பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி அரியலூர் மாவட்டம் வழியாக செல்லும் மருதையாற்றின் குறிக்கே மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தடுப்பணை கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து கடந்த 2004 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்திற்கு வந்த தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறுதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என அறிவித்தார்.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் தடுப்பணை கட்டுவதற்கான தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டு 24 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர்,"விவசாயிகளின் கோரிக்கையின் படி மருதையாற்றில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதன் மூலம் மறுதையாற்றை சுற்றியுள்ள பகுதிக்கான நீர்மட்டம் உயர்வதோடு கிணறுகள் மற்றும் ஆழ்துளைகிணறுகளிலும் நீர் மட்டம் உயர்வதற்கான சூழல் உள்ளது. அதனால் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் மருதையாற்றை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பயன்பெறும்.
அண்மையில் அரியலூரில் பேசிய நடிகர் விஜய், மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியுள்ளார். அரசின் நடைமுறை தெரியாமல் வாய் போன போக்கில் குற்றம் சொல்ல வேண்டும் .
மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கடந்த ஏப்ரல் மாதமே அரசாணை வெளியிடப்பட்டது கூட தெரியாமல் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு இருக்கிறார். உண்மை என்னவென்று அறிந்து நடிகர் விஜய் பேச வேண்டும்.
எல்லோரையும் ஒருமையில் பேசும் அளவிற்கு அரசியலில் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து விட்டார். ஒருபோதும் பழனிசாமியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.