சென்னையில் உள்ள மதுபார் ஒன்றில் அடிதடி கொலை முயற்சி வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், கொகைன் விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில், நடிகர் ஸ்ரீகாந்த்க்கு போதைப் பொருள் விற்றது தெரியவந்தது.
இதன்பேரில், ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, விசாரித்த போலீசார், அவரையும் கைது செய்தனர். இந்த நிலையில், ’கழுகு’ பட நடிகர் கிருஷ்ணாவுக்கும், போதைப் பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இதன்பேரில், தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை பிடித்து நுங்கம்பாக்கம் போலீசார், விடிய விடிய விசாரணை நடத்தினர். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை பெசன்ட் நகர் அமைந்துள்ள நடிகர் கிருஷ்ணா வீட்டில் இரண்டு மணி நேரம் போலீசார் சோதனை நடத்தினர். கலாக்ஷேத்ரா காலனியில் ராமச்சந்திரா சாலையில் நடிகர் கிருஷ்ணா குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீடு கார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும், நடிகர் கிருஷ்ணாவின் சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வு செய்து போதைப் பொருள் தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் உள்ளதா என்பது குறித்தும் சைபர் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.