பங்குனி மாத பௌர்ணமி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு 530 சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட மொத்தம் 877 பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டதாகவும், இதில் 52,615 பயணிகள் பயணம் மேற்கொண்டனர் என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) கூறியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "12.04.2025 அன்று சனிக்கிழமை பங்குனி மாத பௌர்ணமி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை ஒட்டிய சித்திரை மாதம் துவக்கத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு பயணிகள் பெருமளவு அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர். இதனால் சென்னை கிளாம்பாக்கம். மாதவரம், கோயம்பேடு மற்றும் அடையாறு பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலை செல்ல பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
பயணிகள் சிரமமின்றி தங்கள் பயணத்தை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிட், விழுப்புரம் கோட்டம் சார்பாக இந்த நான்கு பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வழக்கமாக இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 504 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட்டன. 244
மேலும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 35 சிறப்பு பேருந்துகளும், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 82 சிறப்பு பேருந்துகளும், மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 12 சிறப்பு பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டன.
குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட். விழுப்புரம் கோட்டம். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் வழக்கமாக இயக்ககூடிய 164 பேருந்துகளுடன் சிறப்பு இயக்க பேருந்துகள் 530 சேர்த்து மொத்தம் 694 பேருந்துகள் திருவண்ணாமலைக்கு மட்டும் இயக்கப்பட்டன. ஆகமொத்தம் 877 பேருந்துகளில் 52615 பயணிகள் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொண்டனர். அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய கண்காணிப்பு உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பயணிகள் எவ்வித சிரமம் இன்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யப்பட்டது"என்று கூறப்பட்டுள்ளது.