பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா நேற்று (பிப்.17) நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது வருமாறு :
பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றின் சார்பாக ரூ.1,893 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய வாகனங்களை பயன்பாட்டிற்குத் தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். அது மட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்குவதிலும் கூடுதல் மகிழ்ச்சி அடைகின்றேன்.
கடந்த 50 ஆண்டுகளில் சென்னை அடைந்துள்ள அந்த வளர்ச்சியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சென்னை அந்த அளவுக்கு மிகப் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது. வளர்ச்சி அடைந்த சென்னையின் வரலாற்றை கழக அரசின் பங்களிப்பை தவிர்த்துவிட்டு நாம் எழுத முடியாது.
சென்னை மாநகராட்சி மீது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு எந்த அளவுக்கு பாசமும், நெருக்கமும் இருந்தது என்பதற்கு ஒரு சம்பவத்தை இங்கே நினைவுபடுத்த விரும்புகின்றேன். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டார்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையிலேயே பெற்ற பரிசுகளில் எதை மிகப்பெருமையாகக் கருதி மகிழ்வீர்கள் என்பதுதான் பத்திரிக்கையாளர்கள் கலைஞர் அவர்களிடம் கேட்ட கேள்வி.
அதற்கு கலைஞர் அவர்கள் சொன்ன பதில், “1959 ல சென்னை மாநகராட்சி தேர்தலில் கழகம் எப்படியும் வெற்றி பெறுமென பேரறிஞர் அண்ணா அவர்களிடம் வாக்குறுதி அளித்து அந்த வெற்றியும் பெற்று, முதன் முதலில் தி.மு.க மேயர் பதவிக்கு வருவதற்கு பணியாற்றியதற்காக, சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் என்னை பாராட்டி ஒரு மோதிரம் அணிவித்தார்கள்.
அந்தப் பரிசை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியில் எனக்கு கண்ணீர் வரும். அந்தக் கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பாராட்டி பேசியதை என் வாழ்நாள் முழுக்க நான் மறக்க மாட்டேன் என்று கலைஞர் அவர்கள் உணர்வுபூர்வமாக சொல்லியிருப்பார்கள். அந்த அளவுக்கு கலைஞர் அவர்களின் பொதுவாழ்வில் சென்னை மாநகராட்சிக்கு தனி இடம் உண்டு.
அதனால் தான், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சி காலத்தில், சென்னையின் கட்டமைப்பை மேம்படுத்த ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சென்னை மாநகராட்சியின் மேயராக பணியாற்றிய போதுதான் சிங்காரச் சென்னை திட்டத்தை செயல்படுத்தினார்கள். அதன் மூலம், சென்னை மாநகராட்சியை உலகெங்கும் உள்ள மாநகராட்சிகளுக்கு இணையாக வளர்த்தெடுத்தார்கள்.
இன்றைக்கு சென்னையில் இருக்கக்கூடிய பல்வேறு மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டம், போக்குவரத்து கட்டமைப்பு, குடிநீர் திட்டங்கள், இவை எல்லாமே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சென்னையின் மேயராக இருந்த போது செயல்படுத்தப்பட்டவை. அன்றைக்கு மேயராக சென்னை எப்படியெல்லாம் வளர வேண்டும் என்று உழைத்தாரோ, திட்டங்களை தந்தாரோ, அதே உணர்வோடு தான் இன்றைக்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சென்னையின் வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தி வருகின்றார்கள்.
சென்னையின் வளர்ச்சி சீராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இன்றைக்கு வட சென்னை வளர்ச்சி திட்டம் எனும் மகத்தான திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி இருக்கிறார்கள். நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்களால் தமிழ்நாடு எப்படி இந்திய ஒன்றியத்தில் உள்ள அத்தனை மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கின்றதோ, அதேபோல இந்திய மாநகராட்சிகள் அனைத்திற்கும் சென்னை மாநகராட்சி ஒரு முன்மாதிரி மாநகராட்சியாக, எடுத்துக்காட்டு மாநகராட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தான் சிங்காரச்சென்னை 2.O, நமக்கு நாமே திட்டங்கள் மூலமாக இன்றைக்கு மட்டும் சுமார் 2 ஆயிரம் கோடி அளவுக்கான திட்டங்களை இந்த விழாவின் மூலம் செயல்படுத்தி இருக்கின்றோம். பள்ளிக் கட்டடங்கள், விளையாட்டுத்திடல்கள், பூங்காக்கள், கழிவுநீர் பாதைகள், குடிநீர் தேக்க தொட்டிகள், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் இப்படி ஏராளமான திட்டங்களை இன்றைக்கு தந்திருக்கின்றோம்.
இங்கே நிறைய பள்ளி மாணவர்கள் வருகை தந்திருக்கிறீர்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் கல்விக்கு எப்படியெல்லாம் துணை நிற்க முடியும் என்று அதற்கான திட்டங்களை இந்த 4 ஆண்டுகளில் தொடர்ச்சியாக செயல்படுத்தி இருக்கிறார்கள்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமாக இருந்தாலும் சரி, அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி சேருகின்ற பெண் குழந்தைகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் கல்வி உதவித்தொகையாக இருந்தாலும் சரி, அதேபோல் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகின்ற தமிழ்ப்புதல்வன் திட்டமாக இருந்தாலும் சரி, பல்வேறு திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மாணவச் செல்வங்கள் உங்களுக்காக செயல்படுத்தியிருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் நான் முதல்வன் திட்டம், உயர்வுக்குப் படி, இல்லம் தேடி கல்வி, வானவில் மன்றம், எண்ணும் எழுத்தும், கலை இலக்கியப் போட்டிகள், இப்படி இந்தியாவிலேயே கல்விக்கு என்று மாணவர்களுக்கு திட்டங்களை தருகின்ற ஒரே முதலமைச்சர் நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர் அவர்கள் தான்.
அதனால் தான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், எந்த பகுதிக்கு சென்றாலும், அங்குள்ள மாணவ, மாணவிகள் மிகுந்த அன்போது நம்முடைய முதலமைச்சர் அவர்களை “அப்பா அப்பா” என்று உரிமையோடு அழைக்கின்றார்கள்.
அதுபற்றிக் கூட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கூட நேற்று முன்தினம் கூறியிருக்கின்றார்கள். “தமிழ்நாட்டு மாணவர்கள் என்னை அப்பா, அப்பா என்று சொல்ல, சொல்ல எனக்கு இன்னும் பொறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
இன்னும் அவர்களுக்கு நான் நிறைய திட்டங்களை தர வேண்டும் என்ற உத்வேகம் உருவாகியுள்ளது என்று சொல்லியிருக்கின்றார்கள். ஆகவே, தந்தையாக இருந்து உங்களுக்கான திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து செயல்படுத்துவார்கள். உங்கள் வீட்டில் ஒரு அண்ணனாக நானும் உங்களுக்கு என்றும் துணை நிற்பேன் என்று கூறிக்கொண்டு, இந்த இனிய விழாவிலே உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் என்பதையும் கூறிக்கொண்டு, சென்னை மாநகராட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான திட்டங்களை நம்முடைய அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதை இந்த நேரத்தில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்களுக்கும், துறையின் அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியும் தெரிவித்து விடைபெறுகிறேன் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.