வைரல்

தமிழிசை, ஹெச்.ராஜாவை சூடேற்றிய சூர்யாவின் பேச்சு : சகிப்புத்தன்மை இல்லாமல் வன்மத்தைக் கக்கும் பா.ஜ.க 

புதிய கல்விக் கொள்கையின் தவறுகள் குறித்து நடிகர் சூர்யா பேசியதற்கு, எதிர்வினையாக பா.ஜ.க தலைவர்கள் வன்மம் நிறைந்த கருத்துகளை பேசி வருவது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள, பா.ஜ.க அரசு வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை ஆபத்தை விளைவிக்கும் என தமிழகத்தில் இருந்து தொடர்ந்து வலுவான எதிர்ப்புக்குரல்கள் எழுந்து வருகிறது.

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டுள்ளது. பிறமொழிகளில் வெளியிடாமல் 30 நாட்களுக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என அறிவித்தது. பின்னர் கடும் எதிர்ப்பிற்கு பிறகு ஜூலை 31 வரை அவகாசம் நீடிக்கப்பட்டது. அதேபோல் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி கட்டாயம் என்கிற அறிவிப்புக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அதையும் மத்திய அரசு நீக்கியது. இந்த புதிய கல்வி கொள்கை கல்வியாளர்கள் பலரும் எதிர்த்து வருகிறனர்.

அண்மையில், தமிழ் திரைப்பட நடிகர் சூர்யா, கல்வி உதவித் தொகை வழங்கும் விழா ஒன்றில் புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், “ 30 கோடி மாணவர்களின் எதிர்காலத்திற்கான இந்த புதிய கல்வி கொள்கை பற்றி பெரிய அளவில் விவாதம் எழவில்லை. இது வருத்தமளிக்கிறது.

ஒரு தலைமுறை மாணவர்களின் கல்வி விஷயத்தில் ஒரு புதிய கொள்கையை வெளியிட்டு 30 நாட்களில் கருத்து கேட்டு உடனே செயல்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஏன் இந்த அவசரம் எனத் தெரியவில்லை. மூன்று வயதிலிருந்தே மாணவர்களுக்கு மும்மொழிகளை கற்க வேண்டும் என அவர்கள் மீது திணிப்பது அபத்தமானது. இன்று 30% மாணவர்கள் ஆசிரியரே இல்லாமல்தான் தேர்வு எழுத செல்கின்றனர்” என்று பேசினார். அவரின் கருத்து சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பலரின் கவனத்தை ஈர்த்தது.

தமிழிசை, ஹெச்.ராஜாவை சூடேற்றிய சூர்யாவின் பேச்சு : சகிப்புத்தன்மை இல்லாமல் வன்மத்தைக் கக்கும் பா.ஜ.க 

குறிப்பாக பா.ஜ.க மற்றும் இந்துத்துவா கும்பல்கள் சூர்யா மீது வன்மத்தை கக்க ஆரம்பித்துள்ளனர். அவர் மீது பல்வேறு அவதூறு விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சூர்யா மீது பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவதூறை கிளப்பும்படி பேசி உள்ளார்.

இதுகுறித்து அவர் விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கல்வியை அனைவருக்கும் சமமாக கொடுப்பது தான் இந்த புதிய கல்வி கொள்கை என்று குறிப்பிட்ட, புதிய கல்வி கொள்கையை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள். மேலும், திரைப்பட டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து ஏன் சூர்யா பேசவில்லை” என்று சம்பந்தமில்லாமலும் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதேநேரம் பா.ஜ.க.,வைச் சேர்ந்த சர்ச்சைகளுக்குப் பெயர் போன ஹெச்.ராஜா பேசுகையில், “ சூர்யாவின் பேச்சு வன்முறையை விதைக்குபடியாக உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், இதே ஹெச்.ராஜாதான் சில மாதங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையையும் காதால் கேட்க முடியாத அளவுக்கு கேவலமாகப் பேசினார். அப்போது அது வன்முறையாகத் தெரியவில்லையா? என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சகிப்புத்தன்மையே இல்லாத ஒரு கட்சி தேசத்தை ஆட்சி செய்வது விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு ஆபத்தாக முடியும். மேலும் புதிய கல்வி கொள்கையை ஒரு நடிகர் பேசினால் அவர் மீது அரசியல் சாயம் பூசுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என பா.ஜ.க.,வின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories