திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண - சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி (special Jamboree) விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் இலங்கை, மலேஷியா, சவுதி அரேபியா, நேபால், மற்றும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில பாரத சாரண - சாரணியர் கம்பீரமாக அணி வகுத்து வந்தனர். இந்த அணி வகுப்பு மரியாதையை துணை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”2000 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் 50 ஆவது ஆண்டு விழா நடந்தது. இப்போது நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பாரத சாரண - சாரணியர் வைர விழா நடைபெறுகிறது.அதுவும் கலைஞர் நூற்றாண்டில் இந்த விழா நடப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை.
இந்நிகழ்விற்காக ரூ.39 கோடியை அரசு ஒதுக்கியது. கடந்த 3 மாதங்களாக நமது அமைச்சர் அன்பில் மகேஷ் இந்நிகழ்ச்சிக்கான பணிகளை செய்து வருகிறார். இப்போது ஸ்கவுட் உடையில் அமைச்சர் வந்தார். இந்த நிகழ்ச்சியோடு அவர் ஒன்றி போய்விட்டார்.
தமிழ்நாடு கலாச்சார பாரம்பரியங்களை தெரிந்து கொள்ள உங்களுக்கு இந்த நிகழ்ச்சி உதவியாக அமையும். அதேபோல் மற்ற மாநில கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்ள உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஜாதி மதத்தை கடந்து இந்தியாவின் குடிமகன் என்று அனைவரும் ஒரே இடத்தில் கூடி உள்ளீர்கள். மனிதர்கள் வேறுபாடு பார்க்காமல், ஒன்று கூடி வாழ வேண்டும் என்பதுதான் கலைஞர் அவர்களின் குறிக்கோள். இதற்கு சிறந்த உதாரணம் பெரியார் சமத்துவபுரம் திட்டம்.” என தெரிவித்துள்ளார்.