சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் இன்று (21.7.2025) உயிர்மை பதிப்பகம் சார்பாக துர்கா ஸ்டாலின் எழுதிய “அவரும் நானும் - பாகம் 2” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நூலினை எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் வெளியிட, முதல் பிரதியை டாபே குழுமத்தின் இயக்குநர் மல்லிகா சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டின், “தமிழர்களுக்காகவே ஒருவர் உயிர் வாழ்கிறார். அவர் தமிழர்களுக்காகவே தன்னை ஈகின்றார். அரிய பெரும் செயலை எல்லாம் தமிழ்நாட்டு அன்பின் ஆழத்தில் காணுகின்றார்.
அத்தமிழர்தான் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருடனான பயணத்தைதான் அண்ணியார் துர்கா ஸ்டாலின் எழுத்தாக்கம் செய்துள்ளார்” என்றார்.
தொடர்ந்து பேசிய எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், “இந்தியாவிலேயே தி.மு.க என்கிற இயக்கம் மட்டும்தான் புத்தகம் எழுதுவது, பதிப்பிப்பது மற்றும் புத்தகத்தை பரப்புவது போன்றவற்றை அரசியல் பணியாக செய்து கொண்டிருக்கிறது.
நூலகங்களை இயக்கமாக செயல்படுத்தி வருகிறது. காரணம், எங்களுக்கு ஆழமான கருத்தியலும், வாழ்க்கையும் இருக்கிறது. அதனால்தான், தமிழ்நாடு முழுவதும் புத்தக புழக்கத்தை அதிகரித்து வருகிறோம்” என்றார்.
இவர்களைத் தொடர்ந்து, ஏற்புரை ஆற்றிய துர்கா ஸ்டாலின் அவர்கள், இந்நூல் வெளிவர உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.