உலகம்

உச்ச கட்டத்தை எட்டும் ஹாங்காங் போராட்டம் : கண்காணிப்பு விளக்குகளை வெட்டி சாய்த்த மக்கள்! (Video)

ஹாங்காங் அரசின் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைகளில் உள்ள கண்காணிப்பு விளக்குகளை சாய்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

ஹாங்காங் அரசு காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகு, 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹாங்காங் மக்களுக்கென தனி பண மதிப்பு, சட்டம், நிர்வாகம் என இருந்து வருகிறது. ஹாங்காங் சீனா அரசுடன் சுமுகமான உறவில் தான் இருந்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்தம் செய்வதற்கு முடிவு செய்து, அதற்கான மசோதாவையும் சட்டசபையில் கொண்டு வந்தது. ஆனால் இது ஹாங்காங் மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மக்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் போராட்டத்திற்கு பிறகு ஹாங்காங் நிர்வாகம் மசோதாவை நிறுத்தி வைத்தது. ஆனாலும் மசோதாவை முழுமையாகத் திரும்பப்பெறவில்லை. மேலும், ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கேரி லாம் பதவியை விட்டு விலகவேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த மாதம் விமான நிலையத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது போலிஸார் தாக்குதல் நடத்தி அங்கிருந்து விரட்டினர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்து கலவரம் உருவானது.

பின்னர் இரண்டு நாட்கள் சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த வாரம் அமைதியான முறையில் கொட்டும் மழையிலும் சுமார் 17 லட்சம் பேர் கலந்து கொண்டு பேரணியில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் தற்போது போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று தினம் குவாங் டோங் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த போராட்டத்தின் போது அரசாங்கம் அமைத்துள்ள அதிநவீன ‘ஸ்மார்ட் கண்காணிப்பு விளக்கு’ கம்பங்களை நீக்க வழியிறுத்தி முழக்கத்தை எழுப்பினார்கள். மேலும் நகரத்திற்குள் நுழைய முயற்சி எடுத்தப் போராட்டக்காரர்களை போலிஸார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலிஸாருக்கும் இடையே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் தெருக்களில் அமைத்துள்ள ‘ஸ்மார்ட் கண்காணிப்பு விளக்கு’ கம்பங்களை ரம்பம் கொண்டு அறுத்து சாய்த்துள்ளார்கள். இந்த கண்காணிப்பு விளக்கு கம்பங்கள் மூலம் ஹாங்காங் அரசு தங்களை வேவுப்பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்கள்.

இதையடுத்து போலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், பெப்பர் ஸ்பிரே அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டினர்கள். பதிலுக்கு போராட்டக்காரர்களும் தங்கள் கைகளில் கிடைத்த கற்கள் மற்றும் கட்டைகளை போலிஸார் மீது வீசினார்கள்.

கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற போராட்டம் நேற்றில் இருந்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த போராட்டத்தால் ஹாங்காங் நகரமே போர்க்களம் போல காட்சியளித்தது.

இதனைக் கட்டுப்படுத்த அரசாங்க முயற்சி எடுக்கவேண்டும். மேலும் மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என பலரும் ஹாங்காங் அரசு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த போராட்டத்தை ஒடுக்க சீன ராணுவம் தற்போதுவரை ஈடுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories