
சென்னை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப வழங்கினால் மட்டுமே வாக்காளர்கள் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை தங்களிடமிருந்து பெறவில்லை எனில் 1913 என்ற உதவி எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தகவல். இது குறித்த விரிவான விளக்கம் பின்வருமாறு,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கான கணக்கீட்டுப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு வழங்கும் பணியானது 04.11.2025 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் வாயிலாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதற்கு உதவிடும் வகையில், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழிகாட்டுதலுடன் படிவத்தினை பூர்த்தி செய்யவும் வழிவகை செய்யப்பட்டதன் மூலமாக பெரும்பாலான கணக்கீட்டுப் படிவங்கள் பெறப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கி திரும்ப பெறும் பணியினை 04.12.2025க்குள் முடித்திட அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் இந்திய தேர்தல் ஆணைத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணியை முழுமையாக பூர்த்தி செய்திடும் வகையிலும், வாக்காளர்கள் இறுதிநாளான 04.12.2025 வரை காத்திருக்காமல் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விரைந்து வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கணக்கீட்டுப் படிவத்தினை பூர்த்தி செய்து திரும்ப வழங்கினால் மட்டுமே வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். எனவே, வாக்காளர்கள் தங்களுக்கான கணக்கீட்டுப் படிவத்தினை உடனடியாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெறவில்லை எனில் 1913 என்ற உதவி எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பணியை சென்னை மாவட்டத்தில் நிறைவேற்றுவதற்கு வாக்காளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.






