2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்தபோது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.410 ஆக இருந்தது. பின்னர் இது படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.820க்கு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு ரூ.918க்கு உயர்ந்தது.
எதிர்க்கட்சிகள் மற்றும் குடும்ப தலைவிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்ததை அடுத்து, மகளிர் தினத்தன்று ரூ.100 குறைத்து, பெண்களுக்கான அரசு என பா.ஜ.க அரசு நாடகமாடியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.43 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்டுவதற்காக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது" என விளக்கம் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?.உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, Sadist BJP அரசுக்கு மிகவும் பொருந்தும்!
உலக அளவில் Crude Oil விலை சரிந்துள்ள நிலையில், Petrol, Diesel விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!?. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் GasCyclinder விலை உயர்வு அமைந்திருக்கிறது.
மக்களே… அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது. ஒன்றிய BJP அரசே... தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக” என தெரிவித்துள்ளார்.