
சென்னை, கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஆசிப். பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் கேரம் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். தேசிய, மாநில அளவில் கேரம் விளையாட்டில் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றுள்ளார். அதேநேரம், உணவு டெலிவரி வேலை செய்து கொண்டு, தனது அம்மா மற்றும் இரு சகோதரிகளை கவனித்து வருகிறார் அப்துல் ஆசிப்.
இந்நிலையில் மாலத்தீவில் நடைபெற்ற 7 ஆவது உலகக் கோப்பை கேரம் போட்டியில் விண்ணப்பித்து இருந்தார். இதில் பங்கேற்க அவருக்கு அழைப்பும் வந்தது. ஆனால் இதற்கு தேவையான பணம் இல்லாமல் தவித்துள்ளார்.
பின்னர் இந்த போட்டி குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தனக்கு உதவும் படி கோரியுள்ளார். இவரது திறமை மீது நம்பிக்கை வைத்து துணை முதலமைச்சர் நிதியுதவி அளித்து வாழ்த்தி அவரை மாலத்தீவிற்கு அனுப்பிவைத்தார்.

157 பேர் கலந்து கொண்ட ஸ்விஸ் லீக் போட்டியில் கடந்த முறை உலக கோப்பையை வென்ற சந்திப் திவீ மற்றும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த வீரர் உட்பட ஏழு நாடுகளை சேர்ந்த வீரர்களை வென்று அப்துல் ஆசிப் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வைத்த நம்பிக்கையையும் காப்பாற்றி வெற்றியுடன் சென்னை திரும்பியுள்ளார் இந்த உணவு டெலிவரி இளைஞர் அப்துல் ஆசிப்.
இந்த வெற்றி குறித்து பேசும் அப்துல் ஆசிப்," 15 வயதிலிருந்தே கேரம் விளையாடி வருகிறேன். மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல வெற்றிகளை பெற்றுள்ளேன். கேரம் உலகக்கோப்பை போட்டியில் தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றிகள்.






