முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் மூன்று நாட்கள் ஓய்வு மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இன்று (22.7.2025) அவர் அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் அவர்களுடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த 15.7.2025 தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் அவர்கள் கேட்டு அறிந்தார்.
இந்நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைதளத்தில், “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.