தமிழ்நாடு

துணை வேந்தர்கள் மாநாடு : “ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?" - செல்வப்பெருந்தகை ஆவேசம்!

துணை வேந்தர்கள் மாநாடு : “ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?" - செல்வப்பெருந்தகை ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் தொல்லைகள் கொடுத்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். ஆன்லைன் ரம்மி தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், இதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி தமிழ்நாடு அரசு வெற்றி கண்டு வருகிறது.

அந்த வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கத்தை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.

அதன்படி ஆளுநர் ஒப்புதல் அளிக்காத மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்தது. அதோடு ஆளுநரின் செயலுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. அதில் முக்கிய மசோதாவான பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரம் உட்பட, பல்கலைகழகங்கள் தொடர்பாக ஆளுநரிடம் இருந்த அதிகாரங்களை அனைத்து தமிழ்நாடு அரசுக்கு மாற்றம் செய்தும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதற்கு பலரும் உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த ஏப்.16-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் ஆளுநர் ரவியும் துணை வேந்தர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டு, அதனை வரும் ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

துணை வேந்தர்கள் மாநாடு : “ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?" - செல்வப்பெருந்தகை ஆவேசம்!

இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு :

தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி கடந்த மூன்றாண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அரசமைப்புச் சட்டப்படி மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும். ஆனால், அவற்றுக்கு விரோதமாக தமிழ்நாட்டில் உள்ள 16 பல்கலைக்கழங்களில் தன்னை வேந்தராக கருதிக் கொண்டு துணை வேந்தர்களுக்கான தேடுதல் குழுவை அமைத்து, துணை வேந்தர்களை நியமித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக நிர்வாகத்தையும், அதற்கான முழு நிதிச் சுமையையும் ஏற்று செயல்படுகிற தமிழ்நாடு அரசின் துணை வேந்தர்களை நியமிக்கிற அதிகாரத்தை ஆளுநர் பறித்துக் கொண்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அளவிற்கு அற்புதமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டவிரோதம் என்று கூறியதோடு, முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் பிரிவு 142 இல் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் அதிரடியாக ஒப்புதல் அளித்தனர். இதன்மூலம் கூட்டாட்சியின் செயல்பாடுகளுக்கு வலிமை சேர்த்தனர்.

இத்தீர்ப்பின்படி அமைச்சரவையின் அறிவுரையின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும். தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் அவருக்கு கிடையாது என மிகத் தெளிவாக தீர்ப்பை கூறிய பிறகும், தமிழக ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டு செயல்படுவதாக தெரியவில்லை.

துணை வேந்தர்கள் மாநாடு : “ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?" - செல்வப்பெருந்தகை ஆவேசம்!

இந்த தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதை அனைவரும் அறிவார்கள். ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, தலைநகர் தில்லி சென்று, அவரை சந்தித்த பிறகு வருகிற ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் துணை வேந்தர்கள் மாநாடு மூன்று நாட்கள் நீலகிரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானதோடு, இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இயற்றிய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு கூட்டுச் சதியை அரங்கேற்றியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாக அவமதிக்கிற செயலாகும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருக்கிற வகையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து அது சட்டமாக நிறைவேறி தமிழக முதலமைச்சர் வேந்தராக பொறுப்பேற்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் உயர்கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டார்கள். இந்த மாநாட்டிற்கு போட்டியாக தமிழக ஆளுநர் அதே துணை வேந்தர்கள், பதிவாளர்களை அழைத்து மாநாடு கூட்டுவதற்கு ஆளுநருக்கு யார் அதிகாரம் அளித்தார்கள்? அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழ்நாடு முதல்வரே வேந்தரான பிறகு, இந்த மாநாட்டை கூட்டுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது ? தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள மறுத்த இந்தி திணிப்பை நோக்கமாகக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை பரப்ப வேண்டுமென்ற நோக்கத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, பல்கலைக்கழக துணை வேந்தர்களின் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.

ஆர்.என். ரவி கூட்டியிருக்கிற மாநாடு ஒரு சட்டவிரோதமான மாநாடாகும். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்ததோடு, ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். ஆளுநரின் இத்தகைய சட்டவிரோத செயலுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் துணை போயிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிற வகையில் வருகிற ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரியில் நடைபெறுவதை எதிர்த்தும், இம்மாநாட்டை கூட்டுகிற ஆளுநர் ஆர்.என். ரவியின் சட்டவிரோதப் போக்கை கண்டிக்கிற வகையிலும் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.கணேஷ் அவர்கள் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக ஆளுநர் ஆர்.என். ரவியின் தமிழ்நாட்டு நலன்களுக்கு விரோதமாக கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சீரழிக்கும் செயல்களை கண்டிக்கிற வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் காங்கிரஸ் பேரியக்க கொடிகளை கரங்களில் ஏந்தி பங்கேற்று தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories