தமிழ்நாடு

காவல் துறை, தீயணைப்பு, மீட்புப்பணி, சிறைகள் துறைக்கு புதிய கட்டடங்கள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் !

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் & சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் ரூ.45.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

காவல் துறை, தீயணைப்பு, மீட்புப்பணி, சிறைகள் துறைக்கு புதிய கட்டடங்கள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் & சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் ரூ.45.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.

இது குறித்து வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசின் அறிக்கை விவரம் :

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (31.7.2025) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 27 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 13.54 கோடி ரூபாய் செலவிலும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 60 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் 3 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள போதை மருந்து ஆய்வுப் பிரிவுகள் ஆகியவற்றை திறந்து வைத்து, 229.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை காவல்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் வகையில் 510.03 கோடி ரூபாய் செலவில் 3051 காவலர் குடியிருப்புகள், 59.75 கோடி ரூபாய் செலவில் 51 காவல் நிலையக் கட்டடங்கள், 122.40 கோடி ரூபாய் செலவில் 18 காவல்துறை கட்டடங்கள் மற்றும் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் 55.19 கோடி ரூபாய் மதிப்பிலான 253 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.

காவல்துறை சார்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள கட்டடங்களின் விவரங்கள்

கடலூரில் 1 கோடியே 86 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, தஞ்சாவூர் மாவட்டம் – திருவிடைமருதூரில் 6 கோடியே 2 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 24 காவலர் குடியிருப்புகள்;

சென்னை மாவட்டம் – தேனாம்பேட்டை மற்றும் மண்ணடியில் 7 கோடியே 22 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 காவல் நிலையக் கட்டடங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் – பெரும்பாக்கத்தில் 1 கோடியே 85 இலட்சத்து 63 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்;

சென்னை மாவட்டம் – கீழ்ப்பாக்கத்தில் 3 கோடியே 30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துணை ஆணையாளர் அலுவலகம், வேலூர் மாவட்டம் – சேவூரில் 4 கோடியே 77 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 15-ஆம் அணி தளவாய் நிர்வாக அலுவலகம், திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் 2 கோடியே 53 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகங்கள்;

என மொத்தம் 27 கோடியே 58 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 25 காவலர் குடியிருப்புகள், 3 காவல் நிலையங்கள் மற்றும் 4 காவல்துறை கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

காவல் துறை, தீயணைப்பு, மீட்புப்பணி, சிறைகள் துறைக்கு புதிய கட்டடங்கள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் !

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது, தீயிலிருந்து உயிர்களையும், உடைமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச்சரிவுகள் போன்றவைகளிலிருந்தும் மக்களை காப்பதும், அவசர உதவி புரிவதும் இத்துறையின் முக்கிய பணியாகும்.

இத்துறையின் செயல்திறனை மேம்படுத்திட புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் கட்டித் தருதல், பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தருதல், பல்வேறு நவீன கருவிகள் மற்றும் தீயணைப்பு ஊர்திகளை வழங்குதல் போன்ற பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் வகையில் 45.75 கோடி ரூபாய் செலவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 249 குடியிருப்புகள், 64.79 கோடி ரூபாய் செலவில் 34 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள், 2.45 கோடி ரூபாய் செலவில் 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக் கட்டடங்கள், என மொத்தம் ரூ.112.99 கோடி செலவிலான கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள கட்டடங்களின் விவரங்கள்

சென்னை மாவட்டம் – வேப்பேரியில் 74 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 தீயணைப்பு நிலைய அலுவலர் குடியிருப்புகள்; சென்னை மாவட்டம் – வண்ணையம்பதி, தேனாம்பேட்டை மற்றும் வேப்பேரி ஆகிய இடங்களில் 12 கோடியே 79 இலட்சத்து 56 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 3 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள்;

என மொத்தம் 13 கோடியே 53 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையானது, நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு வழங்கும் தண்டனைகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி, அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான கல்வி மற்றும் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது.

சிறைகள் மற்றும் சிறைவாசிகளின் பாதுகாப்பினை மேம்படுத்துதல், சிறைவாசிகளின் நலன் மற்றும் சிறைவாசிகளை பொறுப்புள்ள நபர்களாக மாற்றி சமுதாயத்தில் மீண்டும் இணைத்தல் ஆகிய மூன்றும் இத்துறையின் முக்கிய நோக்கங்களாகும்.

சிறைப் பணியாளர்கள் மற்றும் சிறைவாசிகளுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்காக உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காகவும் நவீனமயமாக்குவதற்காகவும் இவ்வரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் வகையில் 9.71 கோடி ரூபாய் செலவில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 51 குடியிருப்புகள், 28.58 கோடி ரூபாய் செலவில் 17 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கட்டடங்கள், என மொத்தம் 38.29 கோடி ரூபாய் செலவிலான கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள கட்டடங்களின் விவரங்கள் திருநெல்வேலி மாவட்டம் – பாளையங்கோட்டை சிறை வளாகத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 சிறை அலுவலர் குடியிருப்புகள்;

தடய அறிவியல் துறை சார்பில் நிறுவப்பட்டுள்ள போதை மருந்து ஆய்வுப் பிரிவுகளின் விவரங்கள்

2023 – 2024 ஆம் ஆண்டிற்கான காவல் துறை மானியக் கோரிக்கையில், கோயம்புத்தூர் மற்றும் இராமநாதபுரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களில் புதியதாக போதை மருந்து ஆய்வுப் பிரிவுகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு புலனாய்வாளர்களுக்கு போதைப் பொருட்களை ஆய்வு மேற்கொண்டு அதன் வகையை கண்டறியவும், அது தொடர்பான தடயவியல் ஆய்வறிக்கைகளை விரைந்து வழங்கிடவும் கோயம்புத்தூர் மற்றும் இராமநாதபுரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களில் புதியதாக 3 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள போதை மருந்து ஆய்வுப் பிரிவுகளை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை மற்றும் தடய அறிவியல் துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 45 கோடியே 47 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்

மதுரை மத்திய சிறைச்சாலையில் இடநெருக்கடி காரணமாக மதுரை புறநகர் பகுதியான செம்பூர் பகுதிக்கு மாற்றியமைக்கும் வகையில் முதற்கட்டமாக 229 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள மத்திய சிறை, 113 சிறைக்காவலர் குடியிருப்புகள், கான்கிரீட் சாலை மற்றும் மதில் சுவர் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

banner

Related Stories

Related Stories