2025-26-ஆம் நிதியாண்டுக்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சியின் வரி விதிப்பு மற்றும் நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து, மாநகராட்சி மேயர் பிரியா புதிய திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.
அந்த அறிவிப்புகளில் முக்கியமானவை வருமாறு :
* 10.12 வகுப்பு வரை படிக்கும் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கணினியில் , அறிவியல், வரலாறு புவியல் கற்று தரும் ஆசிரியர்கள் மூலமாக போட்டி தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி வழங்கப்படும். இதற்கு ஒரு பள்ளிக்கு 15000-150000 நிதி ஒதுக்கப்படும்.
* பெருநகர சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் :
50 சென்னை நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப் பந்து மற்றும் எறி பந்து விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி. பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்
* மாணவ மாணவியர்கள் அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்காக 'வளமிகு ஆசிரியர் குழு" அமைத்தல் :
சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் பள்ளிகளைக் கண்டறிந்து, அப்பள்ளிகளில் விருப்பத்துடன் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைக் கொண்டு. மண்டலம் வாரியாக வளமிகு ஆசிரியர் குழு" (Pooling of Resource Teachers) அமைக்கப்படும். அக்குழுவின் ஆசிரியர்களைக் கொண்டு, அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
* மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்துதல் :
பெருநகர சென்னை மாநகராட்சியின் 69 நடுநிலைப் பள்ளிகள். 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், மாணவ மாணவியர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி, பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவும். கோப்பைகளை வெல்லவும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து தயார்படுத்தும் விதமாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 15,000/-உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 18,000/- என்ற வகையில், மொத்தம் 141 உடற்கல்வி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்டையில் பணியமர்த்தப்படுவார்கள்.
* 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்தல் :
சென்னை பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் அவர்தம் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளவும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும்
* விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியருக்கு பயணப்படி மற்றும் உணவுப்படி வழங்குதல் :
மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500/- வீதம் வழங்கப்படும்
* மகளிருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி இலவசமாக வழங்குதல் :
மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில், இதற்கென உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, (Standard Operating Procedure) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினிப் பயிற்சிகள் (Tally) இலவசமாக வழங்கப்படும்
* வளர்ப்புப்பிராணிகளுக்கான மருத்துவமனை ஏற்படுத்துதல் :
மண்டலம் 1,2,3,4, 5, 7, 8, 11, 13 மற்றும் 14 ஆகிய பத்து மண்டலங்களில் தற்போது புதியதாக கட்டப்பட்டு வரும் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் கூடுதலாக வளர்ப்புப் பிராணிகளுக்கான மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும்.
* ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதியோர்களுக்கு தனி நலப் பிரிவு அமைத்தல் :
முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதற்கட்டமாக, வடக்கு வட்டாரத்தில் பி.ஆர்.என் கார்டன், மத்திய வட்டாரத்தில் செம்பியம் மற்றும் தெற்கு வட்டாரத்தில் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா மையத்திற்கு ரூபாய் 30.00 இலட்சம் வீதம் 3 மையத்திற்கு முதியோர்களுக்கென தனிப் பிரிவு புதியதாக தொடங்கப்படும். இப்பிரிவில் ஒரு மருத்துவ ஆலோசகர். ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் பணியாற்றுவார்கள்.
* பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரிக்க ஆவண காப்பகம் மேம்படுத்துதல் :
தலைமையகம் மற்றும் 15 மண்டலங்களில் உள்ள பிறப்பு மற்றும் இறப்புப் பதிவேடுகள் மற்றும் படிவங்களை ஆவணப்படுத்தி, பாதுகாத்து பராமரிக்க, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளுடன் பிறப்பு மற்றும் இறப்பு பிரிவுகள் ஆவண காப்பகமாக மேம்படுத்தபடுத்தப்படும்.
* மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உணவு விற்பனை மண்டலங்கள் (Food Court) அமைத்தல் :
மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்களுக்கு, அடிப்படை வசதிகளுடன் சுகாதாரமான சூழ்நிலை கொண்ட உணவு விற்பனை மண்டலங்கள் (Food Court) ஏற்படுத்திடும் வகையில், முதற்கட்டமாக வரும் நிதி ஆண்டில் இரண்டு இடங்களில் செயல்படுத்தப்படும்.
* பூங்காக்களில் தரமான மற்றும் சுகாதாரமான உணவு மையம் துவங்குதல் :
பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களுக்கு நடைபயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காக வரும் பொதுமக்கள், தங்கள் களைப்பினைப் போக்கி புத்துணர்வு பெறும் வகையில், பூங்காக்களில் சுய உதவிக் குழுக்களால் தரமான மற்றும் சுகாதாரமான உணவு மையங்கள் அமைக்கப்படும்.
* பெருநகர சென்னை மாநகராட்சியை அழகுறச் செய்யும் வகையில் மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் அமைத்தல் :
பெருநகர சென்னை மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் 10 இடங்களைத் தேர்வு செய்து, அங்கு மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீருற்றுகள் அமைக்கப்படும்.
* வட சென்னையில் புதியதாக 2 இறகுப் பந்து உள்விளையாட்டரங்கம் அமைத்தல் :
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வடசென்னைப் பகுதி வாழ் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் மண்டலம்-2, வார்டு 16ல் ஆண்டார் குப்பம் ஏலந்தனூர். சடையன்குப்பம்-பர்மா நகர் ஆகிய இரண்டு இடங்களில் புதியதாக இறகுப் பந்து உள்விளையாட்டரங்கம் அமைக்கப்படும்.
* பெற்றோருடன் வரும் சிறப்பு குழந்தைகள் உபயோகிக்கும் வகையில் சிறப்பம்சம் கொண்ட பூங்காக்களாக மேம்படுத்துதல் :
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கீழ்காணும் 10 பெரிய பூங்காக்களைத் தேர்வு செய்து அனைத்து வகையான பார்வையாளர்களும், முக்கியமாக பெற்றோருடன் வரும் சிறப்பு குழந்தைகள் உபயோகிக்கும் வகையிலான உபகரணங்கள் உள்ளடக்கிய சிறப்பு அம்சங்கள் கொண்ட பூங்காக்களாக மேம்படுத்தப்படும்
=> கடந்தாண்டு சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடந்தாண்டு 4464 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த தொகை தற்போது 5145 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது அந்த வகையில் கடந்த ஆண்டை காட்டிலும் 681 கோடி ரூபாய் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு உயர்வு. கடந்தாண்டு 262 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை இந்த ஆண்டு 68 கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.