”எந்த மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால், மருத்துவர்கள் பற்றாக்குறையால் இறப்புகள் ஏற்பட்டது என்ற புள்ளிவிவரத்தோடு தகவலை அண்ணாமலை தெரிவித்தால் அவரோடு நேருக்கு நேர் வாதிட நான் தயாராக இருக்கிறேன்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,” என்னுடைய ஒவ்வொரு நிமிட செயல்பாடுகளும் தினந்தோறும் என்னுடைய சமூக வளைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறேன். திரு.அண்ணாமலை அவர்கள் பொருந்தாத காரணங்களை தினந்தோறும் கூறி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நல்ல மனிதர் கஞ்சா கருப்புவிற்கு நல்லது செய்ய முடியவில்லை என்று கூறினார். ஆனால் நேற்றைக்கு கஞ்சா கருப்பு அவர்கள் பொது நிகழ்ச்சியில் என்னை நேரில் சந்தித்து, தவறான தகவலை கூறியதற்காக வருத்தப்படுகிறேன். இந்த அரசு சரியாக அனைத்து விஷயங்களையும் கையாண்டு வருகிறது என்றும், தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கு அண்ணாமலை என்ன கூறப்போகிறார் என்று தெரியவில்லை. மேலும், அரசு மருத்துவமனைகளில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறிவருகிறார்.
தற்போது அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை அளிக்கும் தரம் உயர்த்துள்ளதால், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அவர் தமிழ்நாடு அரசு நடத்தும் அரசு மருத்துவமனைகளை மட்டுமே குறிப்பிட்டு இந்த தகவலை கூறிவருகிறார். ஒன்றிய அரசு நடத்தும் அரசு மருத்துவமனைகளில் இறப்புகள் இல்லாத நிலை உள்ளதா? எல்லோரும் மார்கண்டேயர்களாக வாழ வைக்கிறார்களா? 90 வயது கடந்தவர்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலனளிக்காமல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஒரு சிலர் சிகிச்சை பலனளிக்காமல் இறப்பது என்பது இயல்பு. இதற்காக அரசு மருத்துவமனைகளில் இறப்புகள் அதிகரித்து வருகிறது என்று பொதுவான குற்றச்சாட்டை ஏற்க முடியாது. எந்த மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால், மருத்துவர்கள் பற்றாக்குறையால் இறப்புகள் ஏற்பட்டது என்ற புள்ளிவிவரத்தோடு தகவலை அவர் தெரிவித்தால் அவரோடு நேருக்கு நேர் வாதிட நான் தயாராக இருக்கிறேன். அரசு மருத்துவ சேவையின் தரத்தை மக்களிடத்தில் குறைத்து மதிப்பிடுகிற வகையிலான இதுபோன்ற அறிக்கைகள் பெரிய அளவிலான அரசு மருத்துவ நிர்வாகத்தை பாதிக்கும் என்பதை உணராமல் எப்படி அவர் சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை.
மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன்னால் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு செய்தி குறித்து கூறியிருக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் அந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஒரு அறிக்கையை தந்திருக்கிறார். அவ்வறிக்கையின்படி திருவேங்கடம் தாலுகா மலைப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் நான்கு வயதுக் குழந்தையான பொன்மாறன் என்பவர் கழுத்தில் உள்ள நிணநீர்க்கட்டி (Lymph nodes) கடந்த ஒருமாதமாக சங்கரன்கோவில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தக் கட்டி சரியாக குணமடையாததால் பரிசோதனைக்காவும், மேல் சிகிச்சைக்காகவும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
அந்தக் குழந்தை 10.02.2025 திங்கள் அன்று உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அந்தக் கட்டியை குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பரிசோதித்த போது அது லிம்போமா என்னும் புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது என எடுத்துரைக்கப்பட்டது. அதற்காக அல்ட்ராசவுண்ட் பரிசோதனை வயிற்றுப் பகுதியில் செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில் வயிற்றின் உள்பகுதியிலும் நிணநீர்க்கட்டிகள் (Lymph nodes) நிறைய இருப்பது அறியப்பட்டது. எனவே நோயின் பரவலை அறிவதற்காகவும், மயக்க மருந்து சிகிச்சைக்காகவும் CT contrast கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிக்கு செய்யப்பட்டது. Contrast மருந்து (Low Osmolar Non Ionic Iohexol) செலுத்துவதன் மூலம் திசுக்கள் மற்றும் நோய் கட்டிகளுக்கு உள்ள வேறுபாடு நன்றாக தெரியும். அதனால் contrast 14 ml (Weight-14kg (1ml/kg) B.Sc Radiodiagnosis Imaging Technology Intern மூலமாக தொழில்நுட்ப வல்லுநர் (TNMSC - Employee) மற்றும் மருத்துவர் முன்னிலையில் செலுத்தப்பட்டது.
ஆனால் எதிர்பாராத விதமாக குழந்தைக்கு கான்ட்ராஸ்ட் மருந்து போடும்போது ஒவ்வாமை (Anaphylaxis) ஏற்பட்டது. அதனால் console-ல் இருந்த மருத்துவரின் அறிவுரைப்படி உடனடியாக தீவிர சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டான். துவிர சிகிச்சைப் பிரிவில் மயக்கவியல் நிபுணர், இதய நோய் வல்லுநர், மூளை நரம்பியல் நிபுணர் ஆகியோரின் அறிவுரைகள் பெறப்பட்டு அதன்படியே சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தப் பின்னரும் குழந்தையானது நோயின் தீவிரத்தால் 12.20.2025 அன்று இரவு 9.10 மணியளவில் மரணடைந்தார்.
இந்த நிலையில் மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனையில் குழந்தை இறந்திருக்கிறது என்கின்ற மிகப்பெரிய வடிகட்டிய பொய்யை ஒரு கட்சியின் மாநிலத்தலைவர் சொல்வது என்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை. யாராவது ஒரு மருத்துவர்களையாவது கேட்டு தெரிந்துகொண்டு இதுபோன்ற அறிக்கைகளை அவர் வெளியிட்டால் நன்றாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.