திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்ப தடை விதிக்கக் கோரி சமையற்கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சமூக வலைத்தளங்களில் யாரையும் விட்டு வைப்பதில்லை என்றும் உத்தரவுகளை பிறப்பித்ததற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர் என்றும் நீதிபதி செந்தில்குமார் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்களை குறிப்பிட்டும் முந்தைய கால நிகழ்வுகளை குறிப்பிட்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, சமூக வலைத்தள விமர்சனங்களை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும் என்று மனுதாரருக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, அரசியலமைப்பின் கடமையை செய்யும் நீதிபதிகளை சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பது கண்டனத்திற்குரியது என்றும் வழக்கறிஞர்கள் சமுதாயம் தங்களுக்கு துணை நிற்கும் என்றும் நீதிபதி செந்தில்குமாரிடம் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் தெரிவித்தார். ஜாய் கிரிஸ்டிலா தரப்பில் ஆஜராகியிருந்த மக்களவை உறுப்பினர் சுதா, மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆகியோரும் தங்களுக்கு வழக்கறிஞர்கள் துணை நிற்பார்கள் என நீதிபதியிடம் உறுதியளித்தனர்.
கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் மற்றும் த.வெ.க கட்சியை நீதிபதி செந்தில்குமார் கடுமையாக கண்டித்து இருந்தார். இதையடுத்து த.வெ.க கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் நீதிபதி செந்தில்குமாரை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.