வெளிநாட்டு சிறைகளில் குறிப்பாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் நிலை குறித்து திமுக கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகளின் நிலை என்ன? மேற்கூறிய காலகட்டத்தில் இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட மொத்த மீனவர்கள் மற்றும் படகுகளின் எண்ணிக்கை என்ன?
இன்னும் இலங்கை சிறைகளில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 29 மீனவர்களின் நிலை என்ன?மேலும் இவர்கள் அவைவரையும் மீட்க ஒன்றிய அரசு எடுத்துவரும் நடவடிக்கை என்ன? என கேள்விகள் எழுப்பி இருக்கிறார்.
உரம் வழங்குவதில் தாமதம் ஏன்?
2024-25 நிதியாண்டில் மழைக்கால மற்றும் குளிர்கால பயிர்களுக்கான யூரியா மற்றும் NPK எனப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் கலவை உரங்களை தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு வழங்குவது குறித்த தகவல்களை தென் சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் தேவைக்கு உரங்களை வழங்குவதில் உள்ள பற்றாக்குறைகள் யாவை?. சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் மானியம் மற்றும் முன்கூட்டியே உரங்களை அனுப்பச் சொல்லும் தம்ழிநாட்டின் கோரிக்கைகளுக்கு இதுவரை பதில்லாதது ஏன்?
யூரியா மற்றும் DAP மீதான விலை ஒழுங்குமுறையின் தற்போதைய நிலை மற்றும் கடந்த ஒரு வருடத்தில் தமிழ்நாட்டில் சிறு விவசாயிகள் மீதான இந்த மாற்றங்களின் தாக்கம் என்ன?
மாநிலத்தில் மானிய விலை உரங்கள் திசை திருப்பப்படுவதையோ அல்லது கள்ளச் சந்தைப்படுத்தப்படுவதையோ தடுக்க ஏதேனும் கண்காணிப்பு வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதா? அப்படியானால், அவற்றின் விவரங்கள் என்ன? என்று பல்வேறு கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார்.