இன்று சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இதன் மீதான பதில் உரையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் மூலமாக (TANFINET) தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 92 சதவீதம் பணிகள் 53 ஆயிரத்து 334 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாநிலத்தில் உள்ள 11626 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள பணிகள் நிறைவடைந்து அதன் மூலமாக வீடுகளுக்கு மாதம் 200 ரூபாய் கட்டணத்தில் 100 MBPS வேகத்தில் இணையதள சேவை வசதி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.