தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 193 உழவர் சந்தைகள் - 3 லட்சம் நுகர்வோர்கள் பயன் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

தமிழ்நாடு விவசாயிகள் இந்திய அளவில் முன்மாதிரியாக சிறந்து விளங்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் 193 உழவர் சந்தைகள் - 3 லட்சம் நுகர்வோர்கள் பயன் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவாவில், மோகன்தக் செய்தி நிறுவன ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய தென்னை மாநாட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, தென்னை விவசாயத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

இம்மாநாட்டில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,” திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு விவசாயத்திற்குகென்று தனி பட்ஜெட் அறிவித்து ஆண்டு தோறும் கிட்டத்தட்ட 50,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாட்டின் விவசாயிகளின் பெருங்குடி மக்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருந்த சூழ்நிலை கடந்த காலத்தில் இருந்தது. தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசினால் உழவர்களின் நலன் காக்கும் பொருட்டு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் இப்பொழுது அதுமாதிரியான சூழ்நிலைகள் தமிழ்நாட்டில் அறவே இல்லை. அந்தளவிற்கு நெல் உற்பத்தியை அதிகமாக செய்து கொண்டிருறோம். அதேபோல தென்னை, சிறுதானியங்கள் உற்பத்தியிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். முந்திரி உற்பத்தியில் சிறந்து விளங்கிட தனியாக முந்திரி வாரியம் அமைத்து அதற்குரிய உதவிகளையும் செய்து கொண்டிருக்றோம்.

விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் தொடர்ந்து வழங்குவது தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் என்பதில் பெருமைபடுகிறேன். இவ்வரசு பொறுப்பேற்றதில் இருந்து புதியதாக 2 இலட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மின் கட்டணம் என்பது பெரும்சுமையாக உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் 24 இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு, அதற்கான மின்கட்டணம் ரூபாய் 34,000 கோடியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசே செலுத்திவருகிறது.

அதேபோல விவசாயிகளுக்கு இயற்கை இடர்பாடுகள் மூலமாக ஏற்படுகின்ற பயிர் சேதத்திற்கு பயிர் காப்பீடு மூலமாக இதுவரையில் 16 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,971 கோடி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 193 உழவர் சந்தைகளை உருவாக்கியுள்ளோம். காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் 8,000 விவசாயிகள் அவர்களது விளைபொருட்களை உழவர் சந்தைகளின் மூலம் நேரடியாக நாளொன்றுக்கு 2,300 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் நாளொன்றுக்கு 3 இலட்சம் நுகர்வோர்கள் பயன்பெறுகின்றனர்.

வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை, விதைச்சான்று வேளாண்மைப் பொறியியல் துறைகளுக்கென தனித்தனியாக இந்திய ஆட்சிப்பணி நிலையில் உள்ள துறைத்தலைவர்களாக நியமித்து சுமார் 25,000 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். கிராமங்கள்தோறும் 5 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை பெருக்கி வருகிறோம்.

அதேபோல கரும்பு உற்பத்தியிலும், துவரை உற்பத்தியிலும் இந்திய அளவில் உயர்த்த சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம்

தென்னையை பொருத்த வரையில் தனி வாரியம் அமைத்து, தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக காணப்பட்டது. மேலும் கேரளா வேர் வாடல் நோயும் காணப்பட்டது. இதற்கென தனிநிதி ஒதுக்கீடு செய்து தென்னை விவசாயிகளின் துயர் துடைக்கப்பட்டது.

கொப்பறை விற்பதில் உள்ள பல்வேறு சிரமத்திலிருந்து, கொப்பறை விலையினை உயர்த்தி தென்னை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் 3 இலட்சம் விவசாயிகள் தென்னை விவசாயத்தை நம்பி உள்ளனர்.

வயது முதிர்ந்த தென்னை மரங்களை அகற்றுவதற்கு ஏதுவாக தென்னை விவசாயிகளுக்கு இலவசமாக புதிய ரக தென்னம்பிள்ளைகள் வழங்கப்பட்டு, உதவிகள் மற்றும் நிதியும் வழங்கி தென்னை வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறோம். 50,32,000 தென்னம்பிள்ளைகள் இலவசமாக தெனனை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி, தமிழ்நாட்டில் விவசாயத்தை இந்திய அளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

12,525 கிராமங்களுக்கு கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி (KAVIADP) திட்டத்தின் மூலம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்திற்கு குறைந்தபட்சம் 200 கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர் மற்றும் மதிப்புக் கூட்டு தொழிற்நுட்பங்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் FPO உருவாக்கப்பட்டு அதன் மூலமாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தென்னை விவசாயிகளுக்கு இயற்கையின் மூலம் சவால்கள், பூச்சிநோய் தாக்கும் சவால் போன்ற சவால்கள் உள்ளது. இவற்றை எல்லாம் எதிர்த்து வாழக்கூடிய தன்னம்பிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல சிறப்பான திட்டங்கள் மூலம் உருவாக்கி கொடுத்துள்ள காரணத்தினால்தான் தமிழ்நாடு விவசாயிகள் இந்திய அளவில் முன்மாதிரியாக சிறந்து விளங்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடியினை மேம்படுத்த, தனியாக முந்திரி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முந்திரி சாகுபடி பரப்பு அதிகரிக்கவும், ஏற்றுமதி அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறந்த முந்திரியான பண்ருட்டி முந்திரிக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories