
தமிழ்நாடு அரசு, கல்வித்துறையை மேம்படுத்த பல முன்னோடி திட்டங்களை செய்து வருகிறது. இதன் அடிப்படையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்து வேலைவாய்ப்பு பெற்ற பிரேமா என்ற மாணவி, தனது முதல் மாதச் சம்பளத்தை மேடையில் தந்தையிடம் வழங்கினார். பெண்களின் கல்வி குறித்து சமூகத்தில் எழுந்த எதிர்ப்புகளை தாண்டி தந்தை அளித்த ஆதரவைக் கண்ணீர் கலந்த குரலில் பிரேமா நினைவுகூர்ந்தார்.
இந்தச் சம்பவத்துக்கு பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில், “ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம். எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன் ” எனத் தெரிவித்தார்.

பின்னர் பிரேமாவின் தந்தைக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டிக் கொடுக்கும் ஆணையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரேமாவிற்கு வழங்கி வாழ்த்தினார்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் முன்பு, பிரேமா குடும்பத்திற்காக கழுநீர் குளத்தில் கட்டப்பட்டுவரும் கலைஞர் கனவு இல்லத்தை நேரில் பார்வையிட்டார். மேலும், பிரேமாவின் பெற்றோரிடம் நேரிலும் பிரேமாவுடனும் தொலைபேசி மூலம் பேசிக் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “நெடுநாள் கனவாக இருந்து, இப்போது நனவாகிவரும் சகோதரி பிரேமா அவர்களது இல்லத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டேன். கல்வி கொடுத்த உயர்வில் பிறந்துள்ள இந்த மகிழ்ச்சி, இவர்களின் கனவு இல்லத்தில் என்றும் நிறைந்திருக்க வேண்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.




