தமிழ்நாடு

பாஜக நிர்வாகி ரௌடி படப்பை குணா மீது மீண்டும் பாய்ந்தது குண்டாஸ்... காரணம் என்ன?

காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரௌடியும், பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவருமான படப்பை குணா மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

பாஜக நிர்வாகி ரௌடி படப்பை குணா மீது மீண்டும் பாய்ந்தது குண்டாஸ்... காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரௌடி படப்பை குணா என்கிற என். குணசேகரன். கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் துணையுடன் அதிமுக பிரமுகராகவும் தொழில் நிறுவனங்களை மிரட்டி தொழிலதிபராகவும் வலம் வந்தார்

இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளது . இந்த 48 வழக்கில் 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும்.

பாஜக நிர்வாகி ரௌடி படப்பை குணா மீது மீண்டும் பாய்ந்தது குண்டாஸ்... காரணம் என்ன?

கடந்த 2022 ஆம் ஆண்டு காவல்துறையினர் தீவிரமாக படப்பை குணாவை தேடி வந்தனர். தன்னை காவல்துறையினர் கைது அல்லது எக்ன்கவுண்டர் செய்து விடுவார்கள் என தெரிந்துகொண்ட படப்பை குணா, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதைத்தொடர்ந்து படப்பை குணா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழக்குகளில் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக படப்பை குணா வெளியில் இருந்து வந்தார்.

இதனிடையே கடந்த 2023-ம் ஆண்டு ரௌடிகளின் சரணாலயமான பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார் படப்பை குணா. அப்படி பாஜகவில் இணைந்த ரௌடி குணாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக பொறுப்பு வழங்கினார் பாஜக தலைவர் அண்ணாமலை.

பாஜக நிர்வாகி ரௌடி படப்பை குணா மீது மீண்டும் பாய்ந்தது குண்டாஸ்... காரணம் என்ன?

இந்த நிலையில் மதுரமங்கலம் கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரை குணா மிரட்டியதோடு, அவரை தாக்கியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில், குணா மீது சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் அடிப்படையில் ரௌடி படப்பை குணா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த சூழலில், தற்போது பாஜகவை சேர்ந்த ரௌடி குணா மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

ஏற்கனவே 4 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள படப்பை குணா தற்போது 5-வது முறையாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories