தமிழ்நாடு

”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திராவிட மாடல் 2.0 என்று சொல்லப் போகிறோம்! வரப் போவது அரசியல் தேர்தல் கிடையாது; தமிழினம் தன்னை காத்துக் கொள்ள வேண்டிய சமுதாய தேர்தல்!

”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (4.10.2025) செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா - திராவிடர் கழகத்தின் மாநில மாநாடு எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக மட்டுமல்ல, மானமிகு சுயமரியாதைக்காரன் என்ற உணர்வோடு பங்கெடுப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! பெருமை அடைகிறேன்!

சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சி திராவிடர் கழகம் என்றால் - திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்!

இன்று, தமிழ்நாட்டின் உரிமைகளை - தமிழர்களின் சுயமரியாதை - பகுத்தறிவு - சமூகநீதிச் சிந்தனை உள்ளிட்டவற்றை நாம் பாதுகாக்கிறோம் என்றால், சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் வேர்விட்டதுதான் அதற்குக் காரணம்!

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து குடும்பம் குடும்பமாக வந்திருக்கும், இந்தக் கருப்புச் சட்டைக்காரர்கள் தான் தமிழ்நாட்டின் காவலுக்கு கெட்டிக்காரர்கள்!

பகுத்தறிவுச் சிந்தனையும் - சுயமரியாதை உணர்வும் கொண்ட ஒரு கருப்புச் சட்டைக்காரர் ஒரு ஊரையே முன்னோக்கி இழுத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவர்!

திராவிடர் கழகத்தினரின் உழைப்பு, விலைமதிப்பில்லாதது! பலன் எதிர்பாராதது! அதனால்தான், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்… “மனமகிழ்ச்சி ஒன்றுதான் நான் அடையும் பலன்” என்று சொன்னார். அந்த மனமகிழ்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டு, கருத்தியல் உறுதியோடு போராட்ட வாழ்வை வாழும் திராவிடர் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ‘சல்யூட்!’ அதிலும், 92 வயது இளைஞராக, ஓய்வின்றி, தமிழ்ச் சமுதாயத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும், தமிழர் தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்!

தமிழினத்தின் மேன்மைக்காக உழைத்துக் கொண்டு வரும் அவரின் ஒப்பற்ற தியாக வாழ்வை போற்றும் விதமாகதான் நம்முடைய திராவிட மாடல் அரசில், மானமிகு அய்யா அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கியிருக்கிறோம்!

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும், இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களும் நிறைவுற்ற பின்னர், என்னை வழிநடத்தும் நல்லாசிரியர்தான், நம்முடைய தகைசால் தமிழர் ஆசிரியர் அய்யா அவர்கள்! அதனால்தான், திராவிட முன்னேற்றக் கழகம் செல்ல வேண்டிய பாதையை ‘பெரியார் திடல்’ தான் தீர்மானிக்கிறது என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்னேன்.

தி.மு.க. உருவானபோது, பேரறிஞர் அண்ணா அவர்கள்தான் சொன்னார்… “தி.மு.க. தோன்றிவிட்டது; தி.க.வுக்கு எதிராக அல்ல! திராவிடர் கழகத்தின் கொள்கைகளை மேலும் வலிமையாகச் சொல்வதற்கும் - அரசியல் களத்தில் செயல்படுத்துவதற்கும் தான் தோன்றி இருக்கிறது” என்று சொன்னார்.

இங்கு கூடியிருக்கக்கூடிய கருஞ்சட்டைப் பட்டாளமே… தமிழ்நாட்டின் இளைஞர் கூட்டமே… மானமிகு ஆசிரியரை பாருங்கள்… 92 வயது அவருக்கு… இந்த வயதிலும், நாள்தோறும் எழுதுகிறார்; ஊர் ஊராகச் சென்று பரப்புரை செய்கிறார்; அறிக்கைகளால் அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்கிறார்; போராட்டக் களங்களில் முதல் மனிதராக முன்னால் நிற்கிறார்!

நடந்தால், பீடு நடை! பேசினால், வீர நடை! என்று வாழும் அவரிடமிருந்து, நாம் இன்னும் இன்னும் கற்றுக் கொள்ளவேண்டும்!

ஆசிரியர் அய்யா அவர்களே… தலைவர் கலைஞரையும், தந்தை பெரியாரையும் கடந்த பெருவாழ்வை நீங்கள் வாழவேண்டும்!

ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் சொல்ல மாட்டேன்; பணிகளைச் செய்ய நாங்களும் இருக்கிறோம் என்று உங்கள் பணிச் சுமையை குறைத்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு காலத்தில், தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவுப் பரப்புரையை மேற்கொண்டு வீதிகளில் வந்தபோது, சிலர், செருப்பு வீசினார்கள் - கல் வீசினார்கள் - ஏன், கத்திகூட வீசினார்கள்! ஆனால், இன்றைக்கு பெரியாரின் சிந்தனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் போற்றப்படுகிறது! அந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைத்து, நான் பூரிப்படைந்தேன்!

இது, பெரியாரின் சிந்தனைக்கும் - திராவிடர் கழகத்தின் கொள்கைக்கும் கிடைத்த மதிப்பு! மரியாதை!

பெரியார் உலகமயமாக வேண்டும் - உலகம் பெரியார் மயம் ஆகவேண்டும் என்று நாள்தோறும் உழைக்கும் மானமிகு ஆசிரியர் அவர்களின் உழைப்புக்கு கிடைத்த பலன்!

திராவிட இயக்கத்தின் வரலாற்றைச் சொல்லும் அறிவுக் கருவூலமாக, தந்தை பெரியாரின் சிந்தனைகளையும் – அறிவுச் செல்வத்தையும் – உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொண்டு செல்ல திருச்சி சிறுகனூரில் உருவாகிக் கொண்டு வருகின்ற ’பெரியார் உலகம்’ மிகச்சிறப்பாக உருவாகவேண்டும் என்று நம்முடைய மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள், எப்படியெல்லாம் கவனத்துடன் உழைத்துக் கொண்டு வருகிறார் என்று எனக்குத் தெரியும்!

நம்முடைய அரசு, அவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருதோடு தந்த பணத்தைக்கூட, அவர் பெரியார் உலகத்துக்குதான் தந்திருப்பதாகச் சொன்னார்.

மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கிக் கொண்டு வருகின்ற ‘பெரியார் உலகத்துக்கு’ திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பங்களிக்காமல் இருக்க முடியுமா? மீண்டும் சொல்கிறேன்.... நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கக்கூடிய ‘பெரியார் உலகத்துக்கு’ திராவிட முன்னேற்றக் கழகம் பங்களிக்காமல் இருக்க முடியுமா? எனவே, என்னுடைய ஒரு மாத சம்பளத்தை பெரியார் உலகத்துக்காக கொடுக்கலாம் என்ற முடிவெடுத்தேன். இதைப் பற்றி, கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.துரைமுருகன் அவர்களிடத்தில், பொருளாளர் நம்முடைய டி.ஆர்.பாலு அவர்களிடத்தில், துணைப் பொதுச் செயலாளர் நம்முடைய ராசா அவர்களிடத்தில் சொன்னேன்… உடனே அவர்கள் நாம் இன்றைக்கு வளர்ந்து ஆளாகி மரியாதையுடன் நிற்கிறதே அய்யா பெரியாரால்தான்… நீங்கள் அறிவிப்பு செய்யுங்கள். தி.மு.க-வின் 126 எம்.எல்.ஏ.,க்கள், மக்களவை – மாநிலங்களவையைச் சார்ந்திருக்கக்கூடிய 31 எம்.பி.,க்கள் ஆகியோருடைய ஒரு மாதச் சம்பளத்தையும் சேர்த்து வழங்குவோம் என்று சொன்னார்கள்.

எங்கள் எல்லோருடைய ஒரு மாத சம்பளம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் - அந்தப் பணத்தை பெரியார் உலகத்துக்கு மகிழ்ச்சியோடு, நன்றி உணர்வோடு வழங்குவதில் நாங்கள் எல்லோரும் பெருமை அடைகிறோம் அய்யா! பெருமை அடைகிறோம் அய்யா!

”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்த இனம் சுயமரியாதை உணர்வை பெற்று, பகுத்தறிவுச் சிந்தனையை பெற்று, முன்னேறி வந்துவிடாதா என்று உயிர் பிரியும் காலம் வரை மூத்திரச் சட்டியை சுமந்து கொண்டு போராடிய தந்தை பெரியாரின் உழைப்பை, நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்!

மானமும், அறிவும் உள்ள மக்களாக நாம் தொடர்ந்து நடைபோட வேண்டும்! தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய சிந்தனைகள் செயல்வடிவம் பெறுவதை பார்க்கும் வாய்ப்பு தந்தை பெரியாருக்குத்தான் கிடைத்தது!

பேரறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதை திருமணச் சட்டத்தை இயற்றினார்! தலைவர் கலைஞர் அவர்கள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்ட அங்கீகாரம் வழங்கினார்! அதன் நீட்சியாகதான் சமூகநீதிக்கான இட ஒதுக்கீடுகள் - மகளிர் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் என்று ஏராளமானவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்!

மானமிகு ஆசிரியர் அவர்கள் இந்த மாநாட்டில், நல்ல பல தீர்மானங்களை வடித்து வழங்கியிருக்கிறார். நான் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு சொல்லிக் கொள்வது இதற்கான பரப்புரைகளை நீங்கள் சமூகக் களத்தில் செய்யுங்கள்!

மக்களின் ஆதரவைப் பெற்று, ஆட்சியைப் பயன்படுத்தி இவற்றை சட்டங்களாக - விதிமுறைகளாக - நெறிமுறைகளாக மாற்றும் பணிகளை திராவிட முன்னேற்றக் கழகம் பார்த்துக் கொள்ளும்!

இந்த தமிழ்ச் சமூகம் சிந்தனை ரீதியாக முன்னோக்கிச் செல்ல நம்முடைய திராவிட மாடல் அரசு செய்துள்ள முன்னெடுப்புகளில் சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால்,

அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கி ஆணைகள் வழங்கி இருக்கிறோம்! சாதி வேறுபாடு மட்டுமல்ல, பால் பேதத்தையும் உடைத்து, பெண்களையும் அர்ச்சகராக்கி இருக்கிறோம்!

தந்தை பெரியார் பிறந்த நாளிலும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளிலும், தமிழ்நாடே முக்கிய நாளாக கருதி உறுதிமொழி எடுக்கிறது!

ஆதிக்கத்தின் அடையாளமாக இருக்கின்ற ‘காலனி’ என்ற சொல்லை அகற்ற அறிவித்திருக்கிறோம்!

சாதி பெயரில் இருக்கின்ற விடுதிகளை, சமூகநீதி விடுதிகளாக மாற்றியிருக்கிறோம்!

மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை சந்தித்து, சாதிப் பெயர்களின் இறுதி எழுத்து, ‘R’ என முடிவடையும்படி மாற்றம் செய்து, மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்க செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன்!

மனிதர்களுக்கிடையே இருக்கும், வேற்றுமையையும் - பகைமையையும் விரட்ட, சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம் - பகுத்தறிவு - பொதுவுடமை - பொது உரிமை - கல்வி உரிமை - அதிகார உரிமை ஆகியவை வேண்டும்!

அப்படிப்பட்ட சமத்துவ - சமுதாயத்தை உருவாக்கத்தான் திராவிட மாடல் அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்றேன் - சிலர் கேட்கிறார்கள் - “இவர்கள் பவள விழா கொண்டாடுகிறார்கள், நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள்.. ஆனால், இங்கே எதுவும் மாறவில்லையே” என்று கேட்கிறார்கள்! அவர்களுடைய கேள்வியில் இருப்பது, அக்கறை இல்லை; ஆணவம்!

“ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உங்களால் உடைக்க முடியவில்லை பாருங்கள்” என்கிற சவால் அது!

இங்கே கூடியிருக்கும் நம்முடைய தோழர்களுக்கும் - தமிழ்நாட்டு மக்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது - இந்த நூறு ஆண்டுகளில், நாம் மாற்றத்திற்கான விதைகளை மட்டும்தான் விதைத்திருக்கிறோம்!

இங்கே எதுவுமே மாறக் கூடாது என்று நினைப்பவர்கள் எப்படியெல்லாம் - என்னவெல்லாம் சதித் திட்டம் போடுகிறார்கள் என்று நாட்டில் நடக்கின்ற செய்திகளை உற்றுப் பாருங்கள்!

தமிழ்நாடு ஏன் தனித்து, உயர்ந்து நிற்கிறது என்பது புரியும்! தந்தை பெரியாரோடு இந்த இயக்கம் முடிந்துவிடும் என்று நினைத்தார்கள்.... பேரறிஞர் அண்ணா எழுந்தார்! அடுத்து, தலைவர் கலைஞர் வந்தார்! கலைஞருக்குப் பிறகு இந்த இயக்கம் அவ்வளவுதான் என்றார்கள்! மக்களின் ஆதரவோடு நான் வந்தேன். என்னைப் பற்றி என்னென்னவோ பொய்களை எல்லாம் பரப்பி பார்த்தார்கள்.. இப்போதும் பரப்புகிறார்கள்... நான் எப்போதும் போல என்னுடைய செயல்களால் மட்டுமே பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன்!

இந்த இயக்கத்தின் கொள்கைகள் - தமிழர்களின் இரத்தத்தில் கலந்திருக்கின்ற கொள்கைகள்! கடைசித் தமிழரின் மூச்சு இருக்கும் வரை, அவர் உயிரில் சுயமரியாதை உணர்வு இருக்கும் வரை, எப்பேர்பட்ட எதிரிகள் வந்தாலும் இந்த இனம் சளைக்காமல் போராடும்! சிலர் தி.மு.க-வை பிடிக்காது என்று சொல்வார்கள்… அதற்கு பொருள் - ஒடுக்கப்பட்ட வீட்டு குழந்தைகள் படிப்பது பிடிக்காது! இந்த இனத்தில் இருந்து, படித்து, முன்னேறி ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ் என்ற வருவது பிடிக்காது!

இடஒதுக்கீடு பிடிக்காது! சமூகநீதி பிடிக்காது! சமத்துவம் பிடிக்காது! சரிசமமாக உட்காருவது பிடிக்காது! எல்லோரும் கோயிலுக்குள் நுழைவது பிடிக்காது! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது பிடிக்காது! ஒற்றுமையாக இருப்பது பிடிக்காது! தமிழ் பிடிக்காது! தமிழர்கள் பிடிக்காது! நாம் தலைநிமிர்ந்து நடப்பது பிடிக்காது!

இந்த நூறாண்டுகளில், கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய மக்களுக்கு கிடைத்ததை, வேக வேகமாக பறிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்! சுயமரியாதை இயக்கம் தேடித் தந்த உயர்வை பறிக்கின்ற சூழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

அறிவியலை பின்னுக்குத் தள்ளி, பிற்போக்குத்தனங்களையும், ஆதிக்கத்தையும் மீண்டும் நிலைநிறுத்துவதற்கான சூழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது!

தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்திய நாட்டையே ஒரு நூற்றாண்டுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்ல நுணுக்கமாகவும், தீவிரமாகவும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

இதையெல்லாம் தடுத்து நிறுத்துகின்ற அரண்தான், திராவிட மாடல்! அதனால்தான், “அண்ணாவும் - கலைஞரும் சொல்லாததை இந்த ஸ்டாலின் ஏன் சொல்கிறான்?” என்று டென்ஷன் ஆகிறார்கள். அவர்களுக்கு எரியட்டும் என்று தான் நானும் திரும்பத் திரும்ப திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்!

அடுத்து, திராவிட மாடல் 2.0 என்று சொல்லப் போகிறோம்! வரப் போவது அரசியல் தேர்தல் கிடையாது; தமிழினம் தன்னை காத்துக் கொள்ள வேண்டிய சமுதாய தேர்தல்!

கொள்கையற்ற அ.தி.மு.க.வினால் பத்தாண்டுகள் பாழான தமிழ்நாட்டை மக்களின் ஆதரவுடன் மீட்டெடுத்து, இந்த நான்கு ஆண்டுகளில் வளப்படுத்தியிருக்கிறோம்! வரலாறு காணாத வகையில், வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்! இதை திராவிடத்துக்கு எதிரான

பா.ஜ.க-வும், "திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது" என்று சொன்ன திரு. பழனிசாமி அவர்களின் அ.தி.மு.க.,வும், மீண்டும் கபளீகரம் செய்யலாம் என்று பார்க்கிறார்கள்!

தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்தவேண்டும்! அதற்கான கொள்கை தெளிவும் - போராட்டக் குணமும் - செயல்திட்டமும் - ஒற்றுமை உணர்வும் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குதான் இருக்கிறது! எனவே, ஏழாவது முறையும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்திட, இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

தமிழ்நாடு எப்போதும் மகிழ்ச்சியாக வாழும் நிலைமையை உறுதி செய்ய பகுத்தறிவுச் சிந்தனையையும் - சுயமரியாதை உணர்வையும் மக்களிடையே தொடர்ந்து விதைத்திட இந்தக் கருஞ்சட்டை பட்டாளம் உறுதிமொழி எடுக்கும் மாநாடுதான், இந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - திராவிடர் கழக மாநில மாநாடு!

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்றும் உறுதி எடுப்போம்! வென்று காட்டுவோம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories