
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (18.12.2025) பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜம்புலிங்கம் சாலையில் 25.72 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்து, 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
மேலும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 17.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் மற்றும் பெரியார் நகர் அமுதம் அங்காடி கட்டடம் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி
பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை திறப்பு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்கள் தங்களது இல்லத் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை குறைந்த செலவில் அதேசமயத்தில் அதிக வசதிமிக்க மண்டபத்தில் மனமகிழ்வுடன் நிறைவாக நடத்திடும் வகையில் ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 40,300 சதுரடி பரப்பளவில், 25.72 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்து, பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையில் நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் மார்பளவுச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த திருமண மாளிகையின் தரைத்தளத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, முதலாவது தளத்தில் ஒரே சமயத்தில் 435 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் உணவுக்கூடம், இரண்டாவது தளத்தில் 800 இருக்கைகளுடன் திருமண மண்டபம், மூன்றாம் தளத்தில்
10 எண்ணிக்கையிலான தங்கும் அறைகள், மின்தூக்கி வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இப்புதிய பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
கொளத்தூர், ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுதல்
கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு 11.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 32,676 சதுர அடி கட்டட பரப்பளவில், தரை மற்றும் மூன்று தளங்களுடன், 23 வகுப்பறைகள், 5 ஸ்மார்ட் வகுப்பறைகள், இயற்பியல், வேதியியல், கணினி மற்றும் அறிவியல் துறைகளுக்கான நான்கு நவீன ஆய்வகங்கள், தேர்வு மையம், நூலகம், ஆசிரியர்கள் அறை, அலுவலக அறை, கழிப்பறைகள், சிறார் விளையாட்டு பகுதிகள் ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
பின்னர், தமிழ்நாடு அரசு கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதற்காக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கொளத்தூர், பெரியார் நகர் அமுதம் அங்காடி கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்
கொளத்தூர், பெரியார் நகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வந்த பழமையான அமுதம் அங்காடியை மேம்படுத்தும் வகையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 6.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12,157 சதுர அடி கட்டட பரப்பளவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன், இடமகன்ற அமுதம் பல்பொருள் அங்காடி, அலுவலக அறை, பணியாளர்கள் அறை, சேமிப்பு கிடங்கு, மின்தூக்கி வசதிகள், நகரும் படிக்கட்டுகள், நவீன கழிப்பறைகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ள அமுதம் அங்காடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.








