தமிழ்நாடு

கொளத்தூரில் ரூ.118.33 கோடி மதிப்பில் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள்! - முழு விவரம் உள்ளே!

கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 மூத்த குடிமக்கள் உறைவிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, குளம், பூங்கா, நகர் கால்வாய் ஆகியவற்றை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

கொளத்தூரில் ரூ.118.33 கோடி மதிப்பில் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள்! - முழு விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (27.5.2025) கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 22.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி, 4.36 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்கா, 91.36 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட தணிகாச்சலம் நகர் கால்வாய் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், 150 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவ, மாணவியர்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் மடிக்கணினிகளையும், பயனாளிகளுக்கு கண்ணாடிகளையும் வழங்கினார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மூன்று மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுதல்

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ராஜாஜி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் கொளத்தூர், பழனி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ள மூன்று மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்களின் கட்டுமானப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

2021–2022 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், “சென்னை, பழனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மூத்த குடிமக்களைப் பேணிப் பாதுகாக்க மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் அனைத்து வசதிகளுடன் தொடங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், அருள்மிகு தேவி பாலியம்மன் திருக்கோயில் மற்றும் அருள்மிகு இளங்காளியம்மன் திருக்கோயில் சார்பில் 8.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொளத்தூரில் 27,525 சதுரடி கட்டட பரப்பளவில் 75 மூத்தக் குடிமக்கள் பயன்பெறும் வகையிலும், திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் 8.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழனியில் 38,750 சதுரடி கட்டட பரப்பளவில் 100 மூத்தக் குடிமக்கள் பயன்பெறும் வகையிலும், திருநெல்வேலி மாவட்டம், அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் சார்பில் 5.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாளையங்கோட்டையில் 15,473 சதுரடி கட்டட பரப்பளவில் 50 மூத்தக் குடிமக்கள் பயன்பெறும் வகையிலும், மூன்று மூத்தக் குடிமக்களுக்கான உறைவிடங்களின் கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

கொளத்தூரில் ரூ.118.33 கோடி மதிப்பில் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள்! - முழு விவரம் உள்ளே!

இந்த மூத்தக் குடிமக்கள் உறைவிடங்களில் வரவேற்பறை, குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள், உணவருந்தும் அறை, பல்நோக்கு அறை, சமயலறை, பார்வையாளர்கள் அறை, நூலகம், அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ மையம், நடைபாதை வசதிகளுடன் கூடிய சிறு பூங்கா, பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து, திருவான்மியூர், அருள்மிகு பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் திருக்கோயிலுக்கு ஓதுவார் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பார்வைதிறனற்ற மாற்றுத்திறனாளி செல்வி எஸ்.எஸ்.பிரியவதனா அவர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் பணி நியமன ஆணையினை வழங்கினார்.

அப்போது செல்வி பிரியவதனா அவர்கள் பணி நியமன ஆணை வழங்கியமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டார்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் மடிக்கணினிகள், பயனாளிகளுக்கு கண்ணாடிகள் வழங்குதல்

அதனைத் தொடர்ந்து, ஜி.கே.எம். காலனி பிரதான சாலை, அரிச்சந்திரா மைதானத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த 350 மாணவ, மாணவியர்களுக்கு தையல் இயந்திரங்கள், 131 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் 100 பயனாளிகளுக்கு கண்ணாடிகளை வழங்கினார்.

மேம்படுத்தப்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்கா திறந்து வைத்தல்

தொடர்ந்து, ஜி.கே.எம். காலனி 24A தெருவில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் 2 கோடியே 89 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் ஜெனரல் குமாரமங்கலம் குளத்தினை ஆழப்படுத்தி, புதிதாக குளக்கரை, நடைபாதை, சுற்றுச்சுவர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 1 கோடியே 47 இலட்சம் ரூபாய் செலவில் இறகுப்பந்தாட்ட விளையாட்டுத்திடல், யோகா மேடை, செயற்கை நீரருவி, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்காவினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களையும் வழங்குதல்

பின்னர், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 318 மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாராட்டு தெரிவித்து, புத்தகப் பை, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, பெரியார் நகர் 4-வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 150 மாற்றுத்திறனாளிகளுக்கு 1 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

மேம்படுத்தப்பட்ட தணிகாச்சலம் நகர் கால்வாய் திறந்து வைத்தல்

குமரன் நகர் 80 அடி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கொளத்தூர் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாச்சலம் நகர் உபரிநீர் கால்வாயினை 91 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற திறந்தவெளி கால்வாய் மற்றும் மூடிய வடிவிலான கால்வாயாக மேம்படுத்தப்பட்ட தணிகாச்சலம் நகர் கால்வாயை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த கால்வாயினை திறந்த வெளியாகவும், மூடிய வடிவிலும் அகலப்படுத்தி விநாடிக்கு 1000 கன அடி உபரிநீர் செல்லும் வகையில் புதிய கான்கிரீட் கால்வாயாக அமைக்கப்பட்டு உள்ளது. இப்பணியினால் யுனைடெட் காலனி, செல்வம் நகர், சிவானந்தா நகர், ராமலிங்கா நகர், நாகாத்தம்மன் கோயில் பகுதி, குமரன் நகர் மற்றும் சந்திர பிரபு காலனி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

இத்திட்டத்தில் இணை கால்வாய்களையும் சேர்த்து மூடிய வடிவிலான புதிய கான்கிரீட் கால்வாய் 2170 மீட்டரும், திறந்தவெளி கான்கிரீட் கால்வாய் மற்றும் கம்பி வேலி 1130 மீட்டரும், வெள்ள தடுப்பு சுவர் 70 மீட்டரும் மற்றும் கால்வாயின் மீது புதிதாக 9 சிறு பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories