கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு நள்ளிரவில் ஒரே நேரத்தில் மிக அதிக அளவு பயணிகள் வருவதால் இதை சமாளிக்க முன்கூட்டியை கூடுதல் பேருந்துகளை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு தினமும் 1.136 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 4ம் தேதி இரவு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இல்லாததால் 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட போக்குவரத்து துறை கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்து பயணிகளை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இது குறித்து விளக்கம் அளித்த போக்குவரத்துறை, கடந்த 4-ம் தேதி. வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 200 பேருந்து களும், 5-ம் தேதி 622 பேருந்துகளும், 6-ம் தேதி 798 பேருந்துகளும் இயக்கப்பட்டன என்று கூறியிருந்தது.
மேலும் , இந்த 3 நாட்களில் முன்பதிவு செய்திருந்த 24,831 பேர் உட்பட 2,76,735 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து போக்குவரத்து கழகங்களில் மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு நள்ளிரவில் ஒரே நேரத்தில் மிக அதிக அளவில் பயணிகள் வருவதை சமாளிக்க ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேருந்துகளை முன்கூட்டியை நிறுத்தி வைக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாங்கி இயக்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தில் வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.