தமிழ்நாடு

“ரூ.42 கோடியில் 1,000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்!” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்!

”முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்” அமைப்பது குறித்து வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“ரூ.42 கோடியில் 1,000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்!” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் வேளாண் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் ”முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்” அமைப்பது குறித்து வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, 2025-26ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களின் படிப்பறிவும், தொழில்நுட்பத்திறனும் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் 1,000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக 42 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்தும் விதமாக, வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மைப் பொறியியல் ஆகிய துறைகளின் மூலம் பல்வேறு துரித நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியானவுடன் வேளாண் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற இளைஞர்கள் மத்தியில் இத்திட்டம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதுவரை 1,768 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இவற்றுள் வங்கிகளில் கடன்பெறும் வகையில் 973 விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வங்கிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு 413 இளைஞர்கள் வங்கிக்கடன் பெற்றுள்ளனர். விண்ணப்பித்துள்ள ஏனைய இளைஞர்களுக்கும் வங்கிக்கடன் பெறுவதற்காகன நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

“ரூ.42 கோடியில் 1,000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்!” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்!

மேலும், தகுதியின் அடிப்படையில் பயனாளர்களை தேர்வு செய்திட ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவும், வேளாண்மை இயக்குநர் தலைமையில் மாநில அளவிலான தேர்வுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 248 தகுதியான பயனாளர்களுக்கு மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான தேர்வுக்குழுவால் 237 பயனாளர்களுக்கு இறுதி ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

பயனாளி இளைஞர்களுக்கு உழவர் நல சேவை மையங்களை திறம்பட நிர்வகிக்கும் பொருட்டு 15 நாட்களுக்கு மாவட்டங்களில் உள்ள உழவர் பயிற்சி நிலையம் / வேளாண்மை அறிவியல் நிலையங்களில் உரிய பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன், 10 இலட்சம் ரூபாய் முதல் 20 இலட்சம் ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் உழவர் நல சேவை மையங்கள் முறையே 300 சதுர அடி மற்றும் 600 சதுர அடி கார்பெட் பரப்பில் அமைத்திட 30 சதவீத மானியமாக 3 இலட்சம் ரூபாய் முதல் 6 இலட்சம் ரூபாய் வரை இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.

இம்மையங்களில் உழவர்களுக்குத் தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும். பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

மேலும், சிறிய இயந்திரங்கள் மற்றும் அதன்மூலம் இயங்கக்கூடிய வேளாண் இயந்திரங்கள், கருவிகள் போன்றவை அரசு நிர்ணயித்த வாடகையிலும், டிரோன்கள் மூலம் பயிர்பாதுகாப்பு மருந்துகள் தெளிப்பு சேவைகளும் வழங்கப்படுவதுடன், நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.

விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், வங்கிகளில் கடன் பெறுதல் போன்ற நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மைப் பொறியியல் ஆகிய துறை அலுவலர்கள் இளைஞர்களுக்கு வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தில் அதிக அளவில் வேளாண் பட்டம் / பட்டயம் படித்த 20 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இணைய வேண்டும் என்றும், ஆர்வமுள்ள இளைஞர்கள் விரிவான திட்ட அறிக்கையுடன் வங்கிகளில் கடன் ஒப்புதல் பெற்று https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register எனும் இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையுமாறு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

banner

Related Stories

Related Stories