆராய்ந்து தன் நாட்டின் சூழலுக்கு ஏற்ப அவற்றின் தன்மைகளை முன் யூகித்து மருத்துவ தயாரிப்புகளை செய்துகொள்ள உதவக்கூடிய முன்னெடுப்பு. ஆனாலும் எந்த நாடும் பொருட்படுத்தவில்லை. உலக சுகாதார நிறுவனம் மட்டும் உலக நாடுகள் எல்லாவற்றையும் கொரோனா பாதிப்புக்குத் தயாராக அறிவுறுத்திக் கொண்டே இருந்தது. அமெரிக்கா கூட பொருட்படுத்தவில்லை.

அமெரிக்காவின் ட்ரம்ப், இந்தியாவுக்கு வந்து புது ஒப்பந்தங்கள் போடும் மும்முரத்தில் இருந்தார். இந்தியாவோ அமெரிக்க அதிபரை வரவேற்க சுவர் கட்டிக் கொண்டிருந்தது. குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தது. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி என உலக நாடுகள் பெரும்பான்மையானவை பெரும் அலட்சியத்தில் இருந்தன. மக்களுக்கு ஏற்படப்போகும் இடரை உணர்ந்து தயாரிப்பு நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் வெறும் அரசியலை மட்டும் செய்து கொண்டிருந்தன.

அவை எல்லாமும் குறை கூறிக் கொண்டிருந்த சீனா, மக்களுக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தது. கொரோனா பாதிப்பால் நோய் தொற்று சீனாவில் அதிகமாகிக் கொண்டிருந்தது. பலி எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருந்தது. உலக நாடுகள் எல்லாமும் ஏளனம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தன.

அமெரிக்க ட்ரம்ப்பை போல் ‘சீன வைரஸ்’ என்றும் ‘கண்டதை சாப்பிடும் சீனாக்காரன்’ எனவும் நக்கலடித்துக் கொண்டிருந்தோம். சீன அரசோ நாம் கண்ட அரசுகள் எதைக் காட்டிலும் கற்பனைக்கெட்டாத வேகத்துடனும் தயாரிப்புடனும் மக்கள் நலனுக்கென துணை நின்று கொண்டிருந்தது. அமெரிக்கா முதலிய உலக நாடுகள் சீனாவைப் பற்றியும் கம்யூனிசத்தை பற்றியும் பரப்பும் பொய் பிரச்சாரத்தை எதிர்த்து உலக மக்களும் உலக ஊடகங்களும் தங்களை மறந்து வியந்து சீனாவை பார்க்கும் சமயம் வந்தது.

ஜனவரி 23, 2020.

சீனாவின் வூஹான் நகரத்தில் நோய்த் தொற்று அதிகமாகி பலி எண்ணிக்கையும் அதிகமாகியிருந்த சமயம். ஒரு நொடி கூட தாமதிக்கவேயில்லை சீனா. அதே நகரத்தில் உடனே உதவுவதற்கு என மருத்துவமனை கட்ட தீர்மானித்தது. வெறும் பத்தே நாட்களில் 1,000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது. அதனையடுத்து அதே பத்து நாட்களில் 1,600 படுக்கைகள் கொண்ட இன்னொரு மருத்துவமனை கட்டி எழுப்பப்பட்டது.

“மருத்துவ உதவி பொருட்களில் எழுதியிருந்த வாசகம்...” : கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர என்ன செய்தது சீனா?

மருத்துவமனைகள் கட்டும் வேலைகளை மக்களே பார்வையிட்டனர். கட்டுமான வேலைகள் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. சீனாவைப் பற்றி உலக நாடுகளும் ஊடகங்களும் பரப்பிய பொய் பிரச்சாரம் சில நாட்களிலேயே தூள் தூளானது.

மறுபக்கத்தில் இன்னொரு விஷயமும் நடந்து கொண்டிருந்தது. உலகின் வல்லரசு நாடாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா, சாகவிருக்கும் அமெரிக்கர்களுக்கு என இரண்டு லட்சம் பிரேதப் பைகளை தயாரிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அந்த அமெரிக்கர்களை எப்படி காப்பதென்ற யோசனை கொஞ்சம் கூட அந்த அரசுக்கு இல்லை.

அத்தகைய அமெரிக்க அரசின் காலுக்கு அருகே ஒரு குட்டி நாடு இருக்கிறது. க்யூபா! மிகவும் சிறிய நாடு. அமெரிக்காவுக்கு பிடிக்காத இன்னொரு நாடு. அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை என்றாலே அது நல்ல நாடாகத்தான் இருக்கும். கியூபா கம்யூனிசத்தை பின்பற்றும் நாடு. உதாரணமாக கியூபாவில் மருத்துவமும் கல்வியும் இலவசம். மருத்துவம் க்யூபாவின் அரசிடம் இருக்கிறது. தனியாரிடம் இல்லை. பேதமே இல்லாமல் எல்லா மக்களுக்கும் கியூபாவில் மருத்துவம் இலவசம். கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்களின் பார்வையைக்ப் குவித்தது கியூபா நாட்டில்தான்.

கொரோனா சீனா தொடங்கி உலக நாடுகளுக்கு பரவ ஆரம்பித்ததும் கியூபா தன் நாட்டின் மருத்துவர்களை உலக நாடுகள் அனைத்துக்கும் அனுப்பியது. மருத்துவத்தில் முன்னிலையில் இருக்கும் நாடும் கியூபாதான். ஏற்கனவே பல ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க ஏழை நாடுகளில் இலவசமாக 29,000 கியூப மருத்துவப் பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்நிலையில் எந்தப் பிரதிபலனும் கேட்காமல் இத்தாலி உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் இலவசமாக மருத்துவ உதவி செய்யவென 593 மருத்துவர்கள் கொண்ட குழுவை கியூபா அனுப்பி வைத்திருக்கிறது.

“மருத்துவ உதவி பொருட்களில் எழுதியிருந்த வாசகம்...” : கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர என்ன செய்தது சீனா?

சீனாவும் கியூபாவும் கொரோனாவை எதிர்த்து வென்று கொண்டிருக்கும் விதத்தை நேரடியாக இன்று மக்கள் கண்டு கொண்டிருக்கிறார்கள். பிற அரசுகளை காட்டிலும் கம்யூனிச அரசுகள் எந்தளவுக்கு மக்களுக்கான அரசுகளாக இருக்கிறார்கள் என்பதை உலக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவாலும் அமெரிக்காவை சார்ந்த நாடுகளின் ஊடகங்களாலும் சீனாவும் மக்களால் கொண்டாடப்படுவதை காண முடியவில்லை. மார்ச் மாதத்திலிருந்தே சீனாவை பற்றி பல கதைகளை சொல்லத் தொடங்கிவிட்டன. கொரோனா பாதித்த மக்களை சீனா கொன்றுவிட்டது என்றெல்லாம் புதுப் புதுக் கதைகளை சொல்லத் தொடங்கிவிட்டன.

முதன்முதலாக கொரோனாவை எதிர்கொண்ட சீன அரசு என்ன செய்தது?

இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சீனா கொரோனா கையாண்ட விதத்தைப் பற்றி கூறியதாவது, “'மனித வளத்தைப் பொறுத்தவரை குறையே இருக்கவில்லை. போர்க்களத்தில் வேலை பார்ப்பதை போல் அனைவரும் வேலை பார்த்தனர். எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. விலை உயர்ந்த ஆடைகளைப் போட வேண்டியிருந்ததால் அதிகமாக கழிவறைக்கு செல்ல முடியாது. குழந்தைகளுக்கு போடும் டயபர் ஆடையை போட்டுக் கொண்டோம். இந்தியாவிலிருந்து ரொம்பவே வித்தியாசமானது இங்கு இருக்கும் சூழல். இந்தியாவில் நாசிக், புனே, ராஜஸ்தான் என வெவ்வேறு இடங்களில் கொரோனா பரவும் இடங்கள் இருக்கலாம். ஆனால் இங்கு வேறு விதம். இங்கு ஒரே இடம்தான். ஹுபே மாகாணத்தின் வூஹான் நகரம். நாட்டின் மொத்த வளங்களும் உதவிகளும் ஹுபே மாகாணத்துக்கு செலுத்தப்பட்டன.

'ஜனவரி 22ம் தேதியிலிருந்து நிலைமை படுமோசமானது. கவலை கொள்ளும் சூழல் உருவானது. முதல் நோயாளி வந்த அடுத்த பத்து நாட்களில் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டது. சீனாவை பற்றிய நல்லவி ஷயம் என்னவென்றால், சிக்கலான சூழல் வரவிருக்கிறது என்பது தெரிந்தவுடனே மிகவும் அழகாக அவர்கள் சூழ்நிலையை கையாண்டார்கள். மொத்த நகரத்தையும் ஊரடங்குக்குள் கொண்டு வந்தார்கள். மக்கள் வெளியே வருவதை தடுப்பதற்கான நல்ல சமூகக் குழுக்கள் அவர்களிடம் இருக்கின்றன.

“மருத்துவ உதவி பொருட்களில் எழுதியிருந்த வாசகம்...” : கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர என்ன செய்தது சீனா?

'எல்லா மருந்துக்கடைகளும் இங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. பாரசிட்டமால் போன்ற மாத்திரைகள் கூட கொடுப்பதற்கு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வலி நிவாரணிக்கும் காய்ச்சலுக்கும் கூட எந்த மருந்தும் கொடுக்கக்கூடாது. இருமலுக்கோ சளிக்கோ மருந்து கேட்டு வந்தால் அவர்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மருந்து வாங்க வேண்டுமெனில் அடையாள அட்டை கொடுக்க வேண்டும்.

'தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்ட நோயாளிகளும் சரி, தனிமை வார்டுகளில் வேலை பார்த்த ஊழியர்களும் சரி வீட்டுக்குப் போகவே கூடாது. அவர்களுக்கான உணவும் தங்குமிடமும் எல்லா வசதிகளும் இங்கேயே மருத்துவமனைகளிலேயே ஏற்பாடு செய்யப்பட்டன. இங்கு அறைகளை சுத்தம் செய்கிறவர் தொடங்கி, வாசல் காப்பவர் வரை அனைவரும் மருத்துவமனையில்தான் தங்க வேண்டும். அணிகளாக பிரிக்கப்பட்டோம். 20 நாட்களுக்கு ஒரு அணி வேலை பார்க்க வேண்டும். 20 நாட்கள் முடிந்த பிறகு 14 நாட்களுக்கு தனிமையிலிருந்து மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

டிசம்பர் இறுதியிலேயே கொரோனா வைரஸை சீனா கண்டுபிடித்துவிட்டது. உலகத்துக்கும் வைரஸால் பாதிப்பு ஏற்படும் என்பதால் உலக சுகாதார நிறுவனத்துக்கும் உடனே தகவலை தெரிவித்தது. ஜனவரியின் மத்தியில் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கைகளை தன் நாட்டில் சீன அரசு எடுத்தது. மக்களை காப்பதற்கான முகக்கவசங்கள் குறைபாட்டை சரிசெய்ய வேண்டுமென சில நாட்களிலேயே முகக்கவச உற்பத்திக்கான தொழிற்சாலையை கட்டியது. பெருமளவு எண்ணிக்கையில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு மக்களை சென்றடைந்தன.

சூழலின் தீவிரம் புரியாமல் வெளியே சுற்றும் மக்களை சீன அரசு காவலர்களை கொண்டு லத்திகளால் அடிக்கவில்லை. நூதன முறையை கையாண்டது. ட்ரோன் எனப்படும் பறக்கும் இயந்திரத்தை கொண்டு மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து முகக்கவசங்கள் அணியாதவர்களை அணியும்படி அறிவித்தது. குறிப்பாக இத்தகைய பறக்கும் இயந்திரங்கள் சீன கிராமங்களில் கூட மக்களை கண்காணித்து அறிவிப்புகளை வெளியிட்டன.

“மருத்துவ உதவி பொருட்களில் எழுதியிருந்த வாசகம்...” : கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர என்ன செய்தது சீனா?

தொற்று அதிகமாகப் பரவியது. பலி எண்ணிக்கை பன்மடங்காகிக் கொண்டு இருந்தது. ஜனவரி 23ம் தேதி. சீன அரசு ஊரடங்கு உத்தரவு இட்டது. வூஹான் நகரத்திலிருந்து வெளியேறவும் நகரத்துக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் 15 நகரங்களுக்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை வீடுகளுக்குள் முடங்கியது.

உணவுக்கு வழியேற்படுத்தாமல் ஊரடங்கு அறிவித்த பிறகு உணவு தேடி வரும் மக்களை ரோட்டில் விட்டு அடிப்பது போலல்ல சீனா அரசின் அறிவிப்பு. மக்களுக்குத் தேவையான உணவுக்கான வழிமுறைகளைச் செய்த பிறகே ஊரடங்கு அறிவிப்பு வெளியானது. உணவுகளுக்கான போக்குவரத்தை வடிவமைத்து வைத்திருந்தது.

காவல்துறையெல்லாம் இல்லாமல் சமூகக் குழுக்களை சீன அரசே ஒருங்கிணைத்தது. மக்களுக்கான உணவுகளை வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் வழிமுறைகளை மேற்கொண்டது. மேலும் வீட்டிலிருந்து மக்கள் விரும்பும் உணவை ஆர்டர் செய்து பெரும் வாய்ப்பையும் அனுமதித்தது. வெவ்வேறு வாகனங்களிலும் தன்னார்வலர்களின் உதவியையும் கொண்டு மக்களுக்கான உணவை வீடு கொண்டு சேர்த்தது சீன அரசு. பிற நோய்களுக்கான மருந்துகளும் சீன மக்களின் வீடு தேடி அடைந்தது.

ஏப்ரல் 8ம் தேதி. 76 நாட்கள் முடிந்திருந்தன. ஊரடங்கு உத்தரவை சீன அரசு திரும்பப் பெற்றது. ஊரடங்கு முடியும்போதும் மக்களுக்கான நம்பிக்கையைக் கொண்டாடும் வகையில் நகரம் முழுக்க உற்சாகம் தரும் அலங்காரத்துடனும் கொண்டாட்டத்துடனும் ஊரடங்கை முடித்தது சீன அரசு.

“மருத்துவ உதவி பொருட்களில் எழுதியிருந்த வாசகம்...” : கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர என்ன செய்தது சீனா?

கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றவென மக்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்ததோடு மட்டுமல்லாமல், மக்களை முதல் வரிசையில் நின்று காப்பாற்றும் மருத்துவர்களுக்கான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொரோனா பேரிடரை சீன அரசு அப்புறப்படுத்தியது. இரண்டு மாதங்களிலேயே புது நோயாளிகள் இல்லையென்ற நிலையை எட்டியும் பொறுமையாக இருந்து இரண்டு வாரங்கள் மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திய பிறகே சீன அரசு ஊரடங்கை விலக்கியிருக்கிறது.

சொந்த மக்களை காப்பாற்றுவதையும் தாண்டி உலக மக்களுக்கான நலனையும் சீன அரசு பேணும் கட்டத்துக்கு நகர்ந்தது. குறிப்பாக செர்பியா, ஆப்பிரிக்க நாடுகள், கம்போடியா, இராக், ஈரான், பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், ஐரோப்பிய நாடுகள் என தொடர்ந்து பல நாடுகளுக்கு சீனாவின் உபகரணங்களில் தொடங்கி மருத்துவ உதவி வரை பறந்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் தாண்டி, சீன வைரஸ் என பெயர் சூட்டி மகிழ்ந்தாரே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது நாட்டுக்கே 30 லட்சம் முகக்கவசங்களை சீனா அனுப்பியிருக்கிறது. இந்தியாவுக்கும் மருத்துவ உதவி வந்து சேர்ந்திருக்கிறது.

நட்பு நாடு, எதிரி நாடு என்கிற பேதமின்றி உலக மக்கள் அனைவருக்கும் நலன் சேர வேண்டும் என விரும்பி சீனா உதவிக்கரம் நீட்டுகிறது. மனித உழைப்பில் விளையும் எல்லாமும் எல்லாருக்கும் என்பதே கம்யூனிச சித்தாந்தம்.

“மருத்துவ உதவி பொருட்களில் எழுதியிருந்த வாசகம்...” : கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர என்ன செய்தது சீனா?

கொரோனா வைரஸ் உலக மக்களை இன்று தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது. இந்திய மாநிலமான கேரளா தொடங்கி க்யூபா, சீனா, வியட்நாம் வரை எங்கு திரும்பினாலும் இன்று கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை எந்த பேதமும் பார்க்காமல் காப்பாற்றிக் கொண்டிருப்பது ஒரே சித்தாந்தம்தான். கம்யூனிசம்!

சீன நாட்டிலிருந்து இத்தாலிக்கு அனுப்பப்பட்ட மருத்துவ உதவி மூட்டைகளில் இப்படி ஒரு வாசகம் ஒட்டப்பட்டிருந்தது.

நாம்

ஒரே கடலின் அலைகள்

ஒரே மரத்தின் இலைகள்

ஒரே தோட்டத்தின் மலர்கள்!

எத்தனை சத்தியமான வார்த்தைகள்!

உலகை ஒரே கடலாக, ஒரே மரமாக, ஒரே தோட்டமாகக் கொண்டால், நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் உறவு. எவராலும் எவருமில்லை. எவரின்றியும் எவருமில்லை.

இன்றைய உலகம் மக்களின் விருப்பத்துக்கேற்ற இடத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories