தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.6.2025) தஞ்சாவூரில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினரும், தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளருமான துரை. சந்திரசேகரன் அவர்களின் சகோதரர் துரைபாண்டியன் மகள் தனுஸ்ரீ மற்றும் மன்னார்குடி நகர கழகச் செயலாளர் வீரா கணேசன் அவர்களின் சகோதரர் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் அவர்களின் மகன் வீரவிஜயன் ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரை:-
கழகத்தின் இரண்டு தூண்களாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய அதில் ஒரு தூணாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய துரை சந்திரசேகரன் அவர்கள், அதேபோல் மற்றொரு தூணாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய வீர கதிரவன் ஆகியோருடைய இல்லத்தில் நடைபெறக்கூடிய திருமணம் இந்தத் திருமணம்.
நம்முடைய நீதியரசர் புகழேந்தி அவர்கள் பேசியபோது, உறவின் அடிப்படையில் எங்கள் வீட்டுத் திருமணம் என்று சொன்னார் – நான் சொல்கிறேன் – உறவின் அடிப்படையில் மட்டுமல்ல, கழகக் குடும்ப அடிப்படையில் இது எங்கள் வீட்டுத் திருமணம், நம்முடைய வீட்டுத் திருமணம். எனவே, என்னுடைய வீட்டுத் திருமணம் என்று சொல்லி சுருக்கிக் கொள்ளாமல், எங்கள் கழக குடும்பத்தில் நடைபெறக்கூடிய திருமணமாக இருக்கின்ற காரணத்தால், எல்லோரும் குடும்பப் பாச உணர்வோடு இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட மணவிழா நிகழ்ச்சியில், இந்த மணவிழாவை நடத்தி வைத்து, அதற்குப் பிறகு மணவிழா கண்டிருக்கக்கூடிய மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார்.
இந்த மணவிழாவை நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கழகம் என்றாலே கொள்கைக் குடும்பம்தான். அப்படி இரண்டு குடும்பங்களுக்குள் இருக்கக்கூடிய இந்த பாசப் பிணைப்பு உருவாகி இருப்பது என்பது யாராலும் மறுக்க முடியாது.
வரவேற்புரை ஆற்றியிருக்கக்கூடிய நம்முடைய துரை சந்திரசேகரன் அவர்கள், அவரைப் பற்றி உங்களுக்கெல்லாம் எல்லோருக்கும் நன்றாக தெரியும். ஐந்து முறை திருவையாறு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடியவர். இருந்தாலும், MLA என்று சொல்வதைவிட, ‘திருவையாற்றின் துரை’ என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும். மக்கள் செல்வாக்கை தொடர்ந்து பெற்று, அதில் சிறப்பாக பணியாற்றக்கூடியவர், இந்தக் கழகத்திற்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கக்கூடியவர்.
மிகச் சிறப்பாக பணியாற்றி, தனிப்பட்ட தனக்கு மட்டும் நல்ல பெயர் வாங்கிக் கொள்பவர் என்ற எண்ணம் இல்லாமல், கழகத்திற்கும் நல்ல பெயரை வாங்கித் தரவேண்டும் என்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு ஆற்றல் மிக்க சிறந்த செயல்வீரர் நம்முடைய துரை சந்திரசேகர் அவர்கள். அவரின் தம்பி மகளான தனுஸ்ரீ அவர்களுக்கும், மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீர கதிரவனின் மகனுக்கும், இன்றைக்கு சம்பந்தம் பேசி இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
மாணவராக இருந்த காலத்திலேயே கழகத்தின் காவலராக வளர்ந்தவர் தான் நம்முடைய வீர கதிரவன் அவர்கள். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தன்னுடைய வாதத் திறமை மூலமாவும் – தன்னுடைய சட்ட அறிவாலும், கழகத்திற்குத் துணை நின்றவர் நம்முடைய வீர கதிரவன் அவர்கள். இவரின் அண்ணன் வீர கணேசன் அவர்களும் தொடர்ந்து ஐந்து முறை நகரச் செயலாளராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சாதாரணமாக ஒரு முறை பணியாற்றுவதே கடினம் – திமுக-விற்கு கழக செயலாளர் பதவிக்கு வருவது எவ்வளவு சிரமம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதில் நகரச் செயலாளராக இருந்து ஐந்து முறை பணியாற்றியிருக்கிறார் என்று சொன்னால், அவருடைய சாமர்த்தியத்தை நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டிக் கொண்டிருக்கிறோம்.
நானும் அவரை பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கழகத்திற்காக உழைக்கக்கூடியவர். கழகத்தால் தனக்கு என்ன இலாபம் கிடைக்கிறது என்று எண்ணாமல், தன்னால் இந்த இயக்கத்திற்கு இலாபம் என்ற உணர்வோடு உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த குடும்பத்தில் இன்றைக்கு நடைபெறக்கூடிய திருமணமாக, இத்திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மணவிழாவிலும் நான் மறக்காமல் சொல்வதுண்டு. என்னவென்று கேட்டால், நடைபெற்றிருக்கக்கூடிய இந்தத் திருமணம் ஒரு சீர்திருத்த திருமணமாக நடைபெற்றிருக்கிறது. இதுபோன்ற ஒரு சீர்திருத்த திருமணம் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடி ஆகும் என்ற அங்கீகாரத்தை அன்றைக்கு நாம் பெற்றிருக்கவில்லை.
