தீபஒளியை முன்னிட்டு, பெருந்திரளாக சொந்த ஊர்களுக்கு சென்னையிலிருந்து மக்கள் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, நேற்று (19.10.2025) கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் நான்காவது நாளாக நேரில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் சிவசங்கர்.
ஆய்வுக்கு பின் அவர் தெரிவித்தவை பின்வருமாறு, “2025 தீபஒளியையொட்டி 16.10.2025 முதல் நேற்று (19.10.2025) வரையிலான நான்கு நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 8,361 பேருந்துகள் மற்றும் 6,933 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 15,294 பேருந்துகள் இயக்கப்பட்டு 7,88,240 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்த சிறப்பு இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்குச் செய்யப்பட்ட வசதிகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தோம்.
மக்களின் பயணம் பாதுகாப்பாகவும், தங்குதடையின்றியும் அமைய, திராவிட மாடல் அரசு 24 மணி நேரமும் களத்தில் நின்று பணியாற்றும் என உறுதியளிக்கிறோம்.”
பேருந்து முனையத்தில் அமைச்சர் சிவசங்கர் மேற்கொண்ட ஆய்வில் போக்குவரத்துத்துறை இயக்குநர்கள் உடனிருந்தனர்.