தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மக்கள் ’முதல்வரின் மனிதநேய விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் வில்லிவாக்கம் ராஜாஜி நகர், கொளத்தூர் பெருமாள் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் 150-ஆவது நாளாக நடைபெற்ற அன்னம் தரும் அமுதக் கரங்கள் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு ஏழை- எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரன், ”முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு பாராட்டுக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதை ஒரு சாதனை நிகழ்வாக நான் பார்கிறேன்.
2026 தேர்தலில் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்தும், எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு, வீம்புக்கு எதையாவது பேசி வருகிறார். தி.மு.க ஆட்சி மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை வைக்கிறார். தினமும் பத்து பொய்களை சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் பொய்களை மட்டுமே பேசி வருகிறார்.
வலுவாக இருக்கும் தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்பட்டத பார்த்தார் பழனிசாமி. ஆனால் அது எடுபடவில்லை. எங்கள் கூட்டணி தலைவர்களே தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். 2026 தேர்தலில் தி.மு.ககூட்டணி மகத்தான வெற்றியை பெறும்” என தெரிவித்துள்ளார்.