தமிழ்நாடு

”பாஜகவும், அடிமைக் கூட்டமும் செய்திடும் SIR சூழ்ச்சியை முறியடிப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!

தி.மு.க என்பது போராட்டத்தாலும், தியாகத்தாலும் உருவான இயக்கம். தமிழ்நாட்டில்தான், திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சி, ஆனால், டெல்லியில் திராவிட முன்னேற்றக் கழகம் தான் முக்கிய எதிர்க்கட்சி.

”பாஜகவும், அடிமைக் கூட்டமும்  செய்திடும் SIR சூழ்ச்சியை முறியடிப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திராவிட இயக்கத்தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் அவர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர் அண்ணன் எஸ்.பி.முத்துராமன் அவர்களுடைய தந்தை மறைந்த ‘பெரியார் பெருந்தொண்டர்' காரைக்குடி இராம.சுப்பையா அவர்களின் 118-வது பிறந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசியது வருமாறு:-

பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி இராம.சுப்பையா அவர்களின் 118-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, உங்களிடையே பேசுவதில் மிகுந்த பெருமை அடைகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை அடைகிறேன் என்கிற இந்த சொல்லுக்குள் பல பெருமைகள் அடங்கும். ஆனால், தைரியமாக இன்னொரு வார்த்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த மேடையில் பேசும் போது, மகிழ்ச்சியும் பெருமையும் மட்டுமல்ல, என் பொது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே இந்த மேடையை கருதுகிறேன். அதுவும் அண்ணன் சுப.வீ அவர்களுக்கு பிடித்த கருப்புச் சட்டையைப் போட்டுக் கொண்டு, ஒரு காதலி, காதலனை இம்பிரஸ் செய்வதற்கு அல்லது ஒரு காதலன், காதலியை இம்பிரஸ் செய்வதற்கு, என்னென்ன முயற்சிகள் எல்லாம் செய்வார்கள். அப்படி நான் இன்னும் முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன்.

ஒரு பத்து நாட்களுக்கு முன்பு நம் கழகத் தலைவர் அவர்கள் என்னை அழைத்து, ``நவம்பர் 14-ஆம் தேதி நீ டெல்லிவரை ஒரு நிகழ்ச்சி செல்ல வேண்டும். காலையில் சென்று, முடிந்தால் இரவு வந்துவிடு’’ என்று சொன்னார். ``நான் முடியாது’’ என்று சொன்னேன். ``இவன் இப்படி பேச மாட்டானே’’ என்று என்னை ஆச்சரியமாக பார்த்தார். ``ஏன் முடியாது’’ என்று கேட்டார். ``வேறு எதாவது நிகழ்ச்சிக்கு தேதி கொடுத்திருக்கிறாயா’’ என்று கேட்டார். ``நான் டெல்லி போ’’ என்று சொல்கிறேன், அதைவிட என்ன முக்கியமான நிகழ்ச்சி’’ என்றார்

நான் உடனே, ``காரைக்குடி போகிறேன் அது தெரியாமல் பேசுகிறீர்கள்’’ என்று கேட்டேன். ``காரைக்குடி போகிறாயா, எதற்கு?’’ என்று கேட்டார். நான் காரணத்தை சொன்னவுடன், ``நீ காரைக்குடிக்கு செல், நான் டெல்லிக்கு வேறு யாரையாவது அனுப்பி வைக்கிறேன்’’ என்று சொன்னார்.

இதை ஏன் நான் குறிப்பிடுகிறேன் என்றால், இந்த நிகழ்ச்சி அவ்வளவு முக்கியமான நிகழ்ச்சி. எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என் வாழ்நாளில் மறக்க முடியாக நிகழ்ச்சியாக இருக்கும்.

பேசும்போது அனைவரும் குறிப்பிட்டு சொன்னார்கள், `துணை முதலமைச்சரே வந்திருக்கிறார்’ என்று சொன்னார்கள். உண்மையிலேயே சொல்கிறேன் அந்த எண்ணத்துடன் நான் வரவில்லை. உங்கள் வீட்டு பிள்ளையாக, உங்கள் குடும்பத்தில் ஒருவராக வந்திருக்கிறேன்.

இந்த மிகப்பெரிய வாய்ப்பை, எனக்கு கொடுத்த திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் அண்ணன் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கும், இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு இருக்கிறீர்கள்.

குறிப்பாக, அண்ணன் சுப.வீரபாண்டியன் அவர்கள் சொன்னார்கள். அய்யா இராம.சுப்பையா அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 67 பேர் இந்த விழாவில், கலந்துகொண்டு இருப்பதாக சொன்னார்கள். அதில் ஒரு சின்ன திருத்தம். 67 பேர் இல்லை. என்னையும் சேர்த்து 68-ன்னு வைத்துக் கொள்ளுங்கள். பெரியாரின் தொண்டராக, அண்ணாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர்தான் அய்யா ராம.சுப்பையா அவர்கள்.

த்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தன் சொந்த அண்ணனை போல, அய்யா இராம சுப்பையா அவர்களுடன் உரிமையோடும் – மரியாதையோடும் பழகினார்கள். நம் முதலமைச்சர் அவர்களுக்கும், அய்யா ராம.சுப்பையா அவர்கள் மீதும், அவருடைய தொண்டின் மீதும் மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. கலைஞர் குடும்பத்துக்கும் – அய்யா இராம.சுப்பையா அவர்களின் குடும்பத்துக்கும் 3 தலைமுறை பந்தம், அது இன்றும் நீடித்துக்கொண்டே இருக்கிறது, நீடித்துக்கொண்டே இருக்கும்.

அய்யா இராம.சுப்பையா அவர்களின் வீட்டுக்கு பெயரே சமதர்மவிலாஸ். இந்த பெயரை சூட்டியவர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர். 2015-ஆம் ஆண்டில் அந்த வீட்டை பழமை மாறாமல் புனரமைத்துள்ளார்கள். அப்போது ஒரு நிகழ்ச்சிக்காக நம் பொதுச் செயலாளர் துரைமுருகன் மாமா இந்தப் பக்கம் வந்து இருக்கிறார். அய்யா சுப்பையா அவர்களின் புனரமைக்கப்பட்ட வீட்டையும் சென்று பார்த்து இருக்கிறார். பிறகு சென்னை திரும்பியதும், கலைஞர் அவர்களைப் பார்த்து, சுப்பையா அண்ணன் வீட்டை அப்படியே பழமை மாறாமல் புதுப்பித்து இருக்கிறார்கள்.

அங்கு இருந்த தூண், முற்றம், ஹால் எல்லாமே அப்படியே இருக்கு என்று, துரைமுருகன் மாமா கலைஞர் அவர்களிடம் சொல்லி இருக்கிறார். உடனே கலைஞர் அவர்கள், அண்ணன் சுப.வீரபாண்டியன் அவர்களை பார்த்து, `கிணறு ஒன்று இருந்ததே அதை அப்படியே வைத்திருக்கிறீர்களா’ என்று கேட்டுள்ளார்.

உடனே அங்கு இருந்த நம் கழகத்தலைவர் அவர்கள், ``எப்படிப்பா கிணறு இருந்ததை எல்லாம் இப்போ வரை சரியாக ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்?’’ என்று கேட்டு இருக்கிறார்.

அதற்கு கலைஞர் அவர்கள், ``அந்த கிணற்றில் பலமுறை நானே தண்ணீர் இறைத்துக் குளித்து இருக்கிறேன். எப்படி மறக்க முடியும்”- என்று சொல்லி இருக்கிறார்கள். நான் வளர்ந்த, என்னை வளர்த்த இடம் அது என்று கலைஞர் சொன்னார். அந்த அளவுக்கு கலைஞர் அவர்களுக்கு, அய்யா ராம.சுப்பையா மீதும், அவர்களின் குடும்பத்தின் மீதும் மிகப்பெரிய அளவில் பாசம் உண்டு.

1930-களில், பெரியார் கொள்கைகளை இந்த காரைக்குடி பகுதியில் பரப்புவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நிறைய எதிர்ப்புகள், நேரடியாவும், மறைமுகமாவும் இருந்தன. ஆனால், சுப்பையா அவர்கள் மனம் தளரவில்லை. குடும்பத்துடன் சேர்ந்து சுயமரியாதை இயக்கப் பணிகளை அவர் செய்துகொண்டு இருந்தார். குறிப்பாக, அய்யாவின் துணைவியார் 1935-லேயே, கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் கைம்பெண் மறுமண நிகழ்வுகளை நடத்தி சாதனை புரிந்தவர்தான் அய்யாவின் துணைவியார். அய்யா இராம.சுப்பையா அவர்களின் வாழ்க்கை நாமெல்லாம் படிக்க வேண்டிய ஒரு பாடம்.

”பாஜகவும், அடிமைக் கூட்டமும்  செய்திடும் SIR சூழ்ச்சியை முறியடிப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!

அய்யா இராம.சுப்பையா அவர்களைப் பற்றி சொல்லும் போது, ``உழைப்பு, ஓர் உருவம் பெற்று, அது ஓடியாடி வேலை செய்கிற அதிசயத்தை, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?, பார்க்கவில்லை என்றால் இராம சுப்பையாவைப் பாருங்கள்!’’- என்று கலைஞர் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு கலைஞர் கடிதம் எழுதினார்கள்.

கலைஞர் அவர்கள், அய்யா இராம.சுப்பையாவை பற்றி பேசும் போது, காரைக்குடிக்கும் – கல்லக்குடிக்கும் இருந்த நெருங்கிய தொடர்பு பற்றி பேசியிருகிறார். கலைஞர் அவர்களின் தலைமையில் நடந்த கல்லக்குடி போராட்டம், முதல் அணிக்கு கலைஞர் தலைமை, இரண்டாவது அணிக்குஈ இராம.சுப்பையா அவர்கள், மூன்றாவது அணிக்கு கண்ணதாசன் அவர்கள் தலைமை. தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு போராட்டம். அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கலைஞர் அவர்களுடன் மூன்று மாதங்கள் சிறையில் இருந்தவர்தான் அய்யா இராம.சுப்பையா அவர்கள்.

முதலில் அரியலூர் சிறையிலும், தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு, திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டார்கள். திருச்சி ஜெயிலில் கலைஞர் அவர்களுக்கு 6 மாதம் சிறை, அய்யா இராம.சுப்பையா அவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை. ஜெயிலில் ஒரு `மாதிரி அரசாங்கத்தையே’ கலைஞர் அவர்கள் அமைத்தார்கள். இன்னும் சொல்லப்போனால், அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்த `முதல் அமைச்சரவை’ என்று பலபேர் பேசும்போது குறிப்பிட்டு பேசுவார்கள். அண்ணன் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் சொன்னதைப்போல அந்த அமைச்சரவையில், அய்யா இராம.சுப்பையா அவர்கள்தான் உணவு மந்திரி. ஜெயிலில் எல்லோருக்கும் சரியான நேரத்தில் உணவு சென்று சேருகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அய்யா இராம.சுப்பையா அவர்களின் பொறுப்பு. தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரைக்கும் அண்ணன் ராம.சுப்பையா அவர்கள் முன்னாள் அமைச்சராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தி.மு.க-வைப் பொறுத்தவரைக்கும் அண்ணன் இராம.சுப்பையா முன்னாள் அமைச்சர் என்று சொன்னால் அது மிகையாகாது.

நான் பிறந்த போது, 1977-இல் கலைஞர் அவர்கள், ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக ஜெயிலில்தான் இருந்தார்கள். அப்போது, என்னுடைய தாய் - தந்தைக்கு வாழ்த்து சொல்லும்விதமாக சிறையில் இருந்தே கலைஞர் அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி இருந்தார்கள். அதில், ``அன்புள்ள ஸ்டாலின், உனக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி. உன் மனைவிக்கு என் வாழ்த்துகளைக் கூறவும். 1953-ல் திருச்சி சிறையில் ஆறுமாத தண்டனை பெற்று நானிருந்தபோது நீ கைக்குழந்தை! வீட்டிலிருந்து என்னைக் காண வருபவர்களுடன் குழந்தையாக இருந்த நீயும் வந்து என்னை பார்த்துவிட்டு சென்றாய். 23 ஆண்டுகளுக்குப்பிறகு, 1976-இல் மிசா கைதியாக ஓராண்டு நீ சிறையில் இருந்தபோது நான் உன்னைக் காண வந்து கொண்டிருந்தேன். இப்போது உனக்குப் பிறந்திருக்கிற என் பேரனும் என்னைப் பார்க்க சிறைக்கு வருவான் என்று கருதுகிறேன். இந்த அனுபவங்கள் எவ்வளவு இனிமையானவை பார்த்தாயா? இந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல நமது இயக்கமாம் பெரிய குடும்பத்தில் எத்தனையோ உடன்பிறப்புகளுக்கு இப்படிப்பட்ட சிறை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. புதிய பேரனுக்கு என் வாழ்த்துக்கள்” என்று கலைஞர் அவர்கள் எழுதினார்கள்.

னக்கு இப்படி ஒரு வரலாறு உண்டு. அதேபோல் கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்று, அய்யா இராம.சுப்பையா அவர்கள் சிறையில் இருந்தபோது, அண்ணன் சுப.வீரபாண்டியன் அவர்களும் அவரின் தந்தையை முதன்முதலில் பார்த்ததும், அவரின் தந்தைsயார் சிறையில் இருக்கும்போதுதான்.

இப்படி, கலைஞர் குடும்பத்திற்கும் அய்யா இராம.சுப்பையா அவர்களின் குடும்பத்திற்கும் கொள்கை உறவையும் தாண்டி, ஜெயில் உறவும் இருக்கிறது. அதனால்தான் நான் தைரியமாக சொல்கிறேன், நான் கலைஞருக்கு மட்டும் பேரனில்லை, அய்யா இராம.சுப்பையா அவர்களுக்கும் நான் பேரன்தான். கொள்ளு பேரன் இல்லை, கொள்கை வழி பேரன். இங்கு வந்துள்ள அத்தனைபேரும் கொள்கை வழி பேரன்களாக இருக்க வேண்டும்.

காரைக்குடியில் அன்றைக்கு கட்சி வேலை செய்கிறவர்கள், தங்களின் சாப்பாட்டு பில், பெட்ரோல், டீசல் பில்களை எல்லாம் அய்யா இராம.சுப்பையா அவர்களின் கணக்கில் எழுதிக்கலாம் என்று அவரின் கணக்கில் எழுதி வைத்துக்கொள்வார்கள். இப்படிதான் அவர் கட்சியை வளர்த்திருக்கிறார். ஒரு முறை, சாப்பாட்டு கணக்கும், பெட்ரோல் கணக்கும் அதிகமாக வந்துவிட்டன. அதற்காக அவர் கோபப்படவில்லை. பரவாயில்லையே, இந்த மாதம் நம் கட்சி வேலை அதிகமாகவிட்டது என்று நினைத்திருக்கிறார். அதனால்தான் சாப்பாட்டு பில் அதிகமாக வந்திருக்கிறது என்று பெருமைப்பட்டவர்தான் அண்ணன் இராம.சுப்பையா அவர்கள்.

எல்லாவற்றையும் பாசிட்டிவ்வாக பார்த்தவர்தான் அண்ணன் இராம.சுப்பையா அவர்கள். கட்சி என்று வந்துவிட்டால், எல்லாவற்றையுமே பாசிட்டிவ்வாக மட்டுமே பார்த்தவர்தான் அய்யா இராம.சுப்பையா அவர்கள். அந்த அளவிற்கு எல்லாவற்றையும் தாண்டி, கட்சியையும், கொள்கையைம் நேசித்திருக்கிறார்.

அவரின் காரில் பயணம் செய்யாத தலைவர்களே இல்லை என்று சொல்கிற அளவுக்கு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என பல பேர் அவரின் காரில் பயணம் செய்திருக்கிறார்கள். அவரே ஓட்டிக்கொண்டு கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இப்படி முழுக்க, முழுக்க ஒரு கொள்கைவாதியாக வாழ்ந்தவர்தான் அய்யா இராம.சுப்பையா அவர்கள். ஒரு தியாக வாழ்வு வாழ்ந்த அய்யா இராம.சுப்பையா அவர்களை நம் கலைஞர் அவர்கள் 1972-இல் சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கி அழகு பார்த்துள்ளார்.

கழகத்துக்காக யார் உண்மையாக உழைத்தாலும் அவர்களின் வீட்டுக் கதவை தட்டி பொறுப்பைக் கொடுத்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு கலைஞர் வழியில், நம் கழகத் தலைவர் அவர்களும் அந்த பணிகளைச் செய்து வருகிறார். இயக்குநர் அண்ணன் எஸ்.பி.முத்துராமன் பற்றி இங்கு சொல்ல வேண்டிள அவசியமில்லை. உங்கள் அனைவருக்கும் தெரிந்த மிகப்பெரிய இயக்குநர். இன்றைக்கு சொல்கிறார்கள் பேன் இண்டியா இயக்குநர் என்று சொல்கிறார்கள், 30-40 வருடங்களுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசனை வைத்து ஒரே நேரத்தில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர்தான் அண்ணன் முத்துராமன் அவர்கள்.

எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. அந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கக் கூடியவர்.

ஒரு திரைப்பட வெற்றி விழாவில், ஏவி.எம்.மின் ஏ.வி. மெய்யப்பன் அவர்கள் பேசும்போது, ``எஸ்.பி. முத்துராமன் எங்களுடைய ஏவி.எம்-இல் பயிற்சி பெற்றவர். அவர் எங்கள் வீட்டுப் பிள்ளை" என்று பெருமையாகப் பேசினார். அவர் பேசி முடித்தபிறகு நம் கலைஞர் அவர்கள் பதில் சொல்கிறார். ``எஸ்.பி. முத்துராமன் அவர்கள் எங்களுடைய அண்ணன் காரைக்குடி ராம.சுப்பையா அவர்களின் மகன். அதனால், அவர் முதலில் எங்கள் வீட்டுப் பிள்ளை. அதன் பிறகுதான் ஏவி.எம் வீட்டு பிள்ளை’’ என்று உரிமையோடு சொன்னார் கலைஞர் அவர்கள். அவர் மட்டுமல்ல, பேராசிரியர் அண்ணன் சுப.வீரபாண்டியன் அவர்களும் கலைஞர் வீட்டுப்பிள்ளையாகத்தான் இருந்தார். அண்ணன் சுப.வீரபாண்டியனுக்கும் தனக்குமான அந்தப் பாச உணர்வை பற்றி சொல்லும் போது, கலைஞர் அவர்கள் சொல்லியிருக்கிறார்.

இரும்பை நோக்கி காந்தம் வந்ததா, இல்லை காந்தத்தை நோக்கி இரும்பு வந்ததா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு, நானும் தம்பி சுப.வீரபாண்டியனும் ஒன்றாக இருக்கிறோம் என்று கலைஞர் சொன்னார்கள்.

”பாஜகவும், அடிமைக் கூட்டமும்  செய்திடும் SIR சூழ்ச்சியை முறியடிப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!

2015-ல் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அப்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. அண்ணன் சுப.வீ அவர்கள் தினமும் கலைஞரை சந்தித்து, உரையாடிவிட்டு வருவார். நான்கு நாட்கள் செல்லவில்லை. ஐந்தாவது நாள் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது கலைஞர் அவர்கள், அண்ணன் சுப.வீ-யிடம் சரியாகப் பேசவில்லை. கொஞ்சம் கோபமாக இருந்து இருக்கிறார். ஏன் அண்ணன் செல்ல முடியவில்லை என்றால், அவரின் வீடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

பேசிவிட்டு கீழே வந்த அண்ணன் சுப.வீ. அவர்கள், `ஏன் கலைஞர் அவர்கள் கோபமாக இருக்கிறார்கள். சரியாக பேசவில்லையே’ என்று சண்முகநாதன் அவர்களிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, ``நீங்கள் ஏன் நான்கு நாள் வரவில்லை. அதான் தலைவர் உங்கள் மீது கோபமாக இருக்கார்’’ என்று சொல்லியிருக்கிறார்.

உடனே திரும்பி உள்ள சென்ற, சுப.வீ அண்ணன், கலைஞர் அவர்களிடம், ``அய்யா என் வீட்டை வெள்ளம் சூழ்ந்துவிட்டதால் வர முடியவில்லை’’ என்று விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்.

கலைஞர் உடனே தட்டி கொடுத்து, ``இதை முன்னாடியே சொல்ல வேண்டியதுதானே’’ என்று கலைஞர் அவர்கள் மீது உரிமையுடன் கோபித்துக் கொண்டவர்தான் நம் கலைஞர் அவர்கள். அதன் பிறகு, வெளியூருக்குச் சென்றால் கூட கலைஞர் அவர்களை சந்தித்து சொல்லிவிட்டுச் செல்வதை, அண்ணன் சுப.வீ அவர்கள் வழக்கமாக கொண்டிருந்தார்கள். அண்ணன், சுற்றுப்பயணம் செல்கிறார் என்றால், நம் இன்றைய முதலமைச்சர் அவர்கள் கூட, அண்ணன் சுப.வீ.யைப் பார்த்து, ``என்னங்க தலைவரிடம் லீவு சொல்லிட்டீங்களா?’’ என்று கிண்டலாகவே கேட்பார்கள்.

கலைஞர் அவர்களோடு மட்டுமில்லை, கழகத் தலைவர் அவர்களின் அன்புக்கும் பாத்திரமானவராக இருந்தவர்தான் அண்ணன் சுப.வீ அவர்கள். இன்றைக்கு என்னை அழைத்து, இப்படியொரு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அண்ணன் சுப.வீ அவர்கள் என்னுடைய பொதுவாழ்க்கையில் எனக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருக்கிறார் என்று சொன்னால், அது மிகையாகாது. அதற்கு ஒரேயொரு சம்பவத்தை இங்கு நான் ஞாபகபடுத்த விரும்புகிறேன். நிச்சயமாக அண்ணன் சுப.வீ அவர்களுக்கு ஞாபகம் இருக்கும்.

2018-ஆம் ஆண்டு, அப்போது நான் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்தேன். பொதுவாழ்வுக்கு வரவில்லை. சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், பெரம்பூர் பாரக்ஸ் சாலையில் ஒரு பட்டிமன்றம் நடந்தது. அதற்கு அண்ணன் சுப.வீ. தான் நடுவர். என்னை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார்கள். அப்போது, நான் நடித்து இருந்த ஒரு படத்திலிருந்து ஒரு சினிமா பாட்டைப் போட்டுவிட்டார்கள். அனைவரும் கைதட்டி வரவேற்பு கொடுத்தார்கள். உடனே, அண்ணன் சுப.வீ அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுப் பேசினார்கள். உடன்பிறப்புகளுக்கும், கலைஞர் தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள். தம்பி உதயநிதி நடிகர்தான் அதை நான் ஒப்புகொள்கிறேன். ஆனால், அவர் இந்த நிகழ்ச்சிக்கு நடிகராக வரவில்லை. கழகத்தின் உடன்பிறப்பாக வந்து இருக்கிறார். ஆகவே, அவர் கழக நிகழ்ச்சிக்கு வரும்போது அவர் நடித்த சினிமா பாடல்களை போடக்கூடாது என்று என்னை வைத்துக்கொண்டே தைரியமாக பேசினார்.

என்னால் அதை மறக்கவே முடியாது. இன்று வரை அதை நான் பின்தொடர முயற்சிக்கிறேன். அந்த அளவுக்கு என்மீது உரிமை கொண்டவர் அண்ணன் சுப.வீ அவர்கள். உரிமை என்பதை விட அவருக்கு என் மீது அந்த அளவுக்கு ஒரு அக்கறை இருந்தது. அதனால் தான், இளைஞர் அணி சார்பில் நாங்கள் செய்கிற ஒவ்வொரு பணியிலும் அண்ணன் சு.ப.வீ அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நிச்சயமாக இருக்காது.

உதாரணத்துக்கு, இளைஞர் அணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறை வகுப்புகளை அண்ணன் சுப.வீ அவர்கள் தமிழ்நாடு முழுக்க நடத்தி கொடுத்தார். குறிப்பாக, கொரோனா காலத்தில், சமூக வலைதளம், யுடியூப் மூலமாக அண்ணன் சுப.வீ அவர்கள் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்று சேர்த்தார்.

கழக இளைஞர் அணி சார்பில், முதன்முறையாக `பொய்ப்பெட்டி’ என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். அதில் கலந்துகொண்டு, திராவிட இயக்கத்துக்கு எதிரான அவதூறுகளை ஆதாரத்தோடு அண்ணன் அவர்கள் அடித்து நொறுக்கினார். கலைஞர் அவர்களின் நெஞ்சுக்கு நீதி 6 தொகுதிகளையும் இணையத்தில் சொற்பொழிவாகத் தந்திருக்கிறார். எங்கள் இளைஞர் அணி, கூட்டம் நடந்தது என்றால், நான் முதலில் இளைஞர் அணி தம்பிமார்களிடம் சொல்வது புத்தகம் படிப்பதற்கு முதலில் சிரமமாகத்தான் இருக்கும், அண்ணன் சுப.வீ அவர்களின் ஆற்றிய உரைகள் இணையத்தில் இருக்கின்றன. அதை நீங்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று சொல்வேன்.

சுவற்றில் அடித்த பந்து என்ற தலைப்பில் இன்று வரை அவர் இணையத்தில் ஆற்றிய உரைகள் எல்லாம் என்றைக்கும் காலம் கடந்து நிற்கும். அதேமாதிரி இளைஞர் அணி சார்பில், முரசொலியில் பாசறைப் பக்கம் ஆரம்பிக்கும்போது, அண்ணன்தான் எங்களுக்கு துணை நின்று, வழிகாட்டினார்.

`எழுதி வளர்ந்த இயக்கம்’ என்று அவரே தொடர் கட்டுரைகளை எழுதினார். இன்றுவரை திராவிடப்பள்ளியைச் சிறப்பாக நடத்தி வருகிறார். கழக இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியை நடத்தி 200 இளம் பேச்சாளர்களை தேர்வு செய்து இருக்கிறோம் என்றால், அதற்கும் அண்ணன் சுப.வீ அவர்கள்தான் எங்களுக்கு வழிநடத்தினார்.

அண்ணன் அவர்கள், இப்படியாக, எங்களுடைய இளைஞர் அணிக்கு கொள்கை பயிற்சி அளிக்கக்கூடிய பேராசிரியராக இருக்கிறார். அதுமட்டுமல்ல, திராவிட இயக்க கருத்துகள் அறிவுசார் சமுதாயத்திடம் பரவ வேண்டும் என்று, திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தைத் தொடங்கினார். அந்த சங்கத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டை கோவையில் நடத்தி காட்டினார். அந்த விழாவிலும் என்னைக் கலந்துகொள்ள வைத்தார். கருஞ்சட்டை பதிப்பகம் மூலமாக ஏராளமான திராவிட இயக்க நூல்களை கொண்டு வந்துகொண்டு இருக்கிறார்.

இப்படி, இளைஞர் அணி பணிகளில் சுப.வீ அண்ணனும், அண்ணன் சுப.வீ அவர்களின் முன்னெடுப்புகளில் நாங்களும் இருப்பது எங்களுக்கு பெருமை. இன்னும் சொல்லப்போனால், நாங்க செய்கிற விஷயங்களை, அண்ணன் சுப.வீ பார்த்து பாராட்டிவிட்டார் என்றால், நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார் என்றால், நாங்கள் சரியான திசையில் செல்கிறோம் என்ற தைரியும் வந்துவிடும். இன்றைக்கு கலைஞர் அவர்கள் இல்லை. ஆனால், கலைஞர் அவர்கள் இருந்தால், எப்படி என்னை வழிநடத்துவாரோ, நம் பணிகளைப் பார்த்து எப்படி மகிழ்வாரோ, அதே மாதிரி கலைஞர் இடத்தில் இருந்து அண்ணன் சுப.வீ அவர்கள் எங்களை வழிநடத்திகொண்டு இருக்கிறார். எங்கள் பணிகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்.

நானும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களும் பிறந்ததில் இருந்தே மிக நெருங்கிய நண்பர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனக்கு தெரிந்த விஷயம் அவருக்குத் தெரியும், அவருக்குத் தெரிந்த விஷயம் எனக்குத் தெரியும். எங்களுக்குத் தெரிந்த விஷயம் யாருக்கும் தெரியாது. அதில் ஒன்றைத்தான் இப்போது உங்களுக்கு சொல்லப்போகிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு செல்ல பெயர் வைத்திருப்போம். சில செல்ல பெயர்களை வெளியே சொல்ல முடியும், சில செல்ல பெயர்களை வெளியே சொல்ல முடியாது. அதேபோல் அண்ணன் சுப.வீ அவர்களுக்கு நாங்கள் வைத்துள்ள செல்லப் பெயர் டிரவிடியன் என்சைக்ளோபீடியா. அப்படிப்பட்ட தலைமைத் தொண்டன்தான் அண்ணன் சுப.வீ அவர்கள்.

எங்களுக்கு கருத்துகளில், வரலாற்றில் ஏதாவது சந்தேகம் வந்துவிட்டது என்றால் `நெஞ்சுக்கு நீதி’ நூலை எடுத்துப் படி என்பார்கள். நாங்கள் முதலில் கேட்பது அண்ணன் சுப.வீ அவர்களின் உரையைத்தான். அவருடைய கரம்பற்றி, கழக இளைஞர் அணியும் சரி, நானும் சரி என்றென்றும் நடை போடுவோம் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

திராவிட இயக்கத்தை வளர்ப்பதற்காக நாம் இந்த அளவுக்கு உழைத்துக்கொண்டு, பாடுபட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால், திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாத எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பா.சி.ச பா.ஜ.க-வுடன் சேர்ந்துகொண்டு திராவிட இயக்கத்தை அழிக்கிற வேலையில் ஈடுபட்டுள்ளார்.

தி.மு.க என்பது போராட்டத்தாலும், தியாகத்தாலும் உருவான இயக்கம். தமிழ்நாட்டில்தான், திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சி, ஆனால், டெல்லியில் திராவிட முன்னேற்றக் கழகம் தான் முக்கிய எதிர்க்கட்சி.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி, டெல்லியைப் பொறுத்தவரைக்கும் அது அடிமைக் கட்சி. நாம் இப்படி கொள்கையோடு செயல்படுகிறோம், ஆனால், ஒரு கொள்கையற்ற கூட்டம் எல்லாம் வன்மத்தை, அவதூறுகளை பரப்பும் கூட்டமாக இன்று ஒரு கூட்டம் உருவெடுத்துள்ளது.

திராவிட இயக்கத்தின் கொள்கைகள், தி.மு.க.வின் குரல் நாடு முழுவதும் பரவுவதைப் பார்த்துவிட்டு, பாசிச பா.ஜ.க-வும், அடிமைக் கூட்டமும் மிரண்டுள்ளார்கள். சுடுதண்ணீர் வைக்கும்போது பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, ஒரு தட்டு போட்டு மூடி கீழே நெருப்பு வைப்பார்கள். கீழே இருக்கிற நெருப்பினால், சூடேறி பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும். அப்போது, பாத்திரத்தை மூடி இருக்கிற தட்டு ஆட ஆரம்பித்துவிடும்.

அதுமாதிரி, இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் தமிழ்நாட்டில் இருந்து நாம் பற்ற வைக்கிற திராவிடச் சூடு ஒட்டுமொத்த நாட்டுக்கும் பரவுகிறது. டெல்லியை ஆட வைத்துள்ளது. அதனால்தான் தி.மு.க-வை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு சூழ்ச்சி செய்கிறது.

அந்த சூழ்ச்சியின் ஒரு பகுதி தான், இப்போது நடக்கிற எஸ்.ஐ.ஆர். திட்டம். தி.மு.க-வுக்கு ஆதரவாக இருக்கிற வாக்குகளை எப்படியாவது நீக்க வேண்டும். குறிப்பாக, சிறுபான்மை மக்கள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை நீக்க வேண்டும். இதுதான் அவர்கள் நோக்கம். இந்த சூழ்ச்சியை முறியடிக்கிற வகையில், நீங்கள் எல்லாம் உங்களுடைய வாக்குச்சாவடியில் உங்களின் வாக்குகளை முதலில் சரிசெய்ய வேண்டும். மிகுந்த கவனத்துடன் நாம் பணியாற்றி முறியடிக்க வேண்டும்.

2026-இல் நம் கழக கூட்டணி மீண்டும் வெற்றி பெற வேண்டும். நிச்சயம் வெற்றி பெறும். நம் கழகம் ஏழாவது முறையாக நிச்சயம் ஆட்சி அமைக்கும். நம் தலைவர் அவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும். அதற்காக, அடுத்த 4 மாதங்களும் நாம் அனைவரும் தொடர்ந்து பணியாற்றிட வேண்டும். இன்றைக்கு பலபேர் புதிதாக கட்சி தொடங்குகிறார்கள், தொடங்கட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. கட்சியின் புது தலைவர்களுக்கே அங்கு வரலாறு கிடையாது. ஆனால், ஒரு இயக்கத்தின் தொண்டனுக்கு எவ்வளவு பெரிய வரலாறு உண்டு என்று இன்று நாம் நிரூபித்து காட்டியுள்ளோம். அய்யா ராம.சுப்பையா அவர்களின் பிறந்த நாளில் நாம் அனைவரும் ஒரு உறுதிமொழி ஏற்போம்.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் நம் தலைவர் தலைமையிலான அணிக்கு மிகப்பெரிய வெற்றியை நாம் தேடி தருவோம், அய்யா இரா.சுப்பையா பிறந்த நாளில் அந்த சபதத்தை ஏற்போம் என்று சொல்லி, இந்த சிறப்பான வாய்ப்பை அளித்த அண்ணன் சுப.வீ அவர்களுக்கும், வந்திருக்கின்ற அமைச்சர் பெருமக்களுக்கும், வந்திருக்கின்ற முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகள் உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

Related Stories