கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 1-ம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அவரது கனவுத்திட்டமான 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களின் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்படுத்தி பல்வேறு துறைகளில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
நான் முதல்வன் திட்டத்தின் ஒரு அங்கமாக ஸ்கவுட் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு 25 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டு பயன் பெற்றனர்.
அதன் அடுத்த கட்டமாக இந்த ஆண்டு பத்து மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் உள்ள 2 பல்கலைக்கழகங்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இப்படியாக அடுத்தடுத்து என்று நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்கள் பயன்பெற்று வரும் நிலையில், தற்போது இந்த திட்டத்தின் மூலம் 50 பேர் UPSC தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். என்ற செய்தி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சிவச்சந்திரன் UPSC தேர்வில் மாநில தரவரிசையில் முதலிடத்தையும், மோனிகா 39-வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ள்னர். இந்த திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கரபாண்டியன் ஆகிய 2 பேரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த செய்தி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நான் முதல்வன் திட்டம் சரியான திசையில் இலக்கை நோக்கி செல்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவுத்திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் குடிமைப்பணி தேர்விற்காக தமிழ்நாடு அரசு பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்றவர்களில், 50 பேர் UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ள செய்தி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
குறிப்பாக, மாநில அளவில் முதலிடமும் - அகில இந்திய அளவிலான தரவரிசைப்பட்டியலில் 23-ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ள தம்பி சிவச்சந்திரன், அகில இந்திய அளவில் 39-ஆவது இடத்தை பிடித்துள்ள தங்கை மோனிகா ஆகியோருக்கு என்னுடைய பாராட்டுகள்.
நான் முதல்வன் திட்டம், இலக்கை நோக்கி சரியான திசையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நான் முதல்வன் மூலம் ஒன்றிய அரசுப்பணிக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்கள், ஏழை - எளிய மக்கள் மேன்மையடையும் வண்ணம் செயலாற்றிட என் அன்பையும் - வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.