
வங்கக்கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்யும் நிலையில், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று,வட சென்னை தண்டையார்பேட்டை மண்டலம் வார்டு 36-இல் டான் பாஸ்கோ பள்ளி அருகே, அழகேசன் தெருவில் கேப்டன் காட்டன் கால்வாயில் பொக்லைன் மற்றும் மிதவை இயந்திரங்கள் மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, கொடுங்கையூர் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியையும், கால்வாய் அகலப்படுத்தும் பணியையும் துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், மணலி சாலை பகுதி லிங்க் கால்வாயில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து, அதன் விவரங்களை அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மேலும் அனைத்து கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அடுத்த 10 நாட்களுக்கு மிகப்பெரிய அளவில் மழை இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தும் எவ்வளவு மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.
வடசென்னையில் 18 கால்வாய்கள் 13 குளங்கள் சென்னை மாநகராட்சி மூலமாக தூர்வாரப்பட்டுள்ளது. மொத்தமாக 331 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு 3.5 லட்சம் டண் கழிவுகள் சுத்தம் செய்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வைக்கின்ற புகார்கள், அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.






