முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க அழைப்பு விடுத்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான்,ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அரசு முறைபயணம் மேற்கொண்டார். இங்கு பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ரூ.7375 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
உலகளாவிய திறன் மையங்கள், லெதர் அல்லாத காலணி, உணவு பத்தப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்லூர் மாவட்டங்களில் அமைய உள்ள தொழிற்சாலைகளின் முதலீடுகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த அனுமதி மூலம் சுமார் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.