தமிழ்நாடு

“இது ஆன்மிகம் அல்ல; கேடுகெட்ட அரசியல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

தமிழ்நாட்டில் என்றைக்கும் தந்தை பெரியார் இயற்றிய சமத்துவ தீபம்தான் ஒளிரும்.

“இது ஆன்மிகம் அல்ல; கேடுகெட்ட அரசியல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.12.2025) மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை:-

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்; வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மண்; முக்கியமாக, ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண்! திருச்செந்தூர் முருகனின் வேலுக்காக தலைவர் கலைஞர் நீதி கேட்டு, நெடும்பயணம் தொடங்கிய மண், இந்த மதுரை மண்!

மதுரைக்காரர்கள் என்றாலே, பாசக்காரர்களாக இருப்பார்கள்! அப்படிப்பட்ட உங்களையெல்லாம் சந்திக்கின்ற இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்!

இந்த மாமதுரைக்கு வளர்ச்சி என்றாலே, அது தி.மு.க. ஆட்சியில் தான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்! ஆனால், கடந்த கால கழக ஆட்சிகளில் மதுரைக்காக நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன்!

சுப்பிரமணியபுரத்தில், ‘மதுரை முத்து மேம்பாலம்’ - ஆண்டாள்புரம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பாலம் - மதுரை தெற்குவாசல் தியாகி என்.எம்.ஆர்.சுப்புராமன் மேம்பாலம் - மானம் காத்த மருதுபாண்டியருக்கு சிலை - பரிதிமாற் கலைஞருக்கு மணிமண்டபம்! ‘திராவிட மொழிநூல் ஞாயிறு’ தேவநேய பாவாணருக்கு மணிமண்டபம்! மதுரா கோட்ஸ் மேம்பாலம்!  ஆனைக்கல் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம்! வைகை ஆற்றின் குறுக்கே மூன்று தரைப் பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள்!  தத்தநேரி இருப்புப்பாதை உயர்மட்ட மேம்பாலம்!  மதுரை வடபகுதி ரிங்ரோடு! மாட்டுத்தாவணியில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்! வணிக வளாகம்! பூ மார்க்கெட்! சென்ட்ரல் மார்க்கெட்!  எல்லீஸ் நகர் மேம்பாலம்! இரண்டு பாலிடெக்னிக்குகள்! வைகை இரண்டாம் குடிநீர்த் திட்டம்! காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம்! வாடிப்பட்டி கைத்தறி ஜவுளி பூங்கா! மதுரை மாவட்ட நீதிமன்றம்! சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்கு அடித்தளம்! இப்படி, கழக அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மதுரையை, அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் நிகழ்ச்சிதான் இந்த அரசு நிகழ்ச்சி!

பெரும் சாதனையாக, நம்முடைய ஆட்சித் தலைவர் அவர்கள் வரவேற்புரை ஆற்றுகின்றபோது குறிப்பிட்டுச் சொன்னார்; ஒரு இலட்சம் நபர்களுக்கு பட்டா வழங்க இருக்கிறோம்! முல்லைப் பெரியார் குடிநீர் திட்டமாக, 2 இலட்சத்து 58 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்குவதை தொடங்கி வைத்திருக்கிறேன். இதுவரை நாம் நடத்தி இருக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் ஒரு மிகப் பெரிய அரசு விழா இந்த விழா தான்! 

அதற்காக அமைச்சர் மூர்த்தியின் பிரம்மாண்ட ஏற்பாட்டுத் திறனை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்; நான் வியந்து நிற்கிறேன்! சித்திரை திருவிழாவில் தான் மதுரையே குலுங்குகின்ற அளவுக்கு கூட்டம் கூடும்! அதுபோல, இங்கே ஒரு அரசு திருவிழாவையே, நம்முடைய மாண்புமிகு அமைச்சர் திரு. மூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்.

தன்னுடைய துறைகள் மூலமாக, தமிழ்நாட்டு கருவூலத்திற்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தந்து நல்ல பெயர் பெற்ற திரு. மூர்த்தி, இன்றைக்கு இது அரசு விழாவா! அல்லது மாநாடா! என்று சொல்லக்கூடிய வகையில் மதுரை மக்களிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கிறார். அவருடைய பணிகள் தொடர்ந்து சிறக்க என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்! 

அதேபோல, இந்த மாவட்டத்தின் மற்றொரு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள். ஆற்றலும், அறிவும், ஆக்கப்பூர்வமான சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர்.  சிறந்த இறைப்பற்றாளர்! அதே நேரத்தில், கடவுளின் பெயரில் வெறுப்பை விதைக்கக் கூடியவர்களுக்கு சரியாக தன்னுடைய ஸ்டைலில் பயன்படுத்தி பதிலடி கொடுப்பவர்!  அவருக்கும் என்னோட பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

இவ்வளவு பெரிய விழாவில், நலத்திட்ட உதவிகள், பட்டா என அனைத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்து காட்டியிருக்கும், நம்முடைய மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் அவர்களுக்கும், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட மதுரை மாவட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

கடந்த கால அவல ஆட்சியிலிருந்து, தமிழ்நாட்டை மீட்டு, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், புது விடியலை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த இந்தியாவும், ஏன், உலக நாடுகளும் திரும்பி பார்க்கின்ற அளவுக்கு, முற்போக்கான, முன்னோடியான மக்கள் நலத் திட்டங்களை கடந்த நான்கு ஆண்டு காலங்களில் நாம் நிறைவேற்றி இருக்கிறோம்; தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்!

அந்த முத்திரை திட்டங்களிலேயே, அதிக பயனாளிகளைக் கொண்டது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்தான்! மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 இலட்சத்து 54 ஆயிரம் சகோதரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டு வருகிறோம்!

அதேபோல, உங்கள் வீட்டில் காலேஜ் செல்கின்ற மாணவிகள் இருந்தால்,  அவர்கள் படிப்பை முடிக்கின்ற வரைக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதுதான் ’புதுமைப்பெண் திட்டம்’! மதுரை மாவட்டத்தில் மட்டும், 63 ஆயிரத்து 400 புதுமைப்பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டு வருகிறோம்!

பெண்களைப் போலவே, மாணவர்களுக்கும் இப்படி ஒரு திட்டம் வேண்டும் என்று உருவாக்கியது தான் தமிழ்ப்புதல்வன் திட்டம். மதுரை மாவட்டத்தில் மட்டும் 31 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

உங்கள் எல்லோருடைய வீட்டிலும், பள்ளிக்கூடம் செல்கின்ற குழந்தைகளும் இருப்பார்கள். காலையில் பெரும்பாலும் சாப்பிடாமல் செல்வார்கள். அனுப்பிவிடுவீர்கள். அதை மாற்றவேண்டும் என்று முடிவு செய்து, இதே மதுரையில் தான், நான் தொடங்கி வைத்த காலை உணவுத் திட்டத்தில், 59 ஆயிரத்து 394 பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த மதுரை மாவட்டத்தில் மட்டும் சூடான, சுவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்படுகிறது.

“இது ஆன்மிகம் அல்ல; கேடுகெட்ட அரசியல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

சிறியதாக உடம்புக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு செக்கப் செய்யவேண்டும் என்றாலும் கூட டவுனுக்குச் சென்று ஆஸ்பிட்டலில் நிற்க வேண்டும்; சிறியதாக ஏற்படக்கூடிய விபத்தாக இருந்தாலும், ஏதேனும் சிறிது நோய் வந்தாலும், உங்களின் வீடுகளுக்கே தேடி வந்து, பரிசோதனை செய்து, மருந்துகள், ‘ஃபிசியோ-தெரபி’ சிகிச்சை போன்றவற்றை வழங்குகின்ற ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில், உங்கள் மாவட்டத்தில் எத்தனை நபர்கள் பயன்பெற்று இருக்கிறார்கள் தெரியுமா? 8 இலட்சத்து 60 ஆயிரம் நபர்கள்!  

விபத்து நடந்தால், முதல் 48 மணி நேர உயிர்காக்கும் சிகிச்சைக்கான செலவை, அரசே ஏற்றுக் கொள்கின்ற, “இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” திட்டத்தின்கீழ், மதுரை மாவட்டத்தில் மட்டும் 16 ஆயிரம் நபர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது!

“இல்லம் தேடிக் கல்வி - எண்ணும் எழுத்தும்” திட்டங்களில், மதுரை மாவட்டத்தில், மூன்று இலட்சம் மாணவ – மாணவிகளுக்கு வீட்டுக்கே சென்று பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். படித்து, டிகிரி பெற்றால் மட்டும் போதாது! வேலைவாய்ப்பைப் பெற வைப்பதற்காக, திறன் பயிற்சிகள் மிகவும் முக்கியம் என்று உணர்ந்து, நான் தொடங்கிய கனவுத்திட்டம்தான் ”நான் முதல்வன் திட்டம்”!

பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து படிக்க வேண்டிய ஸ்பெஷல் கோர்ஸ் எல்லாம் எந்த கட்டணமும் இல்லாமல், இதில் சொல்லி தரப்படுகிறது!  அப்படி, மதுரை மாவட்டத்தில் மட்டும் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன்பயிற்சி அளித்திருக்கிறோம்! இவர்களில் பலர், ஆண்டுதோறும் நம்முடைய அரசு நடத்துகின்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, அவர்களுடைய வெற்றிக் கதையை பகிர்ந்து கொள்வதையும் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்! பூரிப்பு அடைந்திருப்பீர்கள்!

இப்போது அண்மையில், அரசு சேவைகள் அனைத்தையும் ஒரே முகாமில் கொண்டு வந்து, உடனடியாகத் தீர்வு காணவேண்டும் என்று கொண்டு வந்ததுதான் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்! இங்கே இருக்கின்ற அனைவருமே அந்த கேம்ப்புக்கு சென்றிருப்பீர்கள். உங்களைப் போல
75 ஆயிரத்து 597 பேர் மதுரை மாவட்டத்தில், “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பயன் பெற்றிருக்கிறார்கள்.  

அதுகூடவே, நான் தொடங்கி வைத்த இன்னொரு திட்டம் “நலம் காக்கும் ஸ்டாலின்”! உங்களுடைய நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைக்கும் ஏற்பாடு செய்து, மேல்சிகிச்சையையும் உறுதி செய்கின்ற இந்த திட்டத்தில், 22 ஆயிரத்து 766 நபர்கள் மதுரை மாவட்டத்தில் நலம் பெற்றிருக்கிறார்கள்.

வயதான தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளிடம் ரேசன் பொருள்களை வீடுகளுக்கே சென்று வழங்குகின்ற தாயுமானவர் திட்டத்தில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த, 86 ஆயிரத்து 130 பயனாளிகள் மாதா மாதம் பலன் பெறுகிறார்கள்!

முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ், மதுரை மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட, 3 இலட்சத்து 75 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு கண்டிருக்கின்றோம்!

மதுரை மாவட்டத்தில், தாய், தந்தையரை இழந்த 341 குழந்தைகளை “அன்புக்கரங்கள் திட்டம்” மூலமாக இந்த அரசு பாதுகாக்கின்றது! 4 ஆயிரத்து 196 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை இந்த மதுரை மாவட்டத்தில் வழங்கியிருக்கிறோம்! இவைகள் அனைத்தும், நம்முடைய முத்திரைத் திட்டங்களில் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற லிஸ்ட் மட்டும்தான்!

இப்படி, ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு பயனாளிகள் என்று பட்டியலிட்டு சொல்ல ஆரம்பித்தால், இந்த ஒரு நிகழ்ச்சி போதாது!  ஒவ்வொரு நாளும் இத்தனை இலட்சம் மக்கள் பயனடைகின்றது போல, நாம் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான், எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார்கள். வயிற்றெறிச்சலிலும், ஆற்றாமையிலும், ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள். நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் ‘வேறு’ அரசியலை பேசுகிறார்கள். நான் உறுதியாக சொல்கிறேன்.. அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அத்தனையும் நாங்கள் முறியடிப்போம்! அதை சிதைப்போம்! இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் அந்த “பாச்சா” எல்லாம் பலிக்காது! எதுவும் எடுபடாது!

நேற்று முன்தினம் நான் ஒரு ட்விட் செய்திருந்தேன். பார்த்திருப்பீர்கள் – படித்திருப்பீர்கள் – மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல் – அதை நிரூபிக்கின்ற வகையில் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு, 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 56 ஆயிரத்து 766 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்து கொண்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இதுதான் எங்கள் அரசியல். மதுரையையும், அதை சுற்றி இருக்கின்ற பகுதியையும், நல்ல தரமான உயர்தர வேலைவாய்ப்புள்ள இடங்களாக உருவாக்க வேண்டும் என்று இந்த அரசு ஓயாமல் பாடுபடும்.

சிலவற்றை கம்பேர் செய்து சொல்கிறேன்., நீங்களே சிறிது யோசித்து பாருங்கள்! நாம் ஆட்சிக்கு வந்ததும் இந்த மதுரையில், ஒரு அறிவுத் திருக்கோயிலாக, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என்று அறிவித்தோம். அதை நாம் சொன்ன காலத்துக்கு முன்பே, பெரிதாக கட்டி முடித்து, இப்போது பல இலட்சம் நபர்கள் பயனடைந்து கொண்டு வருவதை நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், பத்து வருடத்திற்கு முன்பு, ஒன்றிய பா.ஜக. அரசு, மதுரைக்கு அறிவித்த எய்மஸ் மருத்துவமனை என்ன ஆனது? இன்னும் வரவில்லை! 

மதுரை மண்ணில் நம்முடைய வீர விளையாட்டான ஜல்லிகட்டுக்கு, உலக தரத்தில், 62 கோடி ரூபாயில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு அறிவிப்பை அறிவித்துவிட்டு, அறிவிப்போடு நிறுத்திக் கொள்ளாமல், அதை அமைத்திருக்கிறோம். இதே பாஜக அரசு நம்முடைய மதுரையில் நடந்த கீழடி அகழ்வாராய்ச்சியை நிறுத்தப் பார்த்தார்கள்.

நாம் ஆட்சிக்கு வந்ததும், பல கட்டங்களாக கீழடி ஆராய்ச்சியை முன்னெடுத்து வருவது மட்டுமல்லாமல், இதுவரை கிடைத்த தொல் பொருட்களை கொண்டு பிரம்மாண்டமான கீழடி அருங்காட்சியகம் அமைத்திருக்கிறோம்!

உலகம் முழுவதும் இருந்து கீழடி அருங்காட்சியகத்தை பார்ப்பதற்கு தமிழர்கள் வருகிறார்கள். ஆனால், இந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு கீழடி ஆய்வறிக்கை கூட வெளியே வந்துவிடக் கூடாது என்று தமிழ் மீது வெறுப்புடன் நடந்து கொள்கிறார்கள்.

மதுரையில் உலகத் தரத்தில் ஹாக்கி மைதானத்தைத் திறந்து வைத்திருக்கிறோம்! 24 நாடுகள் கலந்து கொள்கின்ற ஜுனியர் ஹாக்கி உலக கோப்பை நம்முடைய மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கின்றது? குஜராத் போன்று, அவர்கள் கட்சி ஆளுகின்ற மாநிலங்களுக்கு விளையாட்டு நிதியை கொட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு என்றால் ஒன்றும் கிடையாது!

விளையாட்டில் மட்டுமல்ல, மதுரையை முக்கிய தொழில் மையமாக உயர்த்துவதற்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி வேலைவாய்ப்பை நாம் கொண்டு வருகிறோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசை சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? நம்முடைய இளைஞர்களை பகோடா விற்க செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். இதுதான் உங்கள் தரம். நம்முடைய இளைஞர்களுக்கு மதுரையில் பெரிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும். நாங்கள் அதற்காக தான் மாட்டுத்தாவணியில், டைடல் பூங்கா அமைக்கிறோம். ஆனால், ஒன்றிய அரசு என்ன செய்கிறார்கள்?

மதுரைக்கு மெட்ரோ ரயில் வேண்டும் என்று நாம் கேட்டால், அதை வேண்டாம் என்று சொல்கிறார்கள். சப்பையான காரணங்களை எல்லாம் சொல்லி, நிராகரிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பா.ஜக. தலைவர்கள் “மதுரைக்கு மெட்ரோ தேவையில்லை” என்று திமிராக வேறு பேசுகிறார்கள். சரி இவர்கள் சொல்கின்ற லாஜிக்படி பார்த்தால், பா.ஜ.க. ஆளுகின்ற வட மாநிலங்களில் இருக்கின்ற பாட்னா, ஆக்ரா, இந்தூர் ஆகியவற்றில் எல்லாம் மெட்ரோ ரயிலுக்கு எப்படி ஒப்புதல் கிடைத்தது? ஏன், எங்கள் மதுரையில் மெட்ரோ இரயில் ஓடக் கூடாதா? மதுரைக்காரர்கள் என்றால், உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?

எங்கள் அரசில், இன்னும் மதுரைக்கு நாங்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று சொல்ல வேண்டுமா? 

  • இன்று திறக்கப்பட்டிருக்கின்ற வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்!

  • கோரிப்பாளையம் ஜங்ஷனில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! 

  • பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தில், 70 பள்ளிகளை மேம்படுத்தி இருக்கிறோம்.

  • முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில், 428 பணிகள் நடைபெற்றிருக்கிறது.

  • ஆதிதிராவிடர் நல வீட்டுவசதி திட்டத்தில், 57 பணிகள் நடைபெற்றிருக்கிறது. 

  • காந்தி அருங்காட்சியகத்தில், விடுதலைப் போராட்ட வீரர்களின் கண்காட்சி நடைபெற்றது.

  • அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் பி.கே.மூக்கையா தேவர் அவர்களுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

  • பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்டி திறந்து வைத்திருக்கிறோம்.

மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த நான்கரை ஆண்டு காலங்களில், மதுரை மாவட்ட மக்களுக்கு மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறோம்.

இதுவரைக்கும் 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான, பத்தாயிரம் வளர்ச்சிப் பணிகள் செய்து தந்திருக்கிறோம். இப்போது, ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 358 வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

அது சரி! இத்தனை செய்திருக்கிறோம் என்று சொல்லுகிறீர்களே… புது அறிவிப்பு எதுவும் இல்லையா? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது…ஆமாம்.. உங்களைப் புரிந்துகொண்டவன் நான். என்னைப் புரிந்துகொண்டவர்கள் நீங்கள். நமக்கு இடையில் எந்த சக்தியும் இந்த மண்ணில் புகுந்து பிரிவினையை உண்டாக்க முடியாது. மதுரையின் வளர்ச்சியை தடுக்க முடியாது.  

“இது ஆன்மிகம் அல்ல; கேடுகெட்ட அரசியல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

மதுரைக்கான ஆறு புதிய அறிவிப்புகளை இங்கே அறிவிக்க நான் விரும்புகிறேன்.

முதலாவது அறிவிப்பு –

மதுரை மாநகரில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பல காலமாக எதிர்பார்க்கப்பட்ட வைகை ஆற்றின் வடகரையில், விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு 130 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு -

மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான, மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி இருக்கின்ற நான்கு மாசி வீதிகள், வெளி வீதிகள், புதூர், அண்ணா நகர், சந்தைப்பேட்டை, தெற்குவாசல், எஸ்.எஸ்.காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில், இப்போது இருக்கின்ற பழைய பாதாளசாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

மூன்றாவது அறிவிப்பு -

மதுரை கிழக்கு வட்டத்தில் இருக்கின்ற உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில், 7 கோடி ரூபாய் செலவில், தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நான்காவது அறிவிப்பு -

மேலூர் வட்டத்தில் இருக்கின்ற, கேசம்பட்டி கிராமம் - பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கண்மாய்கள் 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். மேலும், மேலூர் வட்டம், சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு -

மதுரை மேற்கு வட்டத்தில் இருக்கின்ற கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கின்ற பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

ஆறாவது அறிவிப்பு -

வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தில், சாத்தையாறு அணை முதல் வைகாசிப்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை, குடுவார்பட்டி முதல் சல்வார்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை மற்றும் பாலமேடு முதல் வேம்பரலை வரை இருக்கக்கூடிய சாலை ஆகியவை 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் வனத்துறையின் அனுமதி பெற்று அவைகள் மேம்படுத்தப்படும்.

இந்த அறிவிப்புகளை எல்லாம் நான் வெறும் அறிவிப்புகளாக அறிவித்துவிட்டுப் போகிறேன் என்று நினைக்காதீர்கள். இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இப்படி, நம்முடைய சிந்தனை எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி; முன்னேற்றம்தான்! ஆனால், சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான். தேவையில்லாத பிரச்சினையை கிளப்பி, நம்முடைய வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள்.

காலம் காலமாக கார்த்திகை தீபத்துக்கு, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தீபம் ஏற்றுவது போல, கடந்த 3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு, பால தீபம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு, அதேநேரத்தில், உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்திலும் தீபம் ஏற்றி, சாமி புறப்பாடாகி, பதினாறு கால் மண்டபத்திற்கு எதிரே இருக்கும் இடத்தில், சொக்கப்பான் ஏற்றி, சாமிக்கு ரக்ஷை சாத்தப்பட்டது. இவையெல்லாம், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முறையாக நடைபெற்றது. இவைகள் எல்லாம் உள்ளூர் மக்களுக்கும், உண்மையான பக்தர்களுக்கும் இது நன்றாக தெரியும்! அவர்கள் நல்லபடியாக தரிசனம் செய்துவிட்டு தான் வீட்டிற்குச் சென்றார்கள். ஆனாலும், இப்போது என்ன காரணத்துக்காக பிரச்சினை நடைபெறுகிறது? இந்தப் பிரச்சினையைக் கிளப்புகின்ற கூட்டத்தின் நோக்கம் என்ன? இவையெல்லாமே மக்களுக்கு, நன்றாகவே தெரியும்.  

ஆன்மீகம் என்பது, மன அமைதியை, நிம்மதியை தந்து, மக்களை ஒற்றுமையாக இருக்க வைக்கவேண்டும்.  நான்கு பேருக்கு நன்மை செய்யவேண்டும்! இதுதான் உண்மையான ஆன்மீகமாக இருக்க முடியும்! ஒரு சிலருடைய அரசியல் இலாபங்களுக்காக பிரிவுகளையும், பிளவுகளையும் உண்டாக்கி, சமூகத்தை துண்டாடும் சதிச்செயல்கள் நிச்சயமாக ஆன்மீகம் இல்லை! அது அரசியல்! அதிலும் கேடுகெட்ட மலிவான அரசியல்!

தீபம், எங்கே ஏற்றப்பட வேண்டுமோ, எப்போது ஏற்றப்பட வேண்டுமோ, அங்கே வழக்கம்போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டிருக்கிறது! நான் இன்னும் பெருமையோடு பக்தப் பெருமக்களுக்கு சொல்கிறேன்.. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்து ஆயிரத்து 490 நாளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.

இப்போது அந்த எண்ணிக்கை இன்னும் கூடியிருக்கும். இப்படிப்பட்ட அரசை, ஆன்மீகத்துக்கு எதிரி என்று சொன்னால், அப்படி சொல்லக் கூடியவர்களுடைய உள்நோக்கம் என்ன என்று, உண்மையான பக்தர்களுக்கு தெளிவாக தெரியும். அறத்தைக் கொண்டாடும் அமைதியான மாநிலமாகதான் தமிழ்நாடு என்றைக்கும் இருக்கும்!

மதுரை மக்களிடம் வளர்ச்சி என்று சொன்னால், வாங்க! வாங்க! என்று வரவேற்பார்கள். அதுவே வன்முறையை தூண்ட கூப்பிட்டால், என்ன செய்வார்கள் தெரியுமா?

மதுரை ஸ்லாங்கில் சொல்ல வேண்டும் என்றால், கலவரக் கும்பலை பொடனிலேயே அடிச்சு ’வெரட்டுவாய்ங்க!’ அமைதியின் பக்கம் நிற்கின்ற, மதுரை மக்களுக்கு நான் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! 

நம்முடைய எதிரிகள், டெல்லியில் இருந்து நமக்கு எத்தனை இடைஞ்சல்கள் கொடுத்தாலும், நிதி நெருக்கடிகள் ஏற்படுத்தினாலும், ஆளுநர் மூலமாக, முட்டுக்கட்டைகள் போட்டாலும், எல்லாவற்றையும் மீறி, இந்தியாவிலேயே நம்பர்-1-ஆக வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்திருக்கிறது!

எங்களுடைய வளர்ச்சிப் பயணத்தை, உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் சதித்திட்டங்கள் எல்லாம் நீங்கள் செய்கிறீர்கள்! நீங்கள் எப்படி பந்து வீசினாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் அது அடிப்பது சிக்சர்தான்! அந்த டீமுக்கு ஏற்றார்போல அடிமைகள் சிக்கலாம். பழைய அடிமைகள், புது அடிமைகளை வைத்து, ‘பி’ டீம், ‘சி’ டீம் உருவாகலாம். ஆனால், கடைசியில் டோர்னமென்ட்டில் சாம்பியன் நாங்கள் தான்!

வருகின்ற 15-ஆம் தேதியில் இருந்து, ஏற்கனவே, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனடைகின்ற ஒரு கோடியே 14 இலட்சம் மகளிரோடு சேர்த்து, விடுபட்ட தகுதியான மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப் போகிறோம்! 

கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம் - நான் முதல்வன் - புதுமைப்பெண் – தமிழ்ப்புதல்வன் என்று எண்ணற்ற திட்டங்களால், தமிழ்நாட்டை உயர்த்தும் - எங்களின் சாதனை பயணம் - திராவிட மாடல் 2.0-விலும் உங்களின் ஆதரவுடன் தொடரும்… மக்களுக்கான நன்மைகள் பெருகும்… இங்கே திரண்டிருக்கின்ற, மதுரை மக்கள் மீதான நம்பிக்கையில் சொல்கின்றேன். அனைத்து மதத்தினரும், அங்காளி, பங்காளியாக பழகுகின்ற, பாசக்கார மதுரை மண்ணிலிருந்து உறுதியாக சொல்கின்றேன். எங்கள் தமிழ்நாட்டில், என்றைக்கும் பெரியார் ஏற்றிய, சமத்துவ தீபம்தான் ஒளிரும்!  உங்களால் அதை தடுக்க முடியாது! “எதிர்த்துக் கேட்க ஆள் இருக்கிறது! உள்ளே பெரியார் ஏற்றிய நெருப்பிருக்கிறது!” 

2026-லும் அதே ஃபயருடன், திராவிட மாடல் அரசுதான் தொடரும்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories