தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் ரயில் மூலமாக கொண்டு செல்லப்படும் இடத்தில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”செப்.1 முதல் இன்று வரையிலான 50 நாட்களில் 1,825 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ஆகிய டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் மெட்ரிக் டன் நெல்மூட்டைகள் வைக்கும் அளவிற்கு இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதியதாக கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை வைப்பதற்கான இடம் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறுவது முற்றிலும் தவறானது.
நெல்கொள்முதல் நிலையங்கள் அதிகமாக இருப்பதால்தான், விவசாயிகள் யாரும் ’நெல்கொள்முதல் செய்யப்படவில்லை’ என புகார் அளிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மட்டுமே புகார் சொல்லி வருகிறார்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியிடம், பெண் ஒருவர் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டதாக கூறியது குறித்து உடனே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அறுவடையே அவரது வயலில் நடைபெறவில்லை என்ற உண்மை தெரியவந்தது.
அறுவடையே நடைபெறாத வயலில் இருந்து எப்படி அவர் நெல்மூட்டைகளை, கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தார் என்பது அவருக்கு மட்டும்தான் வெளிச்சம். எனவே எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சொல்லும் புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
தஞ்சை மண்னில் பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. அது டெல்டாகாரரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் ஒரு போதும் நிறைவேறாது” என தெரிவித்துள்ளார்.