முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் TN RISING ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டத்தில் இன்று (3.9.2025) இங்கிலாந்து நாட்டின், இலண்டன் நகரில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களுடனான தொடர்ச்சியான உயர் மட்ட கூட்டங்களுக்கு தலைமை தாங்கி, பாதுகாப்பு மற்றும் விண்வெளி, கப்பல் கட்டும் நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழ்நாட்டை தேசிய மற்றும் உலகளாவிய முன்னணி மாநிலமாக நிலைநிறுத்துவதில், அதிக மதிப்புள்ள மற்றும் எதிர்காலத்திற்கு பொருத்தமான துறைகளில் தமிழ்நாட்டிற்கான நீண்டகால உத்திக்கான நடவடிக்கைகளைக் குறிக்கின்றன.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் சந்திப்பு
உலகின் முன்னணி விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடனான முதலமைச்சர் அவர்களின் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இச்சந்திப்பின்போது, MRO வசதி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயிற்சி மையம் மற்றும் ஓசூரில் அதன் IAMPL கூட்டு முயற்சியின் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் ஆகியவற்றுடன், தமிழ்நாட்டில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதில் இந்நிறுவனம் தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தியது.
இந்தியாவின் இரண்டு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்களில் ஒன்றான தமிழ்நாட்டில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்த ஈடுபாடு, மேம்பட்ட விண்வெளி உற்பத்திக்கான மையமாக மாநிலத்தின் திறனை விளக்குகிறது.
கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
லாயிட்ஸ் லிஸ்ட் இன்டலிஜென்ஸ் நிறுவனம் (SEASEARCHER) சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இது 2026 நிதியாண்டில் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். கடல்சார் இடர் மேலாண்மை, காப்பீடு மற்றும் கப்பல் கண்காணிப்பு பகுப்பாய்வுகளில் உலகின் முன்னணி நிறுவனமான லாயிட்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கம், கப்பல் கட்டுதல், துறைமுக மேலாண்மை மற்றும் கடல்சார் தொழில்நுட்பத்தில் தமிழ்நாட்டின் திறன்களை கணிசமாக மேம்படுத்தும்.
இதன் முதன்மையான SEASEARCHER நிறுவனம், உலகளாவிய கப்பல் இயக்கங்கள், உரிமை கட்டமைப்புகள் மற்றும் துறைமுக நடவடிக்கைகள் பற்றிய நிகழ்நேரத் தெரிவுநிலையை வழங்குகிறது. இது தமிழ்நாட்டின் பரந்த நீலப் பொருளாதார திறனை ஊக்குவிப்பதாக அமையும்.
வில்சன் பவர் & டிஸ்ட்ரிபியூஷன் டெக்னாலஜிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ஒரு புதிய மின்சார மின்மாற்றி உற்பத்தி மையத்தை நிறுவிட ரூ.300 கோடி முதலீடு மற்றும் 543 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன் உற்பத்தியில் 80 முதல் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்குச் செல்கிறது. இது, தமிழ்நாட்டின் பசுமை எரிசக்தி உற்பத்தி மூலதனமாக மாறுவதற்கான நேரடியாக பங்களிப்பை அளிப்பதோடு, அதன் மாசற்ற தொழில்நுட்ப மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்தும்.
இந்தியாவின் முன்னணி ஜவுளி ஏற்றுமதி மையமாக தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்தும் வகையில், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டானியா கார்மென்ட் பேக்கேஜிங்கின் துணை நிறுவனமான பிரிட்டானியா RFID டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனம், திருப்பூர் மற்றும் நாமக்கல்லில் அதிக திறன் கொண்ட RFID Tag உற்பத்தி பிரிவை அமைக்க ரூ.520 கோடி முதலீடு மற்றும் 550 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன்மூலம், ஆடைத் துறையில் தடமறிதல் மற்றும் விநியோகச் சங்கிலி டிஜிட்டல் மயமாக்கலை ஆதரிப்பதோடு, ஏற்றுமதி போட்டித்தன்மையையும் அதிகரிக்கும்.
கல்வித் துறையில், கோயம்புத்தூரில் வடிவமைப்பு சார்ந்த உயர்கல்வி நிறுவனத்தைத் தொடங்க Ecole Intuit Lab நிறுவனம், சக்தி எக்சலன்ஸ் அகாடமியுடன் கூட்டாண்மையில் இணைந்து, புதுமை மற்றும் தனித்துவ அடையாளத்தின் (Branding) முக்கிய இயக்கியாக படைப்பாற்றல் பொருளாதாரம் மாறி வருவதால், இந்த முயற்சி தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறை படைப்பாற்றல் நிபுணர்களை உருவாக்கும்.
கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக எக்ஸிடெர் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. கூட்டு ஆராய்ச்சி, ஆசிரியர் பரிமாற்ற திட்டங்கள் மற்றும் முன்னுரிமைத் துறைகளில் உலகளாவிய அறிவு பரிமாற்றத்தை வளர்ப்பதில் இந்த கூட்டாண்மை கவனம் செலுத்தும்.
இந்த சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், துறை ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், உயர்தர சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும், இந்தியா - இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Agreement) தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்வதற்கான உறுதியான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.
FTA கட்டமைப்பிலிருந்து கிடைக்கும் கூடுதல் வாய்ப்புகளை ஆராய்ந்திட இன்று காலை பல கூடுதல் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.