
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவண்ணாமலையில் நேற்று (டிச.14) நடைபெற்ற இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆற்றிய தலைமை உரை :-
கழகத்தினுடைய முதன்மை அணியாம், இளைஞரணியினுடைய வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி மூலம் உங்களை எல்லாம் சந்திப்பதில் எனக்கு மிகுந்த பெருமை மகிழ்ச்சி.
2 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞரணியினுடைய 2-ஆவது மாநில மாநாட்டை சேலத்தில் வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். அந்த மாநாட்டினுடைய வெற்றி, அதன்பிறகு வந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நமக்கு மிகப் பெரிய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் கொடுத்தார்கள்.
இங்கே திரண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞரணி நிர்வாகிகளை பார்க்கின்ற போது, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதே வெற்றியை நீங்கள் நிச்சயம் நம்முடைய தலைவருக்கு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த வெற்றிக்கு இந்த நிர்வாகிகள் சந்திப்பு மிக, மிக ஒரு முக்கிய காரணமாக நிச்சயம் அமையும்.
இன்றைக்கு பல கட்சிகள், இயக்கங்கள் உறுப்பினர்களை சேர்க்கவே தடுமாறிட்டு இருக்கும் போது, திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய இளைஞரணியில பூத் வரைக்கும்,, “நிர்வாகிகளை” நியமனம் செய்திருக்கின்றோம்.
அந்த வகையில் இன்றைக்கு 91 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து மாவட்டம், மாநகரம், ஒன்றியம், நகரம் முதல் பாகம், பூத் வரை அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள்னு ஒரு லட்சத்து 30 ஆயிரம் நிர்வாகிகள் இந்த கூட்டத்திற்கு இந்த சந்திப்பிற்கு நீங்கள் வருகை தந்து இருக்கின்றீர்கள்.
இந்த சந்திப்புக்கு முதலில் அனுமதி வழங்கிய நம்முடைய கழகத்தலைவர் அவர்களுக்கு முதலில் இளைஞரணியின் சார்பாக என்னுடைய நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதேபோல், கழகத்தினுடைய பொதுச் செயலாளருக்கும், முதன்மைச் செயலாளருக்கும் வந்திருக்கக்கூடிய அனைத்து துணைப் பொதுச் செயலாளர்களுக்கும். இந்த சந்திப்பை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய உங்களுடைய மாவட்ட அமைச்சர், மாவட்ட கழக செயலாளர் அண்ணன் எ.வ.வேலு அவர்களுக்கும் இளைஞரணியின் சார்பாக என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதுமட்டுமல்ல, இந்த சந்திப்பை, சாத்தியப்படுத்திய அனைத்து மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழகச் செயலாளர்கள் இளைஞரணியினுடைய மாநில துணை செயலாளர்கள், அனைத்து மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உங்கள் அத்தனைபேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
வந்திருக்கக்கூடிய அனைத்து இளைஞரணி தம்பிமார்களையும், சகோதரர்களையும் இளைஞரணி செயலாளராக உங்கள் அத்தனைபேரையும் வருக, வருக என வரவேற்கின்றேன். என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திருவண்ணாமலையில், மலை இருக்கு என்று எல்லாருக்குமே தெரியும். ஆனால், மலை மட்டும் இல்லை. இங்கே திருவண்ணாமலையில் கடலும் இருக்கின்ற அளவிற்கு, இங்கே கடல் போல கூடியிருக்கக்கூடிய என்னுடைய இளைஞரணி தம்பிமார்கள் உங்கள் அத்தனைபேருக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இங்கே நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர் கலைஞர் அவர்களின் வழியில், தான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு இந்த இயக்கம் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் கழகத்திற்கு வெற்றியை மட்டுமே பெற்றுத் தந்த கழகத் தலைவர் அவர்கள் பெருமையோடு, பூரிப்போடு உட்காந்து இருக்கிறார்.
சேலம் இளைஞர் அணி மாநாட்டில் பேசும் போது, குறிப்பிட்டு பேசினார், வாழ்த்தி பேசினார். என்ன சொன்னார். “நான் கழகத்தலைவராக மட்டும் உங்களை வாழ்த்தவில்லை. உங்களின் தந்தையாகவும் நான் வாழ்த்துகிறேன் என்று தலைவர் சொன்னார். ஏனென்றால், உதயநிதி மட்டும் என்னுடைய பிள்ளை கிடையாது. என்னுடை வாரிசு கிடையாது, இங்கே கூடி இருக்கும் லட்சோப லட்சம் இளைஞர்களும் என்னுடைய கொள்கை வாரிசு என்று தலைவர் அவர்கள் நம்மை பாராட்டினார். அப்படிப்பட்ட கொள்கை வாரிசுகளாக நாம் இங்கே எழுச்சியோடு கூடியிருக்கின்றோம்.
இன்றைக்கு மாநாடு என்றால், பல கட்சிகளில் ஆயிரக்கணக்கில கூட இல்லை. நூற்றுக் கணக்கில் இளைஞர்களை திரட்டுவது அவ்வளவு பெரிய விசயம். சாதாரண விசயம் கிடையாது. ஆனால் நம்முடைய கழகத்துல மட்டும்தான் இளைஞரணி 'நிர்வாகிகளையே' கிட்டத்தட்ட ஒரு மாநாடு போல நாம் கூட்டி இருக்கின்றோம்.
இந்தியாவுலேயே வேற எந்த இயக்கமும் செய்ய முடியாத சாதனையை நாம் செய்து காட்டியிருக்கின்றோம். இது ஏதோ கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் இல்லை. எதிரிகள் போடுகின்ற தப்பு கணக்குகளை சுக்குநூறாக உடைக்கின்ற கூட்டம், இங்கு வந்திருக்கக்கூடிய இளைஞரணி கூட்டம், கொள்கை கூட்டம்.
பொதுவாக, இளைஞர்கள் அதிகமாக கூடினால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்ற பிம்பம் இப்போது வந்துள்ளது, காட்டாற்று வெள்ளம் மாதிரி போய்க்கொண்டு இருப்பார்கள். அவங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்வார்கள். ஆனால் நம்முடைய கழக இளைஞரணியினர் அப்படி கிடையாது. மிகுந்த கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதற்கு இங்கே கூடியிருக்கக்கூடிய இந்த கூட்டமே சாட்சி.
கட்டுப்பாடு இல்லாமல் ஒரு கோடி இளைஞர்கள் திரண்டாலும் அதனால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது. அப்படிப்பட்ட கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்துக் கொண்டு யாராலும் எதையும் சாதிக்க முடியாது.
ஆனால், உங்களை மாதிரி கட்டுப்பாட்டோட இருக்கக்கூடிய இந்த கொள்கை கூட்டம், கழகத்திற்கு மட்டுமல்ல. இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே மிகப்பெரிய ஒரு பலம் என்று, என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
மற்ற இயக்கத்தில் எல்லாம் தொண்டர்கள் இருப்பார்கள், தலைவர்கள் இருப்பார்கள், நிர்வாகிகள் இருப்பார்கள், பொறுப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால், தி.மு.க.வில் மட்டும்தான் உண்மையான அன்போடு 'உடன்பிறப்பே' என்று கூப்பிடுகிற கூட்டம் நம்முடைய தி.முகவில் மட்டும் தான் இருக்கிறது.

இன்றைக்கு நம்முடைய திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டுகளை கடந்து 76 ஆவது ஆண்டில் நாம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த 75 ஆண்டுகளில், உடன்பிறப்புகள், சிறைகளுக்கு போயிருக்கிறார்கள், சித்திரவதைகளை அனுபவித்து இருக்கிறார்கள், ஏன் மொழிக்காக தன்னுடைய உயிரையே தியாகம் பண்ணியிருக்கிறார்கள்.
ஆனால், நம்முடைய உடன்பிறப்புகளாக இருக்கட்டும், இளைஞரணி தம்பிகளாக இருக்கட்டும், களத்தில் இருந்து பின் வாங்கியது கிடையாது. ஆதிக்கத்துக்கு அடிப்பணிஞ்சது நிச்சயம் கிடையாது. எந்த நேரத்திலும் சுயமரியாதையை விட்டுக் கொடுத்தது கிடையாது.
அப்படிப்பட்ட தி.மு.கவை இன்றைக்கு சிலர் மிரட்டிப் பார்க்கிறார்கள். குறிப்பாக, குஜராத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நமக்கு ஒரு சவால் விட்டு இருக்கின்றார். பீகாரில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். அடுத்து எங்கள் இலக்கு தமிழ்நாடு என்று சொல்லி இருக்கின்றார்.
நான் அமித்ஷா அவர்களுக்கும் அவருடைய அடிமை கூட்டத்திற்கும் சொல்லுகின்றேன், நீங்கள் எவ்வளவு சீண்டினாலும், எவ்வளவு மிரட்டினாலும், அதை எதிர்கொள்வதற்கு எங்களுடைய கருப்பு, சிவப்பு படை, எங்களுடைய இளைஞரணி படை என்றைக்கும் களத்தில் தயாராக இருக்கும்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், 1949-இல் நம்முடைய இயக்கத்தை கட்சியை ஆரம்பிக்கும்போது சொல்லிட்டுதான் ஆரம்பித்தார். என்ன சொன்னார். டெல்லியின் ஆதிக்கத்தை எதிர்க்க தான் நாங்கள் வருகிறோம் என்று சொல்லிட்டு தான் இந்த கருப்பு சிவப்பு கொடியையே ஏற்றினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
அன்றைக்கு ஆரம்பித்து, இன்றைக்கு வரை, தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான அந்த போர்க்களத்தில் திராவிட முன்னேற்ற கழகம் என்றைக்குமே முன்வரிசையில் இருந்துள்ளது. இந்த போர்க்களத்தில் எதிரிகள் தான் மாறி, மாறி வந்திருக்கின்றார்களே தவிர, திராவிட முன்னேற்ற கழகம் என்றைக்குமே அதே வலிமையோடு இருந்துள்ளது.
ஏன் என்றால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே சொன்ன மாதிரி, தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான். அப்படிப்பட்ட நம்மைப் பார்த்து, தயாராக இருங்கள் நாங்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறோம் என்று மிரட்டப்பார்க்கிறார்கள்.

திராவிட முன்னேற்ற கழகம் ஏதோ ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்று பதவியை தக்க வைத்துக் கொள்ள உருவாக்கப்பட்ட இயக்கம் கிடையாது. இது தமிழினத்தை காப்பாற்ற துவங்கப்பட்ட இயக்கம். மிசா எனும் நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கம்.
உலக வரலாற்றிலேயே ஈடு இணை இல்லாத மொழிப்போரை நடத்தி, அதிலும் வெற்றி பெற்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம், தமிழ்மொழிக்காக தண்டவாளத்தில் தலைவைத்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். பல துரோகங்களை, பல அடக்குமுறைகளை வீழ்த்திய இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்.
இப்படிப்பட்ட எங்களை பார்த்து குஜராத்தில் உட்கார்ந்து கொண்டு, மிரட்டி பணிய வைக்கலாம் என்று நினைத்தால், நிச்சயம் அது கனவில் கூட நடக்காது. இங்கே கூடி இருக்கக்கூடிய இளைஞரணி தம்பிமார்களும் தலைவருடைய உடன்பிறப்புகளும் இருக்கும் வரை நிச்சயம் அதை நடக்க விட மாட்டார்கள். ஆகவே, கடைசி உடன்பிறப்பு இருக்கின்ற வரை சங்கி கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக் கூடப் பார்க்க முடியாது.
நீங்கள் பீகாரில் வெற்றி பெற்று இருக்கலாம். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம்னு வடநாட்டில் நீங்கள் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டுக்குள்ள நீங்கள் ஈசியாக நுழைந்துவிடலாம் என்று நீங்கள் தப்பு கணக்கு போடுகிறீர்கள்.
ஏன் என்றால், தமிழ்நாட்டுக்குன்னு ஒரு தனித்துவம் இருக்கிறது. தந்தை பெரியார் என்ற கொள்கை நெருப்பு தமிழ்நாட்டை என்றைக்கும் சுற்றி நின்று காப்பாற்றி இருக்கிறது. பேரறிஞர் அண்ணாவும், டாக்டர் கலைஞர் அவர்களும் உணர்வாக இருந்து நம்முடைய தமிழ்நாட்டை வழிநடத்துகிறார்கள்
ஜனநாயகத்தை பாதுகாக்க, தன்னுடைய 23 வயதிலேயே, மிசா கொடுமைகளை எதிர்கொண்ட கழகத்தலைவர் அவர்கள் நம்மை வழி நடத்த இன்றைக்கு இங்கே இருக்கின்றார்கள்.
பா.ஜ.க. என்பது, மதம் பிடித்த ஓடுகின்ற யானை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த யானையை அடக்குகின்ற அங்குசம், இதோ இங்கே இருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுடைய கைகளில் நிச்சயம் இருக்கின்றது.
இது மோடிக்கும் தெரியும், அமித்ஷாவுக்கும் தெரியும். அதனால் தான், நேரடியாக வந்தால் வெற்றிபெற முடியாது என்று இன்றைக்கு பழைய அடிமைகளையும், புதிய அடிமைகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு நம்மோடு மோத பார்க்கிறார்கள்.

பழைய அடிமைகள், புதிய அடிமைகள் மட்டும் அல்ல, இன்றைக்கு CBI, ED, Income Tax, ஏன் Election Commission இப்படி எல்லாருடனும் கூட்டணி வைத்து பாசிச பாஜக கூட்டு சேர்ந்து தமிழநாட்டிற்குள் நுழைய பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட பா.ஜ.க.வ நம்பிதான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறார்.
ஆனால், நாம் அப்படி இல்லை. முழுக்க முழுக்க கழகத்துடைய தொண்டர்களையும், இளைஞரணி தம்பிமார்களையும், தமிழ்நாட்டு மக்களையும் நம்பி நாம் களத்திற்கு வந்திருக்கின்றோம்.
நாம் தொடர்ந்து மக்களோடு இருக்கின்றோம், மக்களும் தொடர்ந்து நம்மோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம்.
நாலு நாளைக்கு முன்னாடி சென்னையில் அ.தி.மு.க.வுடைய பொதுக்குழு நடந்தது. அதில், ஒரு தீர்மானம் போட்டார்கள். 2026-ல் எடப்பாடி பழனிசாமி அவர்களை முதலமைச்சராக ஆக்குவோம் என்று அடிமைகள் தீர்மானம் போட்டு இருக்கின்றார்கள்.
பொதுவாக, காரில் பேட்டரி டவுனானால், அதை நாளு பேர் தள்ளிவிட்டு ஸ்டார்ட் பண்ணலாம். ஆனால் காரில் இன்ஜினே இல்லையென்றால், எவ்வளவு தள்ளுனாலும் அது ஸ்டார்ட் ஆகாது. இன்ஜின் இல்லாத, கார் தான் இன்றைக்கு இருக்கக்கூடிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இப்போது, பாஜக என்கின்ற லாரி, அந்த இன்ஜின் இல்லாத காரை எப்படியாவது கட்டி இழுத்துட்டு போக பார்க்கிறது.
இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொல்கிறார், நீதித்துறையை காப்பாற்ற வேண்டும், தமிழ்நாட்டை காப்பற்ற வேண்டும் என்று சொல்கிறார், முதலில் அவர் காப்பாற்ற வேண்டியது, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பாஜகவிடமிருந்து காப்பற்ற வேண்டும்.
இன்றைக்கு கட்சியில் இருந்து ஒவ்வொருத்தராக வெளிய போய் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், அவர் என்ன சொல்கிறார், யார் வேண்டுமானாலும் வாங்க, யார் வேண்டுமானாலும் போங்க, நான் மட்டும் தான் நிரந்தர பொதுச் செயலாளர்.
இது தான் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தேவை. அவருக்கு தேவை மட்டும் கிடையாது, நமக்கும் தேவை அதுதான் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி அவர்களே, உங்களிடம் ஒரே ஒரு விசயத்தை சொல்லுகிறேன், அடிமையாக இருந்து சுகமாக வாழ்வதைவிட, சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழுகிறது தான் முக்கியம்.
இதோ இங்கே இருக்கக்கூடிய எங்களுடைய லட்சக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளைஞரணி தம்பிமார்கள், கருப்பு, சிவப்பு இளைஞர்கள் இங்கே பாருங்கள் சுதந்திரமாக இருக்கின்றோம், குறிப்பாக, சுயமரியாதையோடு இருக்கின்றோம். அதனால் தான், இன்றைக்கு நம்மை நோக்கி தமிழ்நாட்டு இளைஞர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய ஆதரவை கொடுக்கிறார்கள்.
பாசிச சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றுகின்ற ஆற்றல் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு மட்டும் தான் உண்டு என்று இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் நம்புகிறார்கள். மக்களுக்கு அந்த நம்பிக்கையை வித்திட்டவர், அந்த நம்பிக்கையை பெற்றுள்ள தலைவர் நம்முடைய கழக தலைவர் அவர்கள் இங்கே வந்திருக்கின்றார்கள்.
கழக தலைவர் அவர்களின் மீது மக்களுக்கு இருக்கக்கூடிய அந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான் பாசிச சக்திகளையும் அடிமைக் கூட்டத்தினரையும், அவர்களுடைய கண்களில் உறுத்திக் கொண்டிருக்கிறது.
அதனால் தான், அமைதிப்பூங்காவாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் எப்படியாவது நுழைந்து ஏதாவது ஒரு கலவரம் செய்யலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த பாசிச கலவர சக்திகளுக்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக இளைஞரணி தம்பிமார்கள் நாம் அத்தனைபேரும் சொல்வோம். "We will never allow you. We are ready to face the consequences." நாங்கள் உங்களை நிச்சயம் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம். அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை நிச்சயம் களத்தில் சந்திப்போம்.

தமிழ்நாட்டில் நடந்து வருகின்ற ஆட்சி, சமூகநீதியை, சமத்துவத்தை, மதசார்பின்மையை, பெண்ணுரிமையைக் காக்கின்ற ஒரு ஆட்சி. இப்படிப்பட்ட நம்முடைய கழக ஆட்சியை, மீண்டும் கொண்டு வரவேண்டியது நம்முடைய பொறுப்பு, குறிப்பாக இளைஞரணி தம்பிமார்களின் கடமை. இங்கு வந்து இருக்கக்கூடிய இளைஞரணி நிர்வாகிகளுக்கு அந்த கடமை அதிகமாகவே இருக்கின்றது.
இந்த நேரத்தில் தலைவர் அவர்களுக்கும், கழகத்தினுடைய பொதுச் செயலாளர் அவர்களுக்கும், இளைஞரணி சார்பான ஒரு அன்பான வேண்டுகோள். நிச்சயம் வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில், எங்களுடைய இளைஞர்களுக்கு நீங்கள் போட்டியிட அதிகமாக வாய்ப்பை தரவேண்டும். இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும், இளைஞரணிக்குதான் கொடுக்க வேண்டும் என்று இந்த கோரிக்கையை வைக்கின்றேன்.
இளைஞரணி சார்பாக என்னென்ன பணிகள் எல்லாம் செய்து இருக்கிறோம் என்று நம்முடைய துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆ.இராசா அவர்கள் இங்கு பேசினார்கள். இவ்வளவு நாளாக நாம் என்ன செய்தோம் என்பது, எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி, இனி மேல் என்ன செய்யப் போகிறோம் என்பது மிக, மிக முக்கியம்.
அப்படி நமக்கு முன்னாடி இருக்கின்ற முதல் பணி, அடுத்த முக்கியமான பணி தான் 2026 சட்டமன்றத் தேர்தல் பணி. அடுத்து வருகின்ற 4 மாதங்களுக்கு, நாம் அதை நோக்கி பயணம் செய்ய வேண்டும், களத்தில் கடுமையாக உழைக்க வேண்டும்.
அடுத்த தலைமுறை இளைஞர்களை சந்தித்து பேச வேண்டும். உங்களுடைய நண்பர்களை சந்தித்து பேச வேண்டும், அவர்களுக்கு அரசியல் குறித்த புரிதல் வரவேண்டும். யார் வேணாலும் இடையில் வரட்டும், போகட்டும். அதைப் பற்றி நமக்கு கவலை வேண்டாம்.
வானவில், பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கும், கலர் கலராக இருக்கும். அதை பார்ப்பதற்கு மக்கள் கூடுவார்கள். ஆனால் அது நிச்சயம் நிரந்தரம் கிடையாது. உதயசூரியன் மட்டும் நிரந்தரம். உதயசூரியன் தான் மக்களுக்காக வெளிச்சத்தை தரும். ஆகவே, நம்முடைய கழகத்தின் வரலாறை, கழக ஆட்சியின் சாதனைகளை, நம் தலைவர் அவர்களின் பெருமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
உங்கள் தெருவில் இருக்கக்கூடிய 10, 20 இளைஞர்களை நீங்கள் உங்கள் கன்ட்ரோலில் எடுத்து வாருங்கள், நீங்கள் சொன்னால் கேட்கின்ற மாதிரி இருக்க வேண்டும். 10, 20 வீட்டுக்கு நான் பொறுப்பு என்று இந்த தெருவில் இருக்கின்ற வாக்குகளுக்கு நான் பொறுப்பு என்று டார்க்கெட்டை நிர்ணயித்து இளைஞரணி தம்பிமார்கள் வேலை செய்ய வேண்டும். எல்லார் கூடவும் நெருங்கி பழக வேண்டும், மக்களோடு மக்களாக பழக வேண்டும். அவங்களுக்கு தேவையானதை செய்து கொடுங்கள்.

தமிழ்நாட்டில் எந்த வீட்டை எடுத்துகிட்டாலும், நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பயன் அடைந்தவர்கள், ஒரு பயனாளியாவது நிச்சயம் இருப்பார்கள். அதை மக்களிடம் தொடர்ந்து நியாபகப்படுத்துங்கள். திட்டங்களை எடுத்து பேசுங்கள், மக்களை சந்தித்து மக்களோடு மக்களாக பழகுங்கள், அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுங்கள். இந்தப்பணியை எல்லாம் நாம் சரியாக செய்தால், நிச்சயம் நம்முடைய கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கப்போவது உறுதி. நம்முடைய கழகத் தலைவர் அவர்கள் தொடர்ந்து 2-ஆவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் உட்காரபோவது உறுதி.
நாம் பெறப் போகின்ற வெற்றி, சாதாரண வெற்றியாக இருக்கக் கூடாது. 70 ஆயிரம் பூத்லயும், நிச்சயம் உதயசூரியன் வெற்றி பெற்று ஆக வேண்டும். 70 ஆயிரம் பூத்லயும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். நம்முடைய தோழமைக்கட்சிகள் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதற்கு இந்த இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிச்சயம் ஒரு அடித்தளமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
இங்கே வந்திருக்கக்கூடிய இளைஞரணி தம்பிமார்கள், நீங்கள் திரும்பி செல்லும்போது ஒவ்வொரு இளைஞரணி நிர்வாகியும், அந்த உறுதியோட, அந்த நம்பிக்கையோட நீங்கள் சொல்ல வேண்டும். திருவண்ணாமலையில் கூடினோம், திக்கெட்டும் தமிழ்நாட்டில் வென்றோம் என்று, நாளைய வரலாறு சொல்ல வேண்டும்.
இந்த நேரத்தில், இறுதியாக ஒரு விஷயத்தை தலைவர் அவர்களிடம் சொல்ல விரும்புகின்றேன். இளைஞரணி தம்பிமார்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியோட படையெடுப்பை தாக்குப் பிடிக்க முடியாமல், எதிரில் இருந்த எல்லா நாடுகளும் ஜெர்மனிட்ட சரண் அடைந்தார்கள்.
ஆனால், அப்படிப்பட்ட ஜெர்மனியவே, எதிர்த்து நின்றது, ஒரே ஒரு ரஷ்ய நகரம், அந்த நகரம் தான் தோற்கடித்தது. அந்த நகரத்தினுடைய பெயர் ‘ஸ்டாலின் கிராட்’. அதே மாதிரி, நம் நாட்டில் பாசிஸ்ட்டுகளுக்கு எதிரான போரில், இந்தியாவின், ஸ்டாலின்கிராடாக இருந்து, நம்முடைய தமிழ்நாடு களத்தில் நின்று வெற்றி பெற்று காட்ட வேண்டும். நம்முடைய தலைவர் அவர்கள் தலைமையை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
அதற்கு, இங்கே கூடியிருக்கக்கூடிய லட்சோப லட்ச இளைஞரணி பட்டாளம், நம்முடைய தலைவர் அவர்களின் கரங்களை நாம் வலுப்படுத்த வேண்டும்.
வென்றோம் இருநூறு! படைத்தோம் வரலாறு!! என்ற சாதனையை படைக்க அடுத்த 100 நாட்கள் இளைஞரணி தம்பிமார்கள் களத்தில் இருந்து உழைப்பதற்கு நாங்கள் தயார், தயார் என்று தலைவரிடத்தில் நாங்கள் உறுதி சொல்கின்றோம். இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி, விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.






