ஒன்றிய அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறைக் காலத்தை ஒரு ஆண்டாக நீட்டிக்க வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரா சிங்கிற்கு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசு தமிழக அரசுப்பணியில் உள்ள பெண் ஊழியர்களுக்கு சமீபத்தில் மகப்பேறு விடுமுறைக் காலத்தை 6 மாதங்களில் இருந்து ஒரு ஆண்டாக அதிகரித்து ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இத் துணிச்சலான திட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் இந்த முன்மாதிரி திட்டம், பெண் அரசு ஊழியர்களுக்கு பிரசவகாலத்தில் ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய வகையிலும் அவர்கள் குழந்தைகளின் நலத்துக்கும் உதவியாக அமைந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் கூட பெண் ஊழியர்களுக்குப் போதுமான பிரசவகால விடுமுறை வழங்குவது அவர்கள் உடல் நலத்தைக் காக்க உதவுவதுடன் குழந்தைகளுக்குக் குறைந்த பட்சம் 6 மாத காலமாவது தாய்ப்பால் கொடுக்க வழி ஏற்படும். இதனால் தாய்மார்களின் நலனும், குழந்தைகளின் ஆரோக்கியமும் காக்கப்படும் என்று கூறியுள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசின் திட்டத்தை முன்மாதிரியாகப் பின்பற்றி மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கும் ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.