தமிழ்நாட்டில் அதிமுகவும் பாஜகவும் முன்பு கூட்டணி வைத்திருந்த நிலையில், கூட்டணியில் இருக்கும்போதே நேரடியாக ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் மாநிலமே அறிந்த ஒன்று. இதையடுத்து திடீரென்று அதிமுகவுக்கு சொரணை வந்து, பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று அறிவித்ததுடன், கடந்த தேர்தல்களில் கூட்டணியின்றி போட்டியிட்டது அதிமுக.
எனினும் எடப்பாடி பழனிசாமி பாஜக தலைமைக்கு மறைமுகமாக அடிமையாக செயல்பட்டு வருவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். அதைக்கேற்றாற்போல் ஒன்றிய அரசை கண்டித்து இதுவரை எந்தவொரு அறிக்கையையும் எடப்பாடி பழனிசாமி வெளியிடவில்லை. இதனால் அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணியில் இருப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகிறது.
இருப்பினும் தற்போது வரை தனது கள்ளக்கூட்டணியை அதிமுக கைவிடாமல் இரகசியமாக பராமரித்து வருகிறது. இந்த சூழலில் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையை, அப்படியே அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளது தற்போது, அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி மீண்டும் அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்ததோடு, கிண்டலும் அடித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :
*ஒரு பொம்மலாட்டம் நடக்குது!*
’’அரசியல்ல வட்ட செயலாளர் பதவி மட்டும்தான் இருக்கு. சதுர செயலாளர் பதவியெல்லாம் கிடையவே கிடையாது’’ என டயலாக் பேசும் வட்ட செயலாளர் வண்டு முருகன் காமெடியை போல, நிஜ அரசியலில் கள்ளக் கூட்டணி என்ற சொல்லை ஏற்படுத்தித் தந்த பெருமைக்குரியவர்(?) எடப்பாடி பழனிசாமி!
அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணியை நொடிக்கொரு முறை இந்த நாட்டுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். புதுக்கோட்டை திருமயத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி மரணம் தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அப்பட்டமாக ஒரே வரிகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுச் சந்தி சிரிக்க வைத்திருக்கிறார்கள். அண்ணாமலை நேற்று போட்ட பதிவை அப்படியே வழிமொழிந்து, ’பசையே’ இல்லாமல், காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
பத்துவரி பதிவைக் கூட சொந்தமாக எழுதத் தைரியமில்லாமல், மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை வெளியிட்டு வந்த பழனிசாமி, டெல்லியிலிருந்து பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு எழுதிக்கொடுத்த பதிவை அப்படியே நகல் எடுத்து வெளியிடும் அளவிற்கு பாஜகவின் அடிமட்ட அடிமையாகவே மாறிவிட்டார் பழனிசாமி. இரண்டு கட்சிகளும் ஒரே மாதிரியான அறிக்கை விடும் வழக்கத்தை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிமுக செய்ததை சமூக வலைத்தளம் முழுவதும் கேலிப் பொருளாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பழனிசாமியின் நெருங்கிய ஈரோட்டு உறவினர் இடங்களில் மோடி அரசின் வருமான வரித்துறை சோதனை நடத்தி ஆவணங்களை அள்ளிச் சென்ற பிறகு, பழனிசாமிக்கு ’பய’ காய்ச்சல் வந்துவிட்டதா? டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் முகவரியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையிலேயே அதிமுகவின் அலுவலகத்தை அமைத்துக் கொள்ளலாம் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் பழனிசாமி வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ, இரட்டை இலை என பழனிசாமி தினமும் அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதற்குப் பதில் சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையை டெல்லிக்கோ அல்லது சென்னை தியாகராயர் நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கமலாலயம் அலுவலகத்திலோ மாற்றிக் கொள்ளலாம்.
அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணி பிரதமர் மோடி நடத்தும் அப்பட்டமான பொம்மலாட்ட நாடகம். அச்சுபிசகாமல் ஆடும் பொம்மை பழனிசாமி. “ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்பப் புதுமையாக இருக்குது. நாலுபேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே’’ என்ற திரைப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது!