
குவைத் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 187 பயணிகளுடன், நேற்று நள்ளிரவு குவைத்தில் இருந்து புறப்பட்டு, சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த விமானம் இன்று காலை 6.40 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்க வேண்டும்.
ஆனால் இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்துள்ளார். இதை அடுத்து இந்த நிலையில், விமானத்தை தொடர்ந்து இயக்க விரும்பாத விமானி, விமானத்தை அவசரமாக, தரை இறக்க முடிவு செய்தார்.
அதன்படி அருகில் இருந்த ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, விமானத்தை, மஸ்கட் விமான நிலையத்தில், இன்று அதிகாலை அவசரமாக தரையிறக்கினார். அதன் பின்பு அந்த விமானம், தொழில்நுட்ப கோளாறு சீர் செய்த பின்பு, மீண்டும், மஸ்கட்டில் இருந்து தாமதமாக புறப்பட்டு, இன்று காலை 10.30 மணிக்கு, சென்னை வந்து சேர்ந்தது.

இதற்கு இடையே இந்த குவைத் ஏர்லைன்ஸ் விமானம், வழக்கமாக காலை 6.40 மணிக்கு, சென்னைக்கு வந்து விட்டு, சென்னையில் இருந்து மீண்டும் காலை 7.40 மணிக்கு, குவைத்திற்கு புறப்பட்டு செல்லும். அதைப்போல் இன்று காலை 7.40 மணிக்கு, குவைத் செல்ல இருந்த, குவைத் ஏர்லைன்ஸ் விமானத்தில் 180 பயணிகள் பயணிக்க இருந்தனர். அவர்கள் அனைவரும், அதிகாலை 4.30 மணிக்கு முன்னதாகவே, சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். ஆனால் விமானம், சென்னைக்கு வந்து சேராததால், சென்னையில் இருந்து குவைத் செல்ல வேண்டிய குவைத் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலதாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் பின்பு விமானம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்ததும், சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த 180 பயணிகள், அந்த விமானத்தில் ஏற்றப்பட்டு, சென்னையில் இருந்து, குவைத்து செல்லும் குவைத் ஏர்லைன்ஸ் விமானம், சுமார் 4 மணி நேரம் தாமதமாக, என்று பகல் 11.40 மணிக்கு, 180 பயணிகளுடன், குவைத் புறப்பட்டு சென்றது. இதனால் குவைத் பயணிகள் சென்னை விமான நிலையத்தில் இன்று பல மணி நேரம் காத்திருந்து கடும் அவதி அடைந்தனர்.