ஆனால், 1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, அறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு, முதலமைச்சராக சட்டமன்றதில் நுழைந்து, சட்டமன்றத்திற்குள் நுழைந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் என்ன என்று கேட்டால், சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடி ஆகும் என்று கொண்டு வந்து தீர்மானத்தை நிறைவேற்றினார். ஆகவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்தத் திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது.
1967-ல்தான் அதற்கு முதல் அங்கீகாரம் கிடைத்தது. அப்படிப்பட்ட முறையில் நடைபெறக்கூடிய இந்தத் திருமணம் நாமெல்லாம் மகிழத்தக்கக்கூடிய வகையில் இந்தத் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இங்கே நீதியரசர்கள் வந்திருக்கிறார்கள்.
அதேபோல இன்னொரு இரண்டு நீதியரசர்கள் மகாதேவன் அவர்கள், சுந்தரேஷ் அவர்கள் வந்திருக்கிறார்கள். நான் ஆச்சரியத்தோடு பார்த்தேன். அதுவும் இரண்டு பேரும் தமிழில் உரையாற்றி இருக்கிறார்கள். தமிழில் பேசிய நீதியரசர்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, பல ஆண்டு காலமாக உச்சநீதிமன்ற நீதியசரசர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபோது, நாங்கள் தொடர்ந்து வைக்கக்கூடிய கோரிக்கை என்னவென்றால், உச்சநீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழும் இருக்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.
சட்டமன்றத்தில் ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்திருந்தார். இன்றைக்கு நீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்புகள் தமிழில் வரக்கூடிய ஒரு சூழ்நிலையைப் பெற்றிருக்கிறது. அதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் – பெருமைப்படுகிறோம்.
ஆனால், உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடுகின்ற நேரத்தில் தமிழில் வாதாடுகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும் என்று நாங்கள் நீண்ட நாட்களாக அந்தக் கோரிக்கையை வைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த கோரிக்கையை நிறைவேறுவதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்கவேண்டும் என்று இந்த நேரத்தில் நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
ஏனென்றால், தமிழன், தமிழ் என்று நாம் பெருமையயோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தமிழ் மொழிக்கு செம்மொழி என்கின்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பது யாரும் மறுக்கமுடியாது. தலைவர் கலைஞர் அவர்கள் தமிழைப் பற்றி பேசுகின்றபோது அடிக்கடி சொல்வார்கள். பெருமைப்படுத்திச் சொல்வார்கள்.
உளம்கவர் ஓவியமே! உற்சாகக் காவியமே!
ஓடை நறுமலரே! ஒளியுமிழப் புதுநிலவே! அன்பே!
அழகே! அமுதே! உயிரே! இன்பமே! இனிய தென்றலே!
பனியே! கனியே! பசுந்தோகை மயிலே! பழரசச் சுவையே!
மரகத மணியே! மாணிக்கச் சுடரே! மன்பதை விளக்கே!
என்றெல்லாம் அழைத்திடத் தோன்றுகிறது. ஆனாலும்
தமிழே! உன்னைத் ‘தமிழே’ என்று அழைப்பதிலே உள்ள இன்பம் வேறு எந்தச் சொல்லிலும் இல்லையென்பேன்.
அப்படிப்பட்ட அந்த தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற அந்த சிறப்பை பெற்றுத் தந்தவர் – பெருமையைத் தேடி தந்தவர் நம்முடைய கலைஞர் அவர்கள். அதைத்தான் இன்றைக்கு நாங்கள் நீதியரசர்கள் வந்திருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி இந்த வேண்டுகோளை வைத்திருக்கிறோம் தவிர வேறோன்றுமில்லை.
மற்றொரு வேண்டுகோள் ஏனென்றால், மணமக்களுக்கு நான் வைக்கவேண்டிய வேண்டுகோள். அதேபோல ஒவ்வொருவருக்கும் நான் சொல்வதுண்டு. உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்ற அந்த வேண்டுகோளையும் நான் மணமக்களுக்கு நான் வைக்க விரும்புகிறேன்.
நம்முடைய மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சுந்தரேசர் அவர்கள் பேசுகின்றபோது ஒன்றை சொன்னார்கள் – பதினாறு பெற்று பெறுவாழ்வு வாழவேண்டும் என்ற சொன்னார்கள் – ஆனால், முன்பெல்லாம் இந்த வாழ்த்தை சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போது யாரும் சொல்லிக் கொள்வதில்லை. உள்ளபடியே, பதினாறு பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என்று சொன்னால், பதினாறு குழந்தைகள் அல்ல, பதினாறு செல்வங்கள். எந்தெந்த செல்வங்கள் என்று சொன்னால், முத்தமிழ்க் காவலர் டி.ஆர்.பி.விஸ்வநாதன் அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம் இதுதான். அந்த பதினாறு செல்வங்களை பெற்று மணமக்கள் வாழவேண்டும் என்றுதான் இங்கே உச்சநீதிமன்ற நீதியரசர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நம்முடைய மணமக்களை வாழ்த்தி, அனைத்து சிறப்புக்களையும் பெற்று, புரட்சிக் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய “வீட்டுக்கு விளக்காய், நாட்டுக்குத் தொண்டர்களாய்” வாழுங்கள் – வாழுங்கள் – வாழுங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதலமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.