திருப்புவனம் போலீஸ் டி.எஸ்.பி . சண்முகசுந்தரத்தின் கீழ் செயல்பட்டு வந்த தனிப்படை போலீசாரே காவலாளி அஜித்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர் என்றும், அந்த விசாரணையின்போதுதான் அவர் இறந்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே உயர்போலீஸ் அதிகாரிகளின் கீழ் செயல்படும் அதிகாரபூர்வமற்ற தனிப்படைகளை கலைப்பதற்கு டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள்,மண்டல ஐ.ஜி.க்கள், போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் துணை கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோரின் கீழ் செயல்படும் சிறப்பு படைகள் நிரந்தரமாக செயல்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏதாவது குற்ற வழக்குகள் நடைபெற்றால் அதில் துப்பு துலக்குவதற்காக மட்டுமே துணை கமிஷனர்கள் ,உதவி கமிஷனர்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் ஆகியோர் தங்களுக்கு கீழ் பணியாற்ற தனி படைகளை அமைத்துக் கொள்ளலாம் என்றும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையை அமைப்பதற்கும் மண்டல ஐஜிக்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் ஆகியோரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டுகள் துணை போலி சூப்பரண்டுகள் மற்றும் மாநகர பகுதிகளில் துணை கமிஷனர்கள் உதவி கமிஷனர்கள் ஆகியோரின் கீழ் செயல்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் உடனடியாக மாற்றுப் பணிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் டிஜிபி அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.