தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.10.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் சென்னை – செனாய் நகர் மற்றும் மதுரை மாநகர் – அண்ணா நகர் ஆகிய இடங்களில் 43.88 இலட்சம் ரூபாய் செலவிலான ”அரண்” திருநங்கையர்களுக்கான இல்லத்தினை திறந்து வைத்தார்கள்.
திருநங்கையர்களின் நலன் காத்திட தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள்
சமூகத்தில் திருநங்கையர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன், மரபு சார்ந்த "அரவாணிகள்" என்ற சொல்லுக்கு மாற்றாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் "திருநங்கை" என்ற மரியாதைக்குரிய சொல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
திருநங்கைகளுக்கும் முழுமையான சமூகப் பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் வழங்கி, அவர்களின் உழைப்பையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக, 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று தமிழ்நாட்டில் "திருநங்கைகள் நல வாரியம்" முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்டது. இந்த வாரியத்தை அமைத்த முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
திருநங்கையர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக, தமிழ்நாடு அரசு திருநங்கைகள் நல வாரியத்தின் வாயிலாக திருநங்கை அடையாள அட்டைகள் வழங்குதல், ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்குதல், குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, மருத்துவக் காப்பீடு வழங்குதல், தையல் இயந்திரம் மற்றும் சொந்த தொழில் தொடக்க மானியம் வழங்குதல்;
சுயஉதவிக்குழு அமைத்தல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குதல், அரசு பேருந்துகளில் கட்டணமில்லா “விடியல் பயணம்” “திருநங்கைகளுக்கான உயர்கல்வி திட்டம்” மூலம் உயர்கல்வி பயிலும் திருநங்கைகளின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்வதோடு, புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாதம் ரூ.1,000 கல்வி ஊக்கத் தொகை, உயர்கல்வி பயிலும் அனைத்து திருநங்கைகளுக்கும் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
'அரண்' இல்லங்கள் - திருநங்கையருக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான வாழ்விடங்கள்
திருநங்கைகள் நலன் காத்திடும் தொடர் நடவடிக்கைகளின் அடுத்தபடியாக, திருநங்கைகள் எதிர்நோக்கும் சமூக, மனநலம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த சவால்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பான, மதிப்பும் மரியாதையும் நிறைந்த, ஆதரவான வாழ்விட சூழலை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு “அரண் இல்லம்” எனப்படும் சிறப்பு மையங்களை நிறுவத் தீர்மானித்து, முதற்கட்டமாக, சென்னை – செனாய் நகர் மற்றும் மதுரை மாநகர் – அண்ணா நகர் ஆகிய இடங்களில் 43.88 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரண் இல்லங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்கள்.
அரண் இல்லத்திற்கான தேவை
பாலினம் அடையாளம் காணும் பருவத்தில், பயம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, குடும்பம் மற்றும் கல்வியில் இருந்து விலகி, ஆதரவற்று நகரங்களுக்கு வரும் திருநங்கை/திருநம்பி/இடைபாலினரை பாதுகாக்கவும், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் இது அவசியமாகிறது.
குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கை/திருநம்பி/இடைபாலின நபர்களுக்கு 1 வாரம் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை பாதுகாப்பான மற்றும் தற்காலிக தங்குமிடம் வழங்குதல் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் அடையாள அட்டை பெற்ற எந்த மாவட்டத்தைச் சேர்ந்த நபரும் பயன்பெறுவதோடு, ஒவ்வொரு இல்லத்திலும் 25 நபர்கள் தங்க அனுமதிக்கப்படுவர்.
மேலும், இந்த இல்லங்களில், உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரியில் இடைநின்றவர்கள் கல்வியைத் தொடர உதவுதல், உயர் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துதல், உள்ளுறைவோரின் தேவைகளுக்கேற்ப உளவியல் மற்றும் தொழில்முறை ஆலோசனைகள் வழங்குதல், சுயதொழில் தொடங்க வழிகாட்டுதல் மற்றும் நிதியுதவி வழங்குதல்;
திருநங்கையருக்கு எதிரான வன்முறை, பாகுபாடுகள் குறித்து புகார் அளிக்க உதவுதல், இலவச சட்ட உதவி மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவர்களை மீண்டும் குடும்பத்துடன் இணைக்க முயற்சித்தல் மற்றும் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் இந்தத் தொடர்ச்சியான நடவடிக்கைகள், திருநங்கையர் சமூகத்தின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.