வைரல்

'உடம்பில் சட்டையில்லை... உள்ளத்தில் உறுதி'- மனைவியை மருத்துவமனைக்கு சைக்கிளில் அழைத்து வந்த பாசக்கணவர்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியை சைக்கிளில் ஏற்றி கும்பகோணத்திலிருந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துவந்த பாசக்கணவரின் செயல் ஊரடங்கு வாழ்வின் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

'உடம்பில் சட்டையில்லை... உள்ளத்தில் உறுதி'- மனைவியை  மருத்துவமனைக்கு சைக்கிளில் அழைத்து வந்த பாசக்கணவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அறிவழகன். இவரது மனைவி மஞ்சுளா புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இதனால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மனைவியைச் சேர்த்து சிகிச்சை அளிக்க அறிவழகன் முடிவு செய்தார்.

இதற்கிடையே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழ்நாடு-புதுச்சேரி எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.எப்படியாவது தனது மனைவிக்கு சிகிச்சையளித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருந்த அவர், தன் மனைவியை சைக்கிளில் ஏற்றி புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு எவ்வளவு கிலோமீட்டர் என்றுகூட தெரியாமல் மனைவியை சைக்கிளில் அமர்த்தி சைக்கிளை மிதித்திருக்கிறார் அறிவழகன். ஆயினும் சீர்காழி, கடலூர் வழியாக 120 கிமீ தூரம் கடந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

இடுப்பில் வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு, உடலில் சட்டைக்கூட இல்லாமல் வெறும் துண்டு மட்டும் போட்டிருந்த அறிவழகனின் தோற்றத்தையும், மனைவியைக் காப்பாற்ற அவர் எடுத்த முயற்சியையும் கண்டு ஜிப்மர் மருத்துவர்கள் மனம் இறங்கி, உடனே அவரின் மனைவியை வார்டில் சேர்த்து ஹீமோதெரபி சிகிச்சையளித்தனர்.

இவர்களுக்கு ஜிப்மர் நிர்வாகம் சார்பிலும், தன்னார்வலர்களின் உதவியின் பேரிலும் இலவசமாக உணவும் வழங்கப்பட்டது.மூன்று நாள்கள் மஞ்சுளாவுக்கு உரிய சிகிச்சை அளித்துவிட்டு ஆம்புலன்ஸில் இருவரையும் கும்பகோணத்தில் அவர்களது வீட்டில் பத்திரமாக இறக்கியும்விட்டனர். சிகிச்சைக்காகவும், ஆம்புலன்ஸுக்காகவும் எந்தப் பணமும் ஜிப்மர் நிர்வாகம் வாங்கவில்லை .

தன் மனைவியின் சிகிச்சைக்காக அவரை சைக்கிளில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து வந்த பாசக்கார கணவரின் செயல் ஊரடங்கு வாழ்வின் அதிசயம்தானே!.

banner

Related Stories

Related Stories