தமிழ்நாடு

காந்தியடிகளின் 157-வது பிறந்த நாள்! : நாளை (அக்.2) மரியாதை செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உத்தமர் காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2ஆம் நாள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

காந்தியடிகளின் 157-வது பிறந்த நாள்! : நாளை (அக்.2) மரியாதை செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உத்தமர் காந்தியடிகளின் 157-வது பிறந்த நாளான, 2.10.2025 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

உத்தமர் காந்தியடிகள் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் போர்ப்பந்தரில் பிறந்தார். தமது 18 ஆம் வயதில் பள்ளிப்படிப்பை முடித்து, சட்டப் படிப்பை இங்கிலாந்து சென்று முடித்தார். கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் ஏற்பட்ட நட்பால் மகாத்மா காந்தியடிகள் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஒரு வழக்கில் வாதாட ஆப்பிரிக்கா சென்ற காந்தியடிகள் அங்கு இந்தியர்களுக்கு ஆங்கிலேய அரசு இழைத்த கொடுமைகளை எதிர்த்துப் போராடினார். இதன் தொடர்ச்சியாக, காந்தியடிகள் இந்தியா திரும்பியபின், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவில், ஆங்கிலேய அரசு இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்ததைக் கண்டித்து அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்திலிருந்த தண்டி நோக்கி நீண்ட நடைபயணத்தை தொடர்ந்தார்.

தண்டி கடற்கரை வந்து உப்பினைத் தயாரித்து, ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் பகிரங்கமாகப் பொதுமக்களுக்கு உப்பு விநியோகம் செய்தார். இந்நிகழ்வு "உப்பு சத்தியாகிரகம்" என்று அழைக்கப்படுகிறது.

காந்தியடிகளின் 157-வது பிறந்த நாள்! : நாளை (அக்.2) மரியாதை செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உத்தமர் காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு மதுரைக்கு வருகை புரிந்தபோது, பெரும்பாலான மக்கள் போதிய ஆடையின்றி வேட்டி துண்டு அணிந்திருப்பதைக் கண்டார். அதனைக் கண்டு வருந்திய உத்தமர் காந்தியடிகள் அன்று முதல் தம் ஆடம்பர உடைகளைத் துறந்து, எளிமையான கதர் ஆடைகளை அணியத் தொடங்கியதோடு, தமது இறுதி நாள் வரை கதர் ஆடைகளை மட்டுமே அணிந்து வந்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியமாக ”வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் உத்தமர் காந்தியடிகள் பங்கேற்றுப் பெரும்பங்கு வகித்தார். காந்தியடிகளுக்கு "மகாத்மா" எனும் பட்டத்தை கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் வழங்கினார்.

அண்ணல் காந்தியடிகள் வலிமையான ஆயுதங்கள் கொண்டிருந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து அஹிம்சை வழியில் போராடி இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர் என்பதால், இந்தியாவின் "தேசத் தந்தை காந்தியடிகள்" எனப் போற்றப்படுகிறார்.

தமிழ்நாடு அரசால் உத்தமர் காந்தியடிகளின் தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சென்னை, கிண்டி மற்றும் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

உத்தமர் காந்தியடிகளின் புகழுக்குப், பெருமை சேர்க்கும் வகையில், 15.8.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச்சிலையை நிறுவித் திறந்து வைத்தார்கள்.

இந்த ஆண்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும், உத்தமர் காந்தியடிகளின் 157ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அவர்கள், காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

banner

Related Stories

Related Stories