கர்ப்பப் பை வாய் புற்று நோய் பரிசோதனை விகிதத்தை அதிகரிக்கவும், விழிப்புணர்வை பரவலாக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி MP கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், இந்தியப் பெண்களிடையே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை அளவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதற்கு முதன்மையான காரணம், இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததும் இச்சோதனை பரவலாக்கப்படாததும்தான் என்பதை அரசு அறிந்திருக்கிறதா?. கர்ப்பப் பை வாய்ப் புற்றுநோய் பற்றிய பொதுமக்களின் புரிதலை அரசாங்கம் மதிப்பிட்டிருக்கிறதா? அதுபற்றி மாநில வாரியாக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சோதனை செய்துகொள்வதற்கான பரப்புரைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?.
அசிட்டிக் அமில சோதனை, பாபனிகோலாவ் சோதனை - VIA/Pap சோதனை உள்ளிட்ட சோதனை முறைகளை ஒருங்கிணைத்து கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகளை செய்ய ஒன்றிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? .
சமூக சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள், நடமாடும் சோதனை மையங்கள் மூலமாகவும், குறிப்பாக பின்தங்கிய மற்றும் கிராமப்புறங்களிலும் இவற்றை ஒருங்கிணைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? .
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க, 30 முதல் 49 வயதுடைய பெண்களில் தேசிய பரிசோதனை விகிதத்தை தற்போதைய 2 சதவிகிதத்தில் இருந்து குறைந்தது 50 சதவிகிதமாக உயர்த்த அமைச்சகம் காலக்கெடு வைத்திருக்கிறதா?“என்று கேள்விகளை கேட்டுள்ளார்.
இக்கேள்விகளுக்கு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் அளித்த பதிலில், “சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இருந்தாலும், விரிவான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் (AAM) இயக்கம் மூலம் , சமூக மட்டத்தில் நல்வாழ்வு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதன் மூலம் புற்றுநோய் தடுப்பு வலியுறுத்தப்படுகிறது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட தொற்று அல்லாத நோய்கள் (NCDகள்) பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான முயற்சிகளில்.. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம், உலக புற்றுநோய் தினம் கடைபிடிப்பது மற்றும் தொடர்ச்சியான விழிப்புணர்வுக்காக அச்சு,மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் மூலமான பரப்புரைகள் ஆகியவை அடங்கும். மேலும், தேசிய சுகாதார மிஷன் (NHM) கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவர்களின் விழிப்புணர்வு பிரச்சார திட்டங்களுக்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உட்பட பொதுவான தொற்று அல்லாத நோய்களை (NCDகள்) பரிசோதித்தல், நிர்வகித்தல் மற்றும் தடுப்பதற்காக மக்கள் தொகை அடிப்படையிலான சோதனையிடல், விரிவான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனை 30 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்களை இலக்காகக் கொண்டது. மேலும் முதன்மையாக துணை சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட பொது சுகாதார மையங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அசிட்டிக் அமில பரிசோதனை இதற்கென பயிற்சி பெற்ற ஊழியர்கள் மூலம் நடத்தப்படுகிறது. இந்த சோதனையில் நேர்மறை முடிவுகள் கண்டறியப்படுவர்கள் உயர் சிகிச்சை மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் அதாவது ஆஷா பணியாளர்கள் (ASHA) தங்களது பகுதியில் உள்ள பெண்களின் சரிபார்ப்பு (CBAC) படிவங்களைப் பயன்படுத்தி முப்பது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள் பற்றிய ஆபத்து மதிப்பீட்டைச் செய்கிறார்கள். இதன் அடிப்படையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் பிற பொதுவான NCDகளை பரிசோதிப்பதற்காக நபர்களை அழைத்து வருகிறார்கள். வழக்கமான சுகாதார பரிசோதனைகள் குறித்தும் ஆரம்பகால கண்டறிதலின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.
30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களின் உலகளாவிய பரிசோதனை இலக்கை அடைவதற்காக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொற்று அல்லாத நோய்களின் பரிசோதனை பிரச்சாரத்தை 20 பிப்ரவரி, 2025 முதல் 31 மார்ச் 2025 வரை நடத்தியிருக்கிறது. தேசிய தொற்றா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆயுஷ் ஆரோக்கிய மந்திர் மற்றும் பிற சுகாதார மையங்கள் வழியாக இந்தப் பிரச்சாரம் நடத்தப்பட்டது.
ஜூலை 20, 2025 நிலவரப்படி தேசிய NCD தளத்தின்படி 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 25.42 கோடி பெண்களில், 10.18 கோடி பேருக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனையின் தற்போதைய விகிதத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.